உள்துறை அமைச்சகம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை மீறியதாக புகார்கள்
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும்; விதிமுறைகளை அமல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளூர் அதிகாரிகள் எடுக்க வேண்டும்; மத்திய உள்துறை அமைச்சகம்
Posted On:
21 MAY 2020 7:44PM by PIB Chennai
கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அமைச்சகத்தின் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதனை உறுதி செய்ய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அனைத்து அதிகாரிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, பல்வேறு மண்டலங்களை வரையறுக்கவும், நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், சில இடங்களில் அவற்றைக் கட்டுப்பாடுகளுடன் தளர்த்தவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, கட்டுப்பாட்டு மண்டலங்களை முறையாக வரையறை செய்து, இந்த மண்டலங்களுக்குள் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு முக்கியத் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சக தகவல் வலியுறுத்துகிறது. இதில், ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை உறுதி செய்வதாலும், தொற்று பரவும் அபாயம் கட்டுப்படுத்தப்படுவதாலும், இரவு நேர ஊரடங்கைக் கட்டாயம் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என்று அந்தக் கடிதம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த உத்தரவுகள் உள்ளூர் அதிகாரிகளால் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். கொவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவது அனைத்து மாவட்ட, உள்ளூர் அதிகாரிகளின் கடமை என்று அது உறுதிபடத் தெரிவித்துள்ளது. மக்கள் முகக்கவசங்களை அணிந்துள்ளனரா, பணியிடங்கள், போக்குவரத்து, பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா, சுகாதாரம், கிருமி நீக்கம் ஆகியவை பேணப்படுகிறதா என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20DO%2021.05.2020%20Violations%20of%20MHA%20guidelines%20and%20ensure%20proper%20implementation%20of%20the%20guidelines.pdf
*****
(Release ID: 1626019)
Visitor Counter : 224