சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி சிகிச்சைகள்

Posted On: 21 MAY 2020 6:16PM by PIB Chennai

மத்திய அரசின் முன்னணி மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY), இன்று ஒரு கோடி சிகிச்சையை எட்டியுள்ளது. இந்த மைல் கல்லைக் குறிப்பிட, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், ஆரோக்ய தாரா என்ற தொடர் இணைய கருத்தரங்குகளின் முதல் பதிப்பை இன்று தொடங்கி வைத்தார். இந்த இணைய கருத்தரங்குக்கு ‘‘ஆயுஷ்மான் பாரத்: 1 கோடி சிகிச்சைகள் மற்றும் அதற்கு அப்பால்’’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த இணையக் கருத்தரங்கில் சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பேவும் கலந்து கொண்டார்.

ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார ஆணையகத்தின் (NHA) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இந்து பூஷன் விளக்கினார். இந்த இணைய கருத்தரங்கு, தேசிய சுகாதார ஆணையகத்தின், அனைத்து அதிகாரப்பூர்வ சமூக இணையதளங்களில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், ‘‘இத்திட்டம் தொடங்கிய 2 ஆண்டுகளில், நாட்டின் 1 கோடி ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மைல்கல் சாதனை. 21,565 பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக, இந்த சிகிச்சைகளுக்கு ரூ.13,412 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும், சுகாதார சவால்களை எதிர்கொள்ள மனிதாபிமான அணுகுமுறையுடன், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இத்திட்டம், ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சை பெறும் மருத்துவ பாதுகாப்பை வழங்குகிறது. நாட்டின் 10.74 கோடி ஏழைகளுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இதன் இலக்கு’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர் ஹர்ஷ் வர்தன், ‘ஆஸ்க் ஆயுஷ்மான்’( ஆயுஷ்மானை கேளுங்கள்) என்ற வாட்ஸ்அப் செயலி மூலமாக தகவல் பரிமாறும் வசதியைத் தொடங்கி வைத்தார். இதில் ஆயுஷ்மான் பாரத் திட்ட்த்தின் பயன்கள், அம்சங்கள், எலக்ட்ரானிக் அடையாள அட்டை பெறும் முறை, அருகில் உள்ள இணைப்பு மருத்துவமனைகள் பற்றி 24 மணி நேரமும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல் பெறலாம்.

ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளை பயனாளிகள் மதிப்பீடு செய்யும் ’மருத்துவமனை மதிப்பீட்டுப் பலகை’ (“Hospital Ranking Dashboard”) என்ற வசதியையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மதிப்பீடு, சுகாதார நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்த தேசிய சுகாதார ஆணையகத்துக்கு உதவியாக இருக்கும்.

ஒரு கோடி சிகிச்சை மருத்துவ அனுமதிகளை வெளிப்படுத்தும் விதத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளியின் இ-அடையாள அட்டையின் சிறப்பு பதிப்பையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்.  இது தவிர ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இந்தி இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டது.     



(Release ID: 1626012) Visitor Counter : 305