உள்துறை அமைச்சகம்

அதி தீவிர புயல் ‘உம்.பானு’க்கான தயார்நிலையை ஆய்வு செய்ய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு(NCMC) மீண்டும் கூடியது

Posted On: 19 MAY 2020 1:55PM by PIB Chennai

உம்பான் புயலை எதிர்கொள்வதற்கு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/ஏஜென்சிகளின் தயார் நிலையை ஆய்வு செய்ய தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின்(NCMC) மூன்றாவது கூட்டத்துக்கு அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமை தாங்கினார்.

அதி தீவிர புயல் உம்பான், மேற்கு வங்க கடலோர பகுதியை மே 20ம் தேதி மதியம்/மாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அப்போது, பலத்த காற்று மணிக்கு 155-185 கி.மீ வேகம் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் கன மழையும், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலையும் எழும். இதனால் மேற்குவங்கத்தின் கிழக்கு மெதினிப்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பரகனாஸ், ஹவுரா, ஹூக்ளி மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தை கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று தாக்கிய ‘புல்புல்’ புயலைவிட, உம்பான் புயலின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவின் பாலசூர், ஜஜ்பூர், பத்ரக், கேந்திரபடா, ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த புயல் கனமழை, சூறாவளி காற்று மற்றும் ராட்சத அலையை ஏற்படுத்தும்.

ஒடிசா தலைமைச் செயலாளர், மேற்குவங்க கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் தாங்கள் எடுத்துள்ள தயார்நிலை நடவடிக்கைகளை தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவில் தெரிவித்தனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் கூறினர். உணவு தானியங்கள் கையிருப்பு, குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மின்சாரம், தொலை தொடர்பு சேவைகளை சீரமைப்பதற்கான குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு அமைப்புகளின் தயார்நிலையை ஆய்வு செய்த அமைச்சரவை செயலாளர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது, உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசிப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைத்திருப்பது போன்ற பணிகளை சரியான நேரத்த்தில் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். சாலைகளை சரிசெய்வது  மற்றும் இதர மீட்பு பணிகளை மேற்கொள்ளும் குழுக்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இரண்டு மாநிலங்களுக்கும் தேசிய பேரிடர் நிவாரண படையின்(NDRF) 36 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ராணுவம், போர்கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் கூடிய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பை உறுதி செய்ய தொலை தொடர்புத்துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், ஒடிசா தலைமைச் செயலாளர், மேற்கு வங்க உள்துறை செயலாளர், மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறை, கப்பல் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, தொலை தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, இந்தியா வானிலைய மையம், தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் நிலைமையை ஆராய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு மீண்டும் கூடும்.

அம்பான் அதி தீவிர புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை பற்றி தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் ஆய்வுக் கூட்டம்:



(Release ID: 1625105) Visitor Counter : 239