சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

73வது உலக சுகாதாரக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பங்கேற்பு

Posted On: 18 MAY 2020 8:27PM by PIB Chennai

உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அதில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆற்றிய உரைக்கு, இந்தியாவின் பதிலாக டாக்டர்.ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

கோவிட்-19 காரணமாக உலகம் முழுவதும் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் கோவிட்-19- எதிர்கொள்ள நாங்கள் உறுதியுடன் நடவடிக்கை எடுத்தோம். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எங்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனிப்பட்ட முறையில் கண்காணித்து ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தார். நுழைவு பகுதியில் கண்காணிப்பு, இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டினரை அனுப்பியது, சமூக கண்காணிப்பு, சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தியது, சுகாதாரப் பணியில் 20 லட்சம் பணியாளர்களை ஈடுபடுத்தியது போன்ற தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் மிக முக்கியமானது. பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது பற்றி நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இது ஆயிரக்கணக்கான மக்களை தொடர்ந்து கொன்று கொண்டிருக்கிறது. மேலும் இது உலகளவில் தீவிர பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மனித இனம் ஒன்றிணைய இது சரியான நேரம். அனைத்து அரசுகளும், தொழிற்துறையினர், சேவை மனப்பான்மையுள்ளவர்கள் நீண்ட காலத்துக்கு தங்கள் வளங்களை அளித்து அனைவரும் பயன் அடைவதை உறுதி செய்ய வேண்டும். எங்கள் பங்குக்கு இந்தியா இருதரப்பு மற்றும் மண்டல உறவை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. பிரதமர் தலைமையின் கீழ் இந்தியா, 123 நாடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.



(Release ID: 1625048) Visitor Counter : 198