பிரதமர் அலுவலகம்

டென்மார்க் பிரதமர் மெட்டி ஃபிரெடெரிக்சென் - பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்

Posted On: 14 MAY 2020 8:03PM by PIB Chennai

டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டி ஃபிரெடெரிக்செனுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள தங்களது நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொற்று அதிகரிக்காத வகையில், பொதுமுடக்க கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக நீக்கியதற்காக டென்மார்க்குக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொருவரின் அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ள இந்தியா மற்றும் டென்மார்க் வல்லுநர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்தியா-டென்மார்க் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது என்ற இரு நாடுகளின் விருப்பத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். கோவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில் இரு நாடுகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான கூட்டு ஆணையக் கூட்டம் மே 12 ம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

சுகாதார ஆய்வு, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எரிசக்தி, வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் ஆகிய துறைகளில் பரஸ்பரம் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியா, டென்மார்க் இடையே வலுவான பசுமை ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்ட பணியாற்றுவது என்று இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.

******



(Release ID: 1624076) Visitor Counter : 172