பிரதமர் அலுவலகம்

திரு.பில் கேட்ஸுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துரையாடல்

Posted On: 14 MAY 2020 10:22PM by PIB Chennai

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர் திரு.பில் கேட்ஸுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்கான சர்வதேச நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், பெருந்தொற்றை கட்டுப்படுத்த அறிவியல் ரீதியான புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு பணிகளில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர்.

இந்த சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் உணர்வுப்பூர்வமான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டுள்ளதை பிரதமர் எடுத்துரைத்தார். அதாவது, உரிய தகவல்கள் மூலம் பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சமூக இடைவெளியை பேணுதல், முன்னிலை பணியாளர்களுக்கு மதிப்பளிப்பது, முகக்கவசங்களை அணிவது, உரிய சுகாதார முறையை பின்பற்றுவது, பொதுமுடக்க விதிகளுக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் மக்களுக்கு ஏற்ற வகையிலான இந்திய அரசின் அடிமட்ட நிலைப்பாடு எவ்வாறு உதவியது என்று பிரதமர் விளக்கினார்.

அரசு ஏற்கனவே மேற்கொண்ட சில மேம்பாட்டு நடவடிக்கைகள், தற்போதைய பெருந்தொற்றை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறனை அதிகரிக்கச் செய்ததை பிரதமர் குறிப்பிட்டார். அதாவது, நிதி நடவடிக்கைகளை அனைவருக்குமானதாக விரிவுபடுத்தியது, சுகாதார சேவைகளை கடைசி நபருக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தியது, தூய்மை இந்தியா இயக்கம் மூலம் தூய்மை மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்து மக்களிடையே எடுத்துரைத்தது, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய இந்திய ஆயுர்வேத திறனை பயன்படுத்தியது ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்கான சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கேட்ஸ் அறக்கட்டளைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதேபோல, இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரப் பணிகளை கேட்ஸ் அறக்கட்டளை மேற்கொண்டு வருவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். உலகின் ஒட்டுமொத்த நலனுக்காக இந்தியாவின் திறனையும், செயல்பாடுகளையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு திரு.கேட்ஸிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.


கிராமப்புறங்களில் கடைசி நிலையில் இருப்பவர்களுக்கு சுகாதார சேவை கிடைக்கச் செய்யும் இந்தியாவின் தனிப்பட்ட செயல்பாடுகளை பயன்படுத்துவது, பெருந்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை சிறப்பான முறையில் கண்டறிய இந்திய அரசு உருவாக்கிய மொபைல் செயலியை  பெருமளவில் பயன்படுத்தச் செய்வது, அதற்கும் மேலாக, தடுப்பு மருந்துகள் மற்றும் மருந்துகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மருந்துத் துறையின் திறனை மிகப்பெரும் அளவில் இந்தியா அதிகரிப்பது உள்ளிட்ட சில யோசனைகளை இருவரும் கண்டறிந்தனர். சர்வதேச முயற்சிகளுக்கு, குறிப்பாக, சக வளரும் நாடுகள் பலனடையும் வகையில், தனது பங்களிப்பை அளிக்க தயாராக இருப்பதுடன், திறன் பெற்றதாகவும் இந்தியா இருப்பதாக இருவரும் ஒப்புக் கொண்டனர். எனவே, பெருந்தொற்றை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்காக தற்போது சர்வதேச அளவில் நடைபெறும் விவாதங்களில், இந்தியாவும் சேர்க்கப்பட வேண்டியது முக்கியம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இறுதியாக, கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் வாழ்க்கை முறை, பொருளாதார அமைப்புகள், சமூக செயல்பாடுகள், கல்வி மற்றும் சுகாதாரத்தை பரவச் செய்தல் ஆகியவற்றில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து ஆராய்வதில் கேட்ஸ் அறக்கட்டளை முன்னோடியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தார். இதேபோல, தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பங்களிப்பை வழங்க இந்தியா மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

******(Release ID: 1624074) Visitor Counter : 244