சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா நோயைக் கண்டறிய உதவும் கோபாஸ் 6800 சோதனைக் கருவியை டாக்டர் ஹர்ஷ் வர்தன் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Posted On: 14 MAY 2020 3:53PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லியில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்திற்கு வருகை தந்து கொரோனா நோயைக் கண்டறிய உதவும் கோபாஸ் 6800 சோதனைக் கருவியை நாட்டிற்கு அர்ப்பணித்தார். கொரோனா தொற்று நோயைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்வதற்கென மத்திய அரசு முதன்முதலாக வாங்கியுள்ள சோதனைக் கருவியாக. இது நோய்க்கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும்  சோதனைக்கூடங்களுக்கும் வருகை தந்து, மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சிங் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கொரோனா நோயை சோதித்துக் கண்டறிவது குறித்த முயற்சிகளின் தற்போதைய நிலை குறித்து பரிசீலனை மேற்கொண்டார். சோதனைக்கான திறனை அதிகரிப்பதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளைச் சுட்டிக் காட்டிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், ”நாளொன்றுக்கு 1,00,000 பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறனை நாம் இப்போது உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சியில் இன்று மிக முக்கியமான நாளாகும். கொரோனாவைக் கண்டறிய கிட்டத்தட்ட 20 இலட்சம் பரிசோதனைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். இவை நாடு முழுவதிலும் உள்ள 359 அரசு பரிசோதனைக்கூடங்கள், 145 தனியார் சோதனைக்கூடங்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “முற்றிலும் தானியங்கி மயமான, உயர்தனிச் சிறப்புள்ள கொரோனா குறித்த பரிசோதனையை உடனடியாக மேற்கொள்வதற்காக, இப்போது நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்தில் நிறுவப்பட்டு நாட்டிற்கு சேவை செய்யவுள்ளது. 24 மணி நேர காலப்பகுதியில் 1200 மாதிரிகளைத் திறம்பட சோதிப்பதற்கான தரமான கருவியாக கோபாஸ் 6800 கருவி அமைந்துள்ளது. சோதனை முடிவுகளில் ஏற்படும் தாமதத்தைக் குறைத்து சோதிக்கும் திறனை பெருமளவுக்கு இந்தக் கருவி உயர்த்தும்” என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கருவியின் இதர அம்சங்கள் குறித்து சுட்டிக்காட்டிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் மிகக் குறைவான மனிதத் தலையீட்டுடன் தொலைவில் இருந்தே இயக்கக்கூடிய, சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்கின்ற, தூய்மைக்கேட்டிற்கான வாய்ப்புகளை பெருமளவிற்குக் குறைக்கும் வகையில் இயந்திர முறைச் செயல்பாட்டினை மேற்கொள்ளும் அதிநவீன கருவியாக கோபாஸ் 6800 விளங்குகிறது என்று குறிப்பிட்டார். இத்தகைய சோதனைகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சமாக பிஎஸ்எல்+2 கட்டுப்பாட்டு அளவு தேவைப்படுகின்ற நிலையில் இந்தக் கருவியை எல்லா இடத்திலும் வைத்துப் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த கோபாஸ் 6800 கருவியானது வைரல் ஹெபாடிடிஸ் பி & சி, எச் ஐ வி, (ரிஃபாம்பிசின் மற்றும் ஐசோனியாசைட் ஆகிய இரண்டுக்கும் எதிர்ப்புத் தன்மை கொண்ட எம்டிபி, பாபிலோமா, சிஎம்வி, க்லாமிடியா, நீசெர்ரியா போன்ற இதர நோய்க் குறிகளையும் கண்டறியும் திறன் கொண்டதாகும்.

அர்ப்பணிப்புடனும், கடினமாகவும் ஊக்கத்தோடும் உழைத்து வரும் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பாராட்டியதோடு, கொரோனாவிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து மேலும் திறமையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நோய் இரட்டிப்பாகும் கால அளவு கடந்த 14 நாட்களில் 11.1 ஆக இருந்தது எனில், கடந்த மூன்று நாட்களில் 13.9 ஆக அது குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது என்றும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் மேலும் கூறினார். இந்த நோயினால் இறப்பவர்களின் விகிதம் 3.2 சதவீதம் ஆகவும், இந்த நோயிலிருந்து மீள்வோரின் விகிதம் மேலும் முன்னேறி இன்று 33.6 சதவீதம் ஆகவும் உயர்ந்துள்ளது (நேற்று இந்த விகிதம் 32.83 சதவீதமாக இருந்தது) என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்றைய நிலவரப்படி தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகள் 3.0 சதவீதம் ஆகவும், 0.39 சதவீத நோயாளிகள் மூச்சு விடுவதற்கு உதவி செய்யும் கருவிகளுடனும், 2.7 சதவீத நோயாளிகள் பிராணவாயு உதவியுடனும் உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார். இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் அந்தமான் - நிகோபார் தீவுகள், அருணாச்சலப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், சண்டிகர், தாத்ர - நகர் ஹவேலி, கோவா, சட்டிஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 14 மாநில/ துணைநிலை மாநிலங்களில் புதிதாக கொரோனா நோய்க்கு யாரும் ஆட்படவில்லை. மேலும் டாமன் & டியூ, சிக்கிம், நாகாலாந்து, லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதுவரையில் கொரோனாவினால் எவரும் பாதிக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2020 மே 14 தேதிய நிலவரப்படி நாடு முழுவதிலும் மொத்தம் 78,003 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 26,235 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளனர். மொத்தம் 2,549 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் புதிதாக 3,722 பேர் கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டு இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 


(Release ID: 1623851) Visitor Counter : 241