சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடினமான நேரத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகளுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் பாராட்டு - நூற்றாண்டு விழாவில் பேச்சு

Posted On: 08 MAY 2020 5:44PM by PIB Chennai

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் டெல்லியில் கலந்து கொண்டார். `உலக செஞ்சிலுவை நாள்' என்ற பெயரில் அந்த விழா கொண்டாடப்பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்த திரு ஹென்றி துராந்த் -ன் மார்பளவு சிலைக்கு டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் மாலை அணிவித்து, ஹரியானாவுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். அவற்றில் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் (பி.பி.இ.), முகக் கவச உறைகள், ஈரத்தன்மை கொண்ட திசு தாள்கள், உடலுக்கான உறைகள் போன்றவை அதில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தலைமை நிர்வாகிகள் மற்றும் மாநில கிளைகளில் அலுவலர்கள் மத்தியில் காணொலி மூலம் பேசிய அமைச்சர், ``இது இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு முக்கியமான நாள். 100 ஆண்டு கால சேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, தன்னுடைய பெருமை மற்றும் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது'' என்று கூறினார். ``யாருடைய உத்தரவுக்காகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காத்திருக்காமல், தானாகவே முடிவு செய்து எந்த ஒரு பேரழிவு அல்லது மக்களுக்கு நெருக்கடியான காலக்கட்டங்களில் உடனடி உதவிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கிறது'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

வழக்கமான ரத்த தான மையங்களின் வளாகங்களுக்கு, நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனங்களை அனுப்பி, இந்த காலக்கட்டத்தில் ரத்த தானம் பெறுவதை அதிகரிக்கச் செய்வதில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றிய சேவைகளுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் பாராட்டு தெரிவித்தார். ``நடமாடும் ரத்த சேகரிப்பு வசதி, ரத்த தானம் செய்பவர்களை அழைத்து வருதல் மற்றும் கொண்டு போய் விடுதல் வசதி போன்ற செயல்பாடுகள் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மகத்தான சேவைகளைச் செய்து வருகிறது. உயிருக்குப் போராடி வரும் நோயாளிகளுக்கும், ரத்த அணு அழிவு சோகை உள்ளவர்களுக்கும், ரத்தம் தொடர்பான கோளாறு உள்ளவர்களுக்கும், கடினமான இந்த காலக்கட்டத்தில் ரத்தம் அளிக்க ஏற்பாடு செய்வதன் மூலம், மற்ற தன்னார்வ அமைப்புகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது'' என்று அமைச்சர் கூறினார்.

கொரோனா நோய்க்கு எதிராகப் போராடி வரும் டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள்  உள்ளிட்டோர், நோயாளிகள் ஆகியோரை சமூகத்தில் ஒதுக்கிவிடாமல் இருக்கவும்,  அவர்களுடன் பணியாற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


(Release ID: 1622273) Visitor Counter : 658