தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மண்டலப் பண்டக சாலைகளிலிருந்து, தொலைதூரங்களில் உள்ள பகுதிகள் உட்பட நாடு முழுவதுமுள்ள பரிசோதனை ஆய்வுக்கூடங்களுக்கு, கோவிட்-19 பரிசோதனை உபகரணங்களை இந்தியா போஸ்ட் எடுத்துச் சென்றது.
Posted On:
08 MAY 2020 4:57PM by PIB Chennai
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) தன்னுடைய 16 மண்டலப் பண்டகசாலைகளிலிருந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 200 கூடுதல் ஆய்வுக்கூடங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தமொன்றை ‘இந்தியா போஸ்ட்’ அமைப்புடன் செய்து கொண்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பரிசோதனை உபகரணங்கள், நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 1,56,000ஆயிரம் அஞ்சலகங்களைக் கொண்ட இந்தியா போஸ்ட், வலுவானதொரு கொரோனா போராளியாகச் செயலாற்றுவதற்கு, மீண்டும் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது. துர்காபூர், சுரு, ஜலாவர், கொல்கத்தா, புவனேஸ்வர், ராஞ்சி, ஜோத்பூர், உதய்பூர், கோட்டா மற்றும் இதர பகுதிகளிலிருந்து இம்பால், ஐஸ்வால் போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கும் இந்தியா போஸ்ட் ஏற்கனவே சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கும், அஞ்சல் துறைக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட பொறுப்புணர்வுவையும், கூட்டு முயற்சியையும் குறித்து, தொலைதொடர்பு, (E&IT), மற்றும் சட்டம் நீதித்துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்தார். பொது முடக்கக் காலத்தின் போது அஞ்சல்கள், மருந்துப்பொருள்கள், நிதியுதவி போன்றவற்றை இல்லங்களிலேயே சென்று சேர்க்கின்ற பணியை இந்தியா போஸ்ட் செய்து வருகிறது என்றும், தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருள்களையும் எடுத்துச்சென்று வழங்குகிறது என்றும் அவர் கூறினார். சவாலான இந்தக் காலங்களில் இந்தியா போஸ்ட் துறையில் பணிபுரியும் அஞ்சல் ஊழியர்கள், காலத்திற்கேற்ப எழுந்து நின்று, நாட்டோடு, தோளோடு தோள் நின்று பணியாற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பரிசோதனை உபகரணங்கள் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய, அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. 16 பண்டகசாலைகளிலிருந்து (14 அஞ்சல் வட்டங்கள்/ மாநிலங்களில் உள்ள) சிவமோகா, திருநெல்வேலி, தருமபுரி, திருப்பதி, டார்ஜிலிங், காங்க்டாக், லே, ஜம்மு, உதம்பூர், ஜலாவர், பவநகர், சோலாப்பூர் தர்பங்கா, ரிஷிகேஷ், ஃப்ரீட்கோட் போன்ற தொலைதூர இடங்கள் உட்பட 200 ஆய்வுக் கூடங்களுக்கு உபகரணங்கள் எடுத்துச் செல்லப்படுவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன், இந்தியா போஸ்ட் ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்தக் உபகரணங்கள் உலர்பனியுடன் பேக் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அஞ்சல் துறை தனது நற்பணிகளைத் தொடர வேண்டும் என்றும், மருந்துப்பொருள்கள், பரிசோதனைகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை உரிய காலத்தில் ஒப்படைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு, E&IT, மற்றும் சட்டம் நீதித்துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டார். அஞ்சல் துறை தனது மிகப்பெரிய அமைப்பை, புத்தாக்கம் செய்ய வேண்டும் என்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஒப்படைக்கப்படுவதில் எந்தவித இடைவெளியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் 16 பண்டகசாலைகள் உள்ள இடங்கள்: NIMR புதுதில்லி, PGI சண்டிகார், KGMU லக்னோ, RMRI பாட்னா, NIRNCD ஜோத்பூர், NIOH அகமதாபாத், NIREH போபால், NICED கொல்கத்தா, NIV புனே, பெங்களூரிலுள்ள NIV களப்பிரிவு, NIN ஹைதராபாத், NIE சென்னை, RMRC டிப்ருகர், RMRC புவனேஸ்வர், NIRRH மும்பை, GMC குவஹாத்தி.
(Release ID: 1622216)
Visitor Counter : 630
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam