பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரஷிய எரிசக்தித் துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் நோவாக் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடல்.

Posted On: 07 MAY 2020 10:12AM by PIB Chennai

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரஷிய எரிசக்தித் துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் நோவாக் ஆகியோர் 2020 மே 6 ஆம் தேதி காணொளி மூலம் கலந்துரையாடினர். உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சூழ்நிலை குறித்தும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர்.

சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட OPEC+ ஒப்பந்தம் பற்றி இந்திய அமைச்சருக்கு அமைச்சர் நோவாக் தகவல்களைத் தெரிவித்தார். உலக எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், நிலவரங்களை யூகிப்பதிலும் இந்த ஒப்பந்தம் முக்கியமான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று வரவேற்பு தெரிவித்த அமைச்சர் பிரதான், நுகர்வு நாடு என்கிற வகையில் இந்தியாவுக்கு இது முக்கியமானதாக உள்ளது என்று தெரிவித்தார். இருதரப்பு பங்காளராக இந்தியா அளிக்கும் பங்களிப்பை ரஷிய அமைச்சர் பாராட்டினார். ஹைட்ரோகார்பன் நுகர்வில் முக்கியமான நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ஹைட்ரோகார்பன்களின் தேவைக்கான மையமாக இருக்கும் என்று அமைச்சர் பிரதான் கூறினார்.

வோஸ்ட்டோக் திட்டத்தில் ரோஸ்நெஃப்ட் திட்டம், எல்.என்.ஜி. க்கு நோவாடெக் வழங்கல், கெயில் மற்றும் காஜ்புரோம் இடையிலான ஒத்துழைப்புகாஜ்புரோம்நெப்ஃட் உடன் கூட்டுத் திட்டங்கள், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரோஸ்நெஃப்ட் கச்சா எண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.  கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்வது குறித்து ரஷிய தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று அமைச்சர் நோவாக் மீண்டும் உறுதியளித்தார்.

நிலக்கரித் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 2019 செப்டம்பரில் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது தொடங்கப்பட்ட முயற்சியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உலக எரிசக்தி சூழலில் தற்போது எழுந்துள்ள சவால்களை மதிப்பீடு செய்வதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. உலகப் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் முயற்சிகளில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.



(Release ID: 1621755) Visitor Counter : 235