பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 தொற்று எதிர்கொள்வது குறித்த அணிசேரா இயக்கத்தின் தொடர்புக் குழு கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 04 MAY 2020 10:00PM by PIB Chennai

குழுவின் தலைவர் அவர்களே,

தலைவர்களே,

இந்த மெய்நிகர் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்த மேதகு அதிபர் இல்காம் அலியேவ் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் தொற்றால், தங்களது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கலை தெரிவித்து எனது உரையைத் தொடங்குகிறேன்.

இன்று, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான நெருக்கடியை மனித சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், உலக ஒற்றுமையை ஊக்குவிக்க அணிசேரா இயக்கம் உதவ முடியும். உலகின் தார்மீக குரலாக அணிசேரா இயக்கம் அடிக்கடி செயல்படுகிறது. இந்தப் பங்களிப்பைத் தொடர, அணிசேரா இயக்கம் தொடர்ந்து அனைவருக்குமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
 

தலைவர்களே,

ஒட்டுமொத்த மனிதசமூகத்தில் 6-ல் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது. நாங்கள் வளரும் நாடு மற்றும் சுதந்திர சமூகமாக உள்ளோம். இந்த நெருக்கடியான சூழலில், ஜனநாயகம், ஒழுங்கு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இணைந்து நேர்மையான மக்கள் இயக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதே இந்தியாவின் பாரம்பரியம். நாங்கள் எங்களது மக்கள் மீது அக்கறை காட்டுவதுடன், மற்ற நாடுகளுக்கும் உதவி செய்துவருகிறோம். கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதற்கு, எங்களது எல்லையையொட்டி உள்ள அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தோம். மருத்துவத் துறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை பல்வேறு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்காக ஆன்லைன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது. குறிப்பாக குறைந்த விலையிலான மருந்துகள் கிடைக்கின்றன.

எங்களுக்கு தேவை இருந்தபோதிலும், அணிசேரா இயக்கத்தில் உறுப்பினராக உள்ள 59 நாடுகள் உள்பட 123-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளோம்

தீர்வுகளை ஏற்படுத்தவும், தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும் மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். உலகின் மிகவும் பழமையான இயற்கை மூலிகை தாவர அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவ முறையை இந்தியா பின்பற்றுகிறது. மக்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க, மிகவும் எளிமையான வீட்டிலேயே பின்பற்றக் கூடிய ஆயுர்வேத வழிமுறைகளை இலவசமாக பகிர்ந்து வருகிறோம்.


தலைவர்களே,

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலகமே போராடிவரும் நிலையிலும், சிலர் தீவிரவாதம் போன்ற மற்ற உயிர்க்கொல்லி வைரஸ்களை பரப்புவதில் தீவிரமாக உள்ளனர்.

இதேபோல, நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதற்காக போலியான செய்திகள், மாற்றியமைக்கப்பட்ட வீடியோக்களை வெளியிடுகின்றனர். எனினும், நேர்மறையான அம்சங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
 

ஒரு இயக்கமாக, நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், இந்த சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள உலகுக்கு உதவ முடியும்.

தலைவர்களே,

தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச அமைப்பில் கட்டுப்பாடுகள் இருப்பதை கோவிட்-19 வைரஸ் தொற்று நமக்கு எடுத்துக்காட்டியுள்ளது. கோவிட்-19 தொற்று பரவலுக்குப் பிந்தைய உலகில், உலகமயமாக்கலுக்கான புதிய வடிவத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியம். இது நியாயமான, சமத்துவமான மற்றும் மனிதநேய அடிப்படையில் இருக்க வேண்டும்.

இன்றைய உலகில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், சர்வதேச அமைப்புகள் தேவை. பொருளாதார வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், மனித நலனை நாம் ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற முயற்சிகளில் இந்தியா நீண்டகாலமாகவே வெற்றிபெற்றுள்ளது.

அனைத்து மக்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துவதில் சர்வதேச யோகா தினம் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. வானிலை மாற்றம் என்ற நோயிலிருந்து நமது கிரகத்தைப் பாதுகாக்க சர்வதேச சூரிய கூட்டமைப்பு போன்றவை உதவுகின்றன. வானிலை மற்றும் பேரிடர் அபாயங்களிலிருந்து பாதுகாக்க பேரிடர் எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு போன்ற கூட்டணி முயற்சிகள் உதவுகின்றன.

பல்வேறு நாடுகளும் ராணுவ பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. ஆனால், எங்களது மண்டலம் மற்றும் அதனைத் தாண்டியும் பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டது.

தலைவர்களே,

வளரும் நாடுகளில் மருத்துவத் திறனை கட்டமைப்பதில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார அமைப்பையும், சர்வதேச சமூகத்தையும் அணிசேரா இயக்கம் கேட்டுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சமமாகவும், குறைந்த விலையிலும், உரிய நேரத்திலும் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நமது அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், இடர் மேலாண்மை வழிமுறைகள், ஆராய்ச்சி மற்றும் வளங்களை பயன்படுத்திக் கொள்ள அனைத்து அணிசேரா இயக்க நாடுகளுக்கான அடித்தளத்தை நாம் உருவாக்க வேண்டும்.

தலைவர்களே,

நமது இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அடிப்படையில், நாம் தனித்தனியாக வளராமல், அனைவரும் ஒருங்கிணைந்து வளர நாம் முயற்சி மேற்கொள்வோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இருந்தால் மட்டுமே, நாம் ஒவ்வொருவரும் இந்த பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். ஒருங்கிணைந்த மற்றும் அனைவருக்குமான சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் கூட்டாளிகளாக செயல்படுவோம்.

நன்றி.

தலைவர்களுக்கு நன்றி.



(Release ID: 1621172) Visitor Counter : 248