உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடுகள் செய்யும்: மே 7 ம் தேதி முதல் படிப்படியாக நடவடிக்கைகள் தொடங்கும்

Posted On: 04 MAY 2020 6:08PM by PIB Chennai

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு படிப்படியாக ஏற்பாடுகள் செய்யும். விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பாக நிலையான செயல்பாட்டு வழிமுறை  வகுக்கப்பட்டுள்ளது.

துன்பத்தில் உள்ள இந்தியர்களின் பட்டியலை இந்திய தூதரகங்களும் உயர் ஆணையங்களும் தயாரிக்கின்றன. கட்டண அடிப்படையில் இந்த வசதி செய்துத் தரப்படும். வான்வழி பயணத்துக்காக அட்டவணையிடப்படாத வணிக விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும். மே 7ம் தேதி முதல் படிப்படியாக இந்த பயணங்கள் தொடங்கும்.

விமானம் ஏறும் முன்பாக பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் படுவார்கள். சுகாதார அமைச்சகம் மற்றும் விமானப்  போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சுகாதார நெறிமுறைகள் உட்பட அனைத்து விதிகளையும் பயணத்தின் போது பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

சேருமிடத்தை அடைந்தவுடன், அனைவரும் தங்களை ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். ஆய்வுக்கு பிறகு, மருத்துவமனையிலோ அல்லது நிறுவன தனிமைப்படுத்துதல் வசதியிலோ தொடர்புடைய மாநில அரசால் 14 நாட்களுக்கு இவர்கள் கட்டண அடிப்படையில் தனிமைப்படுத்தப் படுவார்கள். 14 நாட்களுக்கு பிறகு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு சுகாதார வழிமுறைகளின் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளியுறவு அமைச்சகமும் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் இது தொடர்பான விரிவான தகவல்களை விரைவில் தங்கள் வலைதளங்களில் பகிர்வார்கள்.

பரிசோதனை, தனிமைப்படுத்துதல், நாடு திரும்பும் இந்தியர்கள் அதன் பிறகு தங்களது மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை செய்ய மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

***


(Release ID: 1621152) Visitor Counter : 357