சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோவிட்-19 மேலாண்மைக்காக தயார் நிலை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷவர்தன் காணொளி மாநாட்டின் மூலம் பரிசீலனை

Posted On: 04 MAY 2020 5:26PM by PIB Chennai

கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பது, நோயைக் கட்டுப்படுத்துவது, மேலாண்மை ஆகியவற்றுக்கு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, மத்திய அரசு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, செயல் திறன் உள்ள அணுகுமுறை கொண்ட பல்வேறு, தரமான, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் கோவிட்-19 நிலவரம், மேலாண்மை குறித்த விவரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், பரிசீலிப்பதற்காகவும் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், மத்தியப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் திரு.நரோத்தம் மிஸ்ராவுடன் இன்று காணொளி மூலம் சந்திப்பு நடத்தினார். மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

கோவிட்-19 நோய் காரணமாக மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு நேரிட்டு வருவது குறித்து கவலை தெரிவித்த டாக்டர் ஹர்ஷ்வர்தன், சில மாவட்டங்களில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாகத் தெரியவந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார். கோவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துவது, நோயை முன்னதாகவே கண்டறிவது, தகுந்த நேரத்தில் தக்க முறையில் சிகிச்சை அளிப்பது போன்றவற்றுக்கு மாநிலத்தில் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார். நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், முன்கூட்டியே திட்டமிட்ட விரிவான நடவடிக்கைகளையும், ஒழுங்கான முறையில் மேற்கொண்டு, புதிதாக நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்காக மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகளையும் பின்பற்றுவதே, தற்போதைய காலத்தின் தேவையாகும் என்று அவர் கூறினார்.

 

இந்நோயால் இதுவரை பாதிக்கப்படாத மாவட்டங்களில் Severe Acute Respiratory Infections (SARI) எனப்படும் தீவிரமான சுவாசத் தொற்று மற்றும் Influenza Like Illness (ILI) போன்ற உடல் நலக் குறைபாடுகள் உள்ள நபர்கள் உள்ளனரா என்பதைக் கண்டறிந்து கண்காணித்து பரிசோதனைகள் மேற்கொள்வது ஆகியவற்றுக்கு மாநிலம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தினார். இதனால் பிற இடங்களுக்கும் நோய் பரவாமல் தவிர்க்க முடியும். கைகளைக் கழுவுதல், தனி நபர் விலகியிருத்தல், போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வார்டு அளவிலான சமூகத் தன்னார்வலர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் கூறினார். நோய் பாதித்த நோயாளிகள் குறித்து சமூகத்தில் நிலவும் அசூயையும், பாகுபாட்டையும் அகற்றுவதற்கும் இவர்கள் பயனுள்ள முறையில் பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

 

கோவிட்-19 மேலாண்மை குறித்து வலியுறுத்தப்படுவதன் காரணமாக, தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் தாய்சேய் நலம், டயாலிசிஸ், கீமோதெரபி, தடுப்பூசி போடுதல், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கான கோவிட்-19 அல்லாத சேவைகளுக்கும், திட்டங்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருப்பதை மாநிலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிவுறுத்தினார். நோய் பரவும் அபாயம் உள்ளவர்களைக் கண்டறிவதற்காக, சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பில் உள்ள தகவல்களை மாநிலம் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனைதெரிவித்தார்
 



(Release ID: 1621025) Visitor Counter : 217