உள்துறை அமைச்சகம்

முடக்கநிலை அமல் காலம் 2020 மே 4-iல் இருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு.

Posted On: 01 MAY 2020 6:33PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதல் பாதிப்பை அடுத்து முடக்கநிலை அமல் செய்யப்பட்டதால் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்திருப்பதைக் கருத்தில் கொண்டு, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. 2020 மே 4 ஆம் தேதியில் இருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமல் காலத்தை நீட்டிப்பதாக அந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. நோய்த் தாக்குதல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாகக் கருதப்படும் சிவப்பு மண்டலம், மிதமான பாதிப்பு உள்ள ஆரஞ்சு மண்டலங்கள், நோய் பாதிப்பு இப்போது இல்லாதிருக்கும் பசுமை மண்டலங்கள் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில், இந்த முடக்கநிலை அமல் காலத்தில் பல்வேறு செயல்பாடுகளை அனுமதிப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வரும் மாவட்டங்களில் கணிசமான அளவுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிகாட்டுதல்களில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

2. சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்கள் என மாவட்டங்களை அடையாளம் காண்பதற்கான வரையறைகள், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2020 ஏப்ரல் 30 ஆம் தேதியிட்டு வெளியிட்ட கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் நோய்த் தாக்குதல் பாதிப்பு இல்லாத அல்லது கடந்த 21 நாட்களில் புதிதாக யாருக்கும் நோய் தாக்காத மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகக் கருதப்படும். இப்போது நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை, நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆவதற்கான கால அவகாசம், மருத்துவப் பரிசோதனைகளின் அளவு மற்றும் மாவட்டங்களில் இருந்து அளிக்கப்பட்ட கண்காணிப்பு குறித்த கருத்துகளின் அடிப்படையில் சிவப்பு மண்டலங்கள் முடிவு செய்யப்படும். பச்சை என்றோ அல்லது சிவப்பு என்றோ வரையறுக்கப்படாத மாவட்டங்கள், ஆரஞ்சு மண்டலத்தில் வரும் மாவட்டங்களாக இருக்கும். சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள மாவட்டங்களின் பட்டியல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாரம் தோறும் அல்லது தேவைக்கு ஏற்ப, அதற்கு முன்னதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்படும்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கூடுதல் மாவட்டங்களை சேர்க்கலாம். ஆனால் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பட்டியலில் சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்கள் என குறிப்பிடப்பட்டதை, அதற்கும் கீழான கட்டுப்பாடு உள்ள மண்டலங்களுக்கு மாற்ற முடியாது.

3. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், தங்களது எல்லைகளுக்குள், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாநகராட்சிகளைக் கொண்டுள்ளன. மாநகராட்சிகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், அதிக அளவில் மக்கள் தொடர்பு கொள்வதாலும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளைவிட மாநகராட்சிப் பகுதிகளில் கோவிட் -19 நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, அதுபோன்ற மாவட்டங்களை, மாநகராட்சி அல்லது மாநகராட்சிகளின் எல்லைக்குள் இருப்பவை ஒரு மண்டலமாகவும், அதற்கு வெளியே உள்ள எல்லைகள் இன்னொரு மண்டலமாகவும் என இரண்டு மண்டலங்களாகப் பிரிக்க புதிய வழிகாட்டுதல்களில் வகை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அல்லது மாநகராட்சிகளின் எல்லைகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில் கடந்த 21 நாட்களில், புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படாமல் இருந்தால், அந்தப் பகுதியை அந்த மாவட்டத்தின் வகைப்படுத்தலில் இருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு என்ற நிலையில் இருந்து ஒரு படிநிலை கீழாக வகைப்படுத்த அனுமதிக்கப் படுகிறது. எனவே இந்தப் பகுதி சிவப்பு என வகைபடுத்தப்பட்டிருந்தால் ஆரஞ்சு என்றும், ஆரஞ்சு என வகைபடுத்தப்பட்டிருந்தால் பச்சை என்றும் கணக்கில் கொள்ளப்படும். இதனால், கோவிட் - 19 பாதிப்பு குறைவாக உள்ள, அந்த மாவட்டத்தில் பொருளாதார மற்றும் இதர செயல்பாடுகள் அதிகரிக்க வகை செய்யப்படும். மேலும் அந்தப் பகுதிகள் கோவிட்-19 நோய்த் தாக்குதல் இல்லாத பகுதியாக நீடிப்பதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும். மாநகராட்சி அல்லது மாநகராட்சிகளைக் கொண்ட மாவட்டங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

4. கோவிட் - 19 பாதிப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, பாதிப்பு அதிகமாக இருப்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வரும் பகுதிகள், கட்டுப்படுத்தப்படும் மண்டலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் நோய் பரவுதலுக்கு கணிசமான வாய்ப்புகள் உள்ளன. நோய் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, பூகோள ரீதியில் பரவியுள்ள பகுதி, அமலாக்க நோக்கில் நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் தேவைப்படுவதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால், இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வரையறை செய்யப்படும். கட்டுப்படுத்தப்படும் மண்டலத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்படும் மண்டலங்களில் தீவிர கண்காணிப்பு நடைமுறைகள் அமலில் இருக்கும். தொடர்புகள் தடமறிதல், வீடு வீடாக சென்று கண்காணித்தல், ஆபத்து வாய்ப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் வீடு / நிறுவனம் சார்ந்த தனிமைப்படுத்தல், சிகிச்சை மேலாண்மை ஆகியவற்றில் தீவிர நடைமுறைகள் பின்பற்றப்படும். வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இருந்து யாரும் வெளியில் செல்லவோ அல்லது வெளியில் இருந்து உள்ளே வரவோ முடியாதபடி, கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்க வேண்டும். அவசர மருத்துவ தேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. கட்டுப்படுத்தப்படும் மண்டலங்களில் வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

5. எந்த மண்டலமாக இருந்தாலும், புதிய வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுக்க சில செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து தடை நீடிக்கும். விமானம், ரயில், மெட்ரோ பயணங்கள், சாலை வழியாக மாநிலங்களுக்கு இடையிலான பயணம்; பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் நடத்துதல்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட விருந்தினர் உபசரிப்பு சேவைகள்; மக்கள் பெருமளவில் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் போன்ற இடங்கள்; சமூக, அரசியல், கலாச்சார மற்றும் வேறு வகையிலான கூட்டங்கள்; மற்றும் மதம் சார்ந்த இடங்கள் / பொது மக்களுக்காக வழிபாட்டுத் தலங்களை அனுமதித்தல் போன்றவை இந்தக் கட்டுப்பாட்டில் அடங்கும். இருந்தபோதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேவைகளுக்காகவும், உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்காகவும் விமானம், ரயில் மற்றும் சாலைப் பயணங்களுக்கு அனுமதி உண்டு.

6. மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி புதிய வழிகாட்டுதல்களில் சில நடைமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. எனவே, அவசியம் இல்லாத காரணங்களுக்காக தனிநபர்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் வெளியில் செல்வது தடை செய்யப்படுகிறது. இதற்காக குற்றவியல் சட்டம் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தல் போன்று, சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழ் உள்ளூர் நிர்வாகத்தினர் உத்தரவுகள் பிறப்பித்து, அவை முழுமையாக அமல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மண்டலங்களிலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், அத்தியாவசிய தேவைகளுக்காக மற்றும் ஆரோக்கிய தேவைகளுக்கான காரணங்களாக இல்லாத வரையில், வீட்டிலேயே இருக்க வேண்டும். சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் புற நோயாளிகள் பிரிவுகளும், மருத்துவ கிளினிக்குகளும் செயல்பட அனுமதி உண்டு. அங்கு தனி நபர் இடைவெளி நடைமுறைகளும், மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும். இருந்தபோதிலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் இவற்றுக்கு அனுமதி கிடையாது.

7. சிவப்பு மண்டலங்களில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் நாடு முழுக்க தடை செய்யப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கூடுதலாக சிலவற்றுக்கும் தடை விதிக்கப்படும். சைக்கிள் ரிக்சாக்கள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்கள் இயக்குதல், டாக்சிகள் மற்றும் வாடகைக் கார் தொகுப்புகளை இயக்குவது, மாவட்டத்துக்கு உள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பேருந்துகளை இயக்குவது, முடிவெட்டும் நிலையங்கள், அழகுநிலையங்கள் மற்றும் சலூன்கள் ஆகியவை இந்தப் பட்டியலில் வரும்.

8. சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகளுடன் வேறு சில செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் தனி நபர்கள் மற்றும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சம் 2 பேர் (ஓட்டுநர் தவிர), இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில், அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் பிரிவுகள், தொழிற்பேட்டைகள் மற்றும் நகரியங்களில், உள்நுழைவுக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளுடன் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மருந்துகள், பார்மசூட்டிகல்ஸ், மருத்துவ சாதனங்கள், அவற்றுக்கான மூலப் பொருள்கள் மற்றும் இடைமுகத் தயாரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை தொடர்பான வழங்கல் சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கும், தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. சணல் தொழிற்சாலைகளில் கால இடைவெளியுடன் ஷிப்டுகளில், சமூக இடைவெளியைப் பராமரித்த நிலையில் செயல்படவும், பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில், அதே வளாகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு (வெளியில் இருந்து யாரையும் அழைத்து வரக் கூடாது) கட்டுமானப் பணிகளைத் தொடரலாம். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தித் திட்டங்களில் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம். நகர்ப்புறங்களில் அத்தியாவசிய தேவையில் இல்லாத கடைகளுக்கு வணிக வளாகங்கள், மார்க்கெட்கள் மற்றும் மார்க்கெட் வளாகங்களில் அனுமதி கிடையாது. இருந்தபோதிலும், நகர்ப்புறங்களில் அருகமைப் பகுதியில் தனியாக உள்ள கடைகள் இயங்க அனுமதி உண்டு. இதில் அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியம் அல்லாத என்ற வேறுபாடு கிடையாது. சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் இணையவழி வணிக (e-commerce) செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். தனியார் அலுவலகங்கள் தேவையைப் பொருத்து 33 சதவீத அலுவலர்களுடன் செயல்படலாம். மீதி பேர் அவரவர் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம். அனைத்து அரசு அலுவலகங்களும் துணைச் செயலாளர் மற்றும் அதற்கும் மேலான அந்தஸ்துகளில் இருக்கும் உயரதிகாரிகள் முழு அளவில் பணிக்கு வருதல், மற்றவர்களின் தேவையின் அடிப்படையில் 33 சதவீதம் பேர் பணிக்கு வருதல் என்ற நிலையில் இயங்கும். இருந்தபோதிலும், பாதுகாப்பு சேவைகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், காவல், சிறைகள், ஊர்க்காவல் படைகள், மக்கள் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசரகாலச் சேவைகள், பேரழிவு மேலாண்மை மற்றும் தொடர்புடைய சேவைகள், தேசிய தகவல் மையம், சுங்கம், இந்திய உணவுக் கார்ப்பரேசன், என்.சி.சி., நேரு யுவ கேந்திரம் மற்றும் நகராட்சி சேவைகள் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படும். பொது மக்களுக்கான சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அதற்குத் தேவையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

9. சிவப்பு மண்டலத்தில் வேறு பல செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், உணவு பதப்படுத்தல் பிரிவுகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிற்சாலை மற்றும் கட்டுமான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அத்துடன், கிராமப் பகுதிகளில் சரக்குகள் இயல்பு பற்றிய வித்தியாசம் இல்லாமல், வணிக வளாகங்கள் அல்லாத அனைத்து கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. விதைத்தல், அறுவடை, கொள்முதல் மற்றும் வேளாண் வழங்கல் சங்கிலித் தொடரில் மார்க்கெட்டிங் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கால்நடை பராமரிப்புப் பணிகளுக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் கடல் மீன்வள பணிகளும் இதில் அடங்கும். தோட்டத் தொழில் பணிகள் அனைத்திற்கும் அனுமதிக்கப் படுகிறது. இதில் பதப்படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் செய்தலும் அடங்கும். ஆயுஷ் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவைகளும் தொடர்ந்து செயல்படும். மருத்துவ அலுவலர்கள் மற்றும் நோயாளிகளை விமான ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்வதும் இதில் அடங்கும். வங்கிகள், வங்கிச் சேவையில் இல்லாத நிதி நிறுவனங்கள், காப்பீடு மற்றும் முதலீட்டு மார்க்கெட் செயல்பாடுகள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் போன்ற பெருமளவிலான நிதித் துறை செயல்பாடுகள் தொடர்ந்து இயங்கும். குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள் மற்றும் விதவையர் இல்லங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கும், அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மின்சாரம், தண்ணீர், கழிவுநீர் அகற்றல், கழிவு மேலாண்மை, தொலைத் தொடர்புகள் மற்றும் இன்டர்நெட் போன்ற மக்களின் அன்றாட தேவையில் தொடர்புடைய பணிகள் தொடர்ந்து நடைபெறும். கூரியர் மற்றும் தபால் சேவைகள் செயல்பட அனுமதி உண்டு.

10. சிவப்பு மண்டலங்களில் பெரும்பாலான வணிக மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், தகவல் தொடர்பு மற்றும் அதைச் சார்ந்த துறைகள், தகவல் தொகுப்பு மற்றும் வாடிக்கையாளர் உதவி மையங்கள், குளிர்பதனக் கிடங்கு மற்றும் சேமிப்புக் கிடங்கு சேவைகள், தனியார் பாதுகாவல் பணி சேவைகள், சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அளிக்கும் சேவைகள் (முடிதிருத்துபவர்கள் தவிர) ஆகிய சேவைகளுக்கு முன்பு குறிப்பிட்டதைப் போல அனுமதிக்கப் படுகிறது. மருந்துகள், பார்மசூட்டிகல்ஸ், மருத்துவ சாதனங்கள், அவற்றுக்கான மூலப் பொருள்கள் மற்றும் இடைமுகத் தயாரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை தொடர்பான வழங்கல் சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கும், தகவல் தொழில்நுட்ப வன்பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. பேக்கேஜிங் பொருள்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்படுகிறது.

11. சிவப்பு மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன், ஆரஞ்சு மண்டலங்களில் டாக்சிகள் மற்றும் வாடகைக் கார் தொகுப்பு சேவைகளில் ஓட்டுநரும், இரு பயணிகளும் மட்டும் செல்லும் சேவைகளுக்கு அனுமதிக்கப் படுகிறது. மாவட்டங்களுக்கு இடையில், அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் தனிநபர்கள் மற்றும் வாகனங்கள் பயணத்துக்கு அனுமதி உண்டு. நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் தவிர, இரண்டு பயணிகள் செல்லவும், இரு சக்கர வாகனங்களில் இருவருக்கும் அனுமதி உண்டு.

12. பச்சை மண்டலங்களில், நாடு முழுக்க தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர மற்ற செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு. இருந்தபோதிலும் பேருந்துகளில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பயணிகள் செல்லலாம். பேருந்து பணிமனைகள் 50 சதவீத அளவில் மட்டுமே சேவைகளை இயக்கலாம்.

13. அனைத்து சரக்குப் போக்குவரத்திற்கும் அனுமதி உண்டு. அருகாமை நாடுகளுடன் உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் நில எல்லை கடந்த வர்த்தகத்துக்காக சரக்குகள் போக்குவரத்தை எந்த மாநிலம் / யூனியன் பிரதேசமும் தடுக்கக் கூடாது. முடக்கநிலை காலத்தில் நாடு முழுக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கல் சங்கிலித் தொடரைப் பராமரிப்பதில் அத்தியாவசியமாக இருக்கும் இதுபோன்ற சேவைகளுக்கு, எந்த வகையான அனுமதி அட்டைகளும் தனியாகத் தேவை கிடையாது.

14. குறிப்பிட்டு தடை விதிக்கப்படாத அல்லது இந்த வழிகாட்டுதல்களில் கட்டுப்பாடுகளுடன் பல மண்டலங்களில் அனுமதிக்கப்பட்டவை அல்லாத மற்ற அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட்டவையாக இருக்கும். இருந்தபோதிலும், தங்கள் பகுதியில் உள்ள சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து, கோவிட் -19 நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் பிரதான நோக்கத்துடன், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் தேவையைப் பொருத்து சிலவற்றை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யலாம்.

15. ஏற்கெனவே  2020 மே 3 ஆம் தேதி வரையிலான முடக்கநிலை காலத்துக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு தனியாக / புதிதாக அனுமதிகள் எதுவும் தேவை இல்லை. இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரின் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தல், தனிமை முகாமில் இருப்பவர்களை அனுப்பி வைத்தல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் பயணம், இந்திய கடல் பயணிகள் உள்நுழைவு மற்றும் வெளியே வருதல், தவிப்புக்கு ஆளாகியிருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனிதப் பயணம் மேற்கொண்டிருப்பவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்களை சாலை மற்றும் ரயில் பயணம் மூலம்அழைத்துச் செல்தல் போன்ற விஷயங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

16. முடக்கநிலை காலத்துக்கான வழிகாட்டுதல்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கடுமையாக அமல் செய்ய வேண்டும். பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ்அளிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை எந்த வகையிலும் நீர்த்துப் போகச் செய்துவிடக் கூடாது.



(Release ID: 1620299) Visitor Counter : 361