தேர்தல் ஆணையம்

மகாராஷ்டிரா சட்ட மேலவைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலை 21 மே 2020 அன்று நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடித்துள்ளது.

Posted On: 01 MAY 2020 2:16PM by PIB Chennai

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ஒன்பது சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தும் சாத்தியக்கூறுகளை தேர்தல் ஆணையம் இன்று ஆய்வு செய்தது. தேர்தல் ஆணையர்கள், திரு. அஷோக் லாவாசா மற்றும் திரு. சுஷில் சந்திரா ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர், திரு. சுனில் அரோரா, (அமெரிக்காவில் இருந்து) காணொளி அழைப்பு மூலம் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது சட்ட மேலவை உறுப்பினர் பதவிகள், 24 ஏப்ரல் 2020 அன்று மகாராஷ்டிராவில் (இணைப்பு 'A') காலியானது. கொவிட்-19 சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு , மறு உத்தரவுகள் வரும் வரை தேர்தலை தள்ளி வைத்து 03 ஏப்ரல் 2020 அன்று சட்டப்பிரிவு 324இன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவை வெளியிட்டது.

மகாராஷ்டிரா அரசின் தலைமை செயலாளரிடம் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு 30 ஏப்ரல் 2020 அன்று ஒரு கடிதம் வரப்பெற்றது. அந்தக் கடிதத்தில், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய தலைமைச் செயலாளர், மாநில அரசின் மதிப்பீட்டின் படி, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பாதுகாப்பான சூழ்நிலையில் நடத்தலாம் என தெரிவித்திருந்தார். தனி நபர் விலகல் மற்றும் உரிய அதிகாரிகளால் விதிக்கப்படும் இதர நிபந்தனைகளைப் பின்பற்றி மேற்கண்ட தேர்தலை முழுவதும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் நடத்த மாநில அரசு முழுவதும் உறுதி பூண்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் மாநில அரசு உறுதி அளித்தது.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பொது முடக்க உத்தரவுகளால் சிக்கித் தவிக்கும் இதர நபர்களின் போக்குவரத்தை அனுமதித்து 29 ஏப்ரல் 2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவை சுட்டிக்காட்டிய மாநில அரசு, இந்த விஷயத்தில் உள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி தேர்தல் நடப்பதற்கான வசதிகளை செய்து அரசு உறுதி செய்யும் என மீண்டும் வலியுறுத்தியது.

மாநிலத்தில் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்டு, மாண்புமிகு மகாராஷ்டிர ஆளுநரிடம் இருந்து 30 ஏப்ரல் 2020 தேதியிட்ட ஒரு அலுவல் கடிதத்தையும் ஆணையம் பெற்றதுஇது தொடர்பாக, மகாராஷ்டிராவின் முதல் அமைச்சராக 28 நவம்பர், 2019 அன்று திரு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதைத் தெரிவித்த மகாராஷ்டிர ஆளுநர், அரசியல் சட்ட விதிகளின் படி மகாராஷ்டிர சட்டமன்றம் அல்லது சட்ட மேலவையின் உறுப்பினராக அவர் ஆறு மாதங்களுக்குள், அதாவது 27 மே, 2020க்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். கள நிலவரம் கட்டுக்குள் உள்ளதாகவும், அரசு செய்த பல்வேறு தளர்வுகள் மூலம் தற்போது அது மேம்பட்டு வருவதாகத் தெரிவதாகவும் அவர் மேலும் கூறினார். ஆகையால், ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, தேர்தலை நடத்துவதற்கான முறைகளை வகுப்பதற்குப் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் அட்டவணை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிர சட்டமன்ற காங்கிரஸ் கட்சி, சிவ சேனா சட்ட மேலவை கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள், மேற்கண்ட தேர்தலை நடத்த ஆணையத்தைக் கேட்டுக்கொண்டதையும் ஆணையம் கருத்தில் கொண்டது.

மேற்கண்ட அனைத்தையும் கருத்தில் கொண்ட அதே நேரத்தில், கடந்த காலத்தில் நேர்ந்த இதே போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளையும் ஆணையம் ஆய்வு செய்தது. முன்னாள் பிரதமர்கள் திரு. பி. வி. நரசிம்ம ராவுக்கு 1991லும், திரு. எச்.டி. தேவ கெளடாவுக்கு 1996லும், மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு (ராஜஸ்தான் முதல்வர் திரு. அஷோக் கெலாட், 1991; பீகார் முதல்வர் திருமதி. ராப்ரி தேவி, 1997; ஆந்திரப்பிரேதச  முதல்வர் திரு. விஜய் பாஸ்கர் ரெட்டி, 1993;  உத்திரப் பிரதேச முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்கள், 2017; மற்றும் நாகாலாந்து முதல்வர், 2017) இதே போன்ற அரசியல் சட்டத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இடைத் தேர்தல்களை ஆணையம் நடத்தியது. கடந்த காலத்தில் இது ஒரு நிலையான வழக்கமாகவே இருந்துள்ளதை ஆணையம் குறித்துக் கொண்டது.

இவை அனைத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மேற்கூறிய மேலவைத் தேர்தலை நடத்த ஆணையம் முடிவெடுத்தது. தேர்தல் அட்டவணை குறித்த தகவல்கள் இணைப்பு 'B'யில் இணைக்கப்பட்டுள்ளன.

பேரழிவு மேலாண்மைச் சட்டம், 2005இன் படி தேசிய நிர்வாகக் குழுவின் அலுவல் சார்ந்த தலைவரான மத்திய உள்துறை செயலாளர், தேர்தல் சுமூகமாக நடப்பதற்கு மேற்கண்ட சட்டத்தில் கூறியுள்ள படி தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய தகுந்த மூத்த அதிகரியை நியமிக்க வேண்டும் என்றும் ஆணையம் முடிவெடுத்தது.

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது கொவிட்-19 தொடர்பாக அமலில் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய மாநிலத்தில் இருந்து ஒரு அதிகாரியை நியமிக்குமாறு தலைமை செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் அதிகாரியை இந்த தேர்தலுக்கான பார்வையாளராக ஆணையம் நியமித்தது.

தள்ளி வைக்கப்பட்ட இதர தேர்தல்கள் குறித்து அடுத்த வாரம் ஆய்வு செய்யவும் ஆணையம் முடிவெடுத்தது.

இணைப்பு 'B' (அட்டவணை)

. எண்                                    நிகழ்ச்சிகள்                                                  தேதிகள்

1.                                       அறிவிப்பு வெளியீடு                                 4 மே 2020 (திங்கள்)

 

2.                 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்                 11 மே 2020  (திங்கள்)

3.                 வேட்பு மனுக்கள் பரிசீலனை                              12 மே 2020  (செவ்வாய்)

4.                 வேட்பு மனு திரும்ப பெறக் கடைசி நாள்            14 மே 2020  (வியாழன்)

5.                                          தேர்தல் நாள்                                           21 மே 2020 (வியாழன்)

6.                                          தேர்தல் நேரம்                காலை 09.00 முதல் மாலை 04.00 வரை

7.                           வாக்கு எண்ணிக்கை               21 மே 2020 (வியாழன்) மாலை 5.00 மணி

8.        தேர்தல் முடிக்கப்பட வேண்டிய தேதி                             26 மே 2020 (செவ்வாய்)

***


(Release ID: 1620103) Visitor Counter : 322