நிதி அமைச்சகம்

தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு தனது இறுதி அறிக்கையை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் வழங்கியது.

Posted On: 29 APR 2020 3:48PM by PIB Chennai

தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு (என்.ஐ.பி.) 2019-25 காலக்கட்டத்துக்கான தனது இறுதி அறிக்கையை, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம், இன்று  புதுடெல்லியில் வழங்கியது. இந்த பணிக் குழுவின் 2019-2025 காலகட்டத்துக்கான சுருக்க அறிக்கையை நிதியமைச்சர் 2019 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.

நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ.100 இலட்சம் கோடி செலவிடப்படும் என்று 2019-20 பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2019 சுதந்திர தின உரையில் இதுபற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, ``நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு இந்த காலகட்டத்துக்கு ரூ.100 இலட்சம் கோடி ஒதுக்கப்படும்,  இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், வாழ்க்கைத் தர நிலையும் உயரும்'” என்று கூறினார்.

நாடு முழுக்க உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு ஒட்டுமொத்தமாக அரசின் துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் என்.ஐ.பி. திட்டம், புது மாதிரியான முதலாவது திட்டமாக இருக்கும். அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாக இது இருக்கும். 2025 நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்வது என்ற இலக்கை எட்டுவதில், திட்ட அறிக்கைகள் தயாரித்தல், முதலீடுகளை (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை) ஈர்த்தல் ஆகியவை  முக்கியமான பங்களிக்கும்.

தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள் மற்றும் ஒத்திசைவு செய்த கட்டமைப்புப் பட்டியலில் சார்பு-துறைகள் என அடையாளம் காணப்பட்ட தனியார் துறைகள் என தொடர்புடைய அனைத்துப் பிரிவினரும் அளித்த யோசனைகளை ஒருங்கிணைத்து, சிறந்த முறையில் தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு தயாரித்துள்ளது. தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவை உருவாக்குவதற்கு, ரூ.100 கோடி மதிப்புக்கும் மேற்பட்ட அனைத்து பெரிய திட்டங்களும் (கிரீன்பீல்டு அல்லது பிரவுன்பீல்டு, அமல் நிலையில் உள்ள அல்லது திட்டமிடல் நிலையில் உள்ள) சேர்க்கப் பட்டுள்ளன.

2020-25 நிதியாண்டு காலக்கட்டத்தில் ரூ.111 இலட்சம் கோடி மதிப்பில் முதலீடுகளை செய்யக்கூடிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் இறுதி அறிக்கையில் முன் வைக்கப் பட்டுள்ளன. தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் சுருக்க அறிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து, மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் அளித்த கூடுதல் மற்றும் திருத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கை மூன்று தொகுப்புகளைக் கொண்டதாக உள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவது தொகுப்புகள் நிதியமைச்சகத்தின் முனையத்தில்  www.dea.gov.in, www.pppinindia.gov.in இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். மூன்றாவது தொகுப்பு A மற்றும் B பகுதிகள் வரும் நாட்களில் இந்திய முதலீட்டுத் தொகுப்பு முனையத்தில் (India Investment Grid Portal) பதிவேற்றம் செய்யப்படும்.

மொத்தம் ரூ.111 லட்சம் கோடி முதலீட்டு செலவினத்துக்கான திட்டங்களில் ரூ.44 இலட்சம் கோடி (தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவில் 40 சதவீதம்) தற்போது அமல்படுத்தும் செயல்பாடுகளில் உள்ள திட்டங்கள். ரூ.33 இலட்சம் கோடி (30 சதவீதம்) அளவிலான திட்டங்கள், சிந்தனையாக்க அடிப்படை நிலையில் உள்ளவை. ரூ.22 இலட்சம் கோடி (20 சதவீதம்) மதிப்பிலான திட்டங்கள் உருவாக்க நிலையில் உள்ளன. ரூ.11 இலட்சம் கோடி (10 சதவீதம்) மதிப்பிலான திட்டங்களின் நிலை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. எரிசக்தி (24 சதவீதம்), சாலைகள் (18 சதவீதம்), நகர்ப்புறங்கள் (17 சதவீதம்), ரயில்வே (12 சதவீதம்) போன்ற துறைகளில் 71 சதவீதம் முதலீட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் திட்டங்களை அமல் செய்வதில் மத்திய அரசு 39 சதவீதமும், மாநிலங்கள் 40 சதவீதமும் செலவுகளை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் துறைகள் சார்பில் 21 சதவீதம் செலவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலும், உலக அளவிலும் நடைபெறும் முதலீடுகள் இந்த இறுதி அறிக்கையில் அடையாளம் காணப்பட்டு, முக்கியத்துவத்துடன் விவரிக்கப் பட்டுள்ளன. துறைகளின் வளர்ச்சிகள் பற்றியும், பற்றாக்குறைகள் மற்றும் சவால்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள துறைசார் கொள்கைகளின் அண்மைக்காலம் வரையிலான முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ள இந்த இறுதி அறிக்கையில், நாடு முழுக்க பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு முதலீட்டில் உந்துதல் அளிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி அடையாளம் காணப்பட்டு, முக்கியத்துவத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியைத் திரட்டுவதற்கு, முனிசிபல் பங்கு பத்திரங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் பங்கு பத்திரச் சந்தைகள், கட்டமைப்புத் துறைக்காக வளர்ச்சி நிதி நிறுவனங்கள் உருவாக்குதல், கட்டமைப்பு சொத்துகளை காசாக்குதல், நிலங்களை காசாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பின்வரும் மூன்று கமிட்டிகளை உருவாக்கலாம் என்று பணிக் குழு பரிந்துரை செய்துள்ளது:

  1. தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு அமலாக்க முன்னேற்றத்தை மேற்பார்வை செய்யவும், தாமதங்களைத் தவிர்க்கவும் ஒரு குழு;
  2. அமலாக்கத்தைப் பின்தொடர்ந்து கவனிப்பதற்கு ஒவ்வொரு கட்டமைப்பு அமைச்சக அளவில் ஒரு நெறிக்குழு; மற்றும்
  3. தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழுவுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்காக ஒரு நெறிக்குழு.

அடிப்படை அளவிலான மேற்பார்வையிடல் அதிகாரமானது அமைச்சகத்திடமும், திட்ட முகமையிடமும் இருக்கும். மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை மேற்பார்வை செய்து, தடைபடும் திட்டங்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உயர்நிலையில் மேற்பார்வை குழுக்கள் தேவைப்படுகின்றன. நிர்வாக அமைப்பு நடைமுறை உள்ளிட்ட வரம்புகளை உருவாக்குதல் குறித்த மேற்பார்வையிடல் குறித்த அடிப்படை அம்சங்கள் தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு அறிக்கையின் முதலாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு திட்டத்தின் தகவல் தொகுப்பு விவரங்கள் இந்தியா முதலீட்டு தொகுப்பில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் அத்துடன் வாய்ப்புள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இது உதவியாக இருக்கும். அதற்கேற்ப திட்டங்கள் குறித்த அண்மைக்கால தகவல்கள் அதில் சேர்க்கப்படும். வாய்ப்புள்ள முதலீட்டாளர்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைக்க வசதியாக, ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில், அந்தந்தத் திட்டங்களின் விவரங்களையும், புதிய திட்டங்களின் விவரங்களையும் தொடர்புடைய அமைச்சகங்கள் / மாநிலங்கள் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு இறுதி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.



(Release ID: 1619340) Visitor Counter : 283