அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய விரைவாய்வு பரிசோதனை மற்றும் RT-PCR பரிசோதனை கிட்டுக்களை தயாரிப்பதில் மே மாத இறுதிக்குள் நாடு தன்னிறைவு அடைந்துவிடும்: டாக்டர் ஹர்ஷ்வர்தன்

Posted On: 28 APR 2020 6:36PM by PIB Chennai

தற்போதைய கோவிட் 19 நெருக்கடி காலத்தில், இந்நோயை எதிர்கொள்வதற்காக தொழில் நுட்ப உயிரியல் துறை, அதன் தன்னாட்சி அமைப்புகள், அதன் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் BIRAC மற்றும் BIBCOL ஆகியவை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பாக, இந்நோய்க்கான வாக்ஸின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே தயாரிப்பது; விரைவாய்வு பரிசோதனை மற்றும் RT-PCR   பரிசோதனை கிட்டுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும், மத்திய அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் புவி அறிவியல் துறையின் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

 

 

கோவிட் 19 நோயை எதிர்கொள்வதற்காக உடனடி திட்டம் மற்றும் நீண்டகால திட்டத்திற்கான பல முனை ஆராய்ச்சி உத்திகளை, உயிரியல் தொழில்நுட்பத்துறை உருவாக்கியுள்ளது என்று இத்துறையின் செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தெரிவித்தார். கேண்டிடேட் வாக்ஸின்கள் தயாரிப்பது, சிகிச்சை முறைகளை கண்டறிவது, கோவிட் நோய்க்கான விலங்கு மாதிரிகளைத் தயாரிப்பது, ஹோஸ்ட் மரபணு ஆய்வுகளை மேற்கொள்வது, நோய் உள்ளதா எனக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது போன்றவை உட்பட பல ஆய்வுகளும் இந்தப் பன்முனை முயற்சிகளில் அடங்கும்.

 

நோயைக் கண்டறிதல், தடுப்பு மருந்துகள் தயாரித்தல், புதிய சிகிச்சை முறைகள், பிற மருந்துகளை கோவிட் நோய்க்கு பயன்படுத்த முடியுமா என்று ஆராய்தல், கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உதவும் என்று கண்டறிதல், கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பிற முயற்சிகள் போன்றவற்றுக்கு ஆதரவு அளிக்குமாறு, உயிரியல் தொழில்நுட்பத் துறையும் அதன் பொதுத்துறை நிறுவனமான உயிரியல் தொழில்நுட்ப தொழில் ஆய்வு உதவி கழகமும் இணைந்து கூட்டு ஆய்வுக்கான அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

கோவிட் 19 நோயை ஒழிப்பதற்கா தீர்வு காண்பதற்கு புதிய உத்திகளைக் கையாள்வது தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதற்காக டாக்டர் ஹர்ஷ் வர்தன் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய டெஸ்ட் மற்றும்  RT-PCR   பரிசோதனை கிட்டுக்களைத் தயாரிப்பதில் மே மாத இறுதிக்குள் நாடு தன்னிறைவு அடைந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

புதிதாக துவங்கப்பட்ட சுமார் 150க்கும் அதிகமான தீர்வுகாணும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் BIRAC ன் முயற்சிகளையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டினார்இவற்றுள் 20 தீர்வுகள் ஏற்கனவே, செயல்படுத்தப்படுவதற்கான தயார் நிலையில் உள்ளன.



(Release ID: 1619202) Visitor Counter : 251