மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பொதுச் சேவை மையங்கள் மூலம் ஆதார் புதுப்பித்தல் வசதியை அனுமதிக்கிறது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்.

20,000 பொது சேவை மையங்கள் இந்தச் சேவையை மக்களுக்கு அளிக்கும்.

Posted On: 28 APR 2020 3:19PM by PIB Chennai

கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு பெரியதொரு உதவியை அளிக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நோக்க முகமையான பொதுச் சேவை மையங்களில், வங்கியியல் தொடர்பாளர்களாகச் (BCs) செயல்படும் 20,000  பொதுச் சேவை மையங்களில் ஆதார் புதுப்பிப்பு வசதியைத் தொடங்குவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதித்துள்ளது. இதை சுட்டுரை ஒன்றில் தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், திரு. ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.

20,000 பொதுச் சேவை மையங்களால் இந்தச் சேவையை தற்போது மக்களுக்கு அளிக்க முடியுமென்று மத்திய அமைச்சர் சுட்டுரையில் தெரிவித்தார். ஆதார் வேலையை பொறுப்புணர்ச்சியோடும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள விதிமுறைகள் படியும் தொடங்குமாறு பொதுச் சேவை மைய கிராம நிலை தொழில்முனைவோரை (CSC VLEs) அவர் கேட்டுக்கொண்டார். தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே ஆதார் சேவைகளைப் பெற அதிக அளவிலான ஊரக மக்களுக்கு இந்த வசதி உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுச் சேவை மையங்களின் மூலம் ஆதார் புதுப்பித்தல் சேவைகளை வழங்குவது, கொவிட் 19 பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் போது, ஒரு பெரிய உதவியாக அமைந்துள்ளது. ஆதாரைப் புதுப்பிப்பதற்கு கூடுதலாக இந்த 20,000 மையங்கள் கிடைத்திருப்பதன் மூலம் மக்கள் குறிப்பாக கிராமப்பகுதிகளில் வசிப்போர், இந்த வேலைக்காக வங்கிக் கிளைகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ உள்ள ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

 

***


(Release ID: 1618978)