சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில, மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர்களுடன் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்
Posted On:
24 APR 2020 7:42PM by PIB Chennai
“உங்கள் வரம்பிற்கு உட்பட்ட மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நமது போராட்டத்தில் நிலைமையை கட்டுக்குள் வைத்து இருப்பதற்காக உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்” என டாக்டர் ஹர்ஷ் வர்தன் மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்விக்கான அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் கூறினார். நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் முன் தயாரிப்பு நிலைகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்த பரிசீலனை கூட்டத்தின்போது காணொலிக் காட்சியின் மூலம் அவர் இவ்வாறு கூறினார். இந்தக் கலந்துரையாடலின்போது மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தின் துணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபே அவர்களும் உடனிருந்தார்.
இந்த வைரஸ் தாக்குதலின் விளைவாக நாட்டில் இறப்பு விகிதம் 3 சதவீதம் ஆகவும் மீட்பு விகிதம் 20 சதவிதத்திற்கும் அதிகமாகவும் உள்ளது எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முயற்சிகள் குறித்துப் பேசுகையில், "எங்கள் எதிரி இருக்கும் இடத்தை நாங்கள் அறிவோம். முறையான, தரம் மிக்க, வழிகாட்டலுடன் கூடிய பதில் நடவடிக்கையின் மூலம் இந்த நிலையை வெற்றி கொள்ளும் திறனுடன் நாம் இருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.
“கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான அன்றாடப் போராட்டத்தில் கைகொடுக்கவும், நிலைமை குறித்து பரிசீலிக்கவும் மாநிலங்களுக்கு தொழில்நுட்ப அதிகாரிகளை நாங்கள் அனுப்பியுள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நோய் எதிர்ப்பு சோதனைகள் குறித்த பிரச்சினையில், “சோதனையின் முடிவுகள் இடத்திற்கு இடம் மாறுபடும், அதை நம்ப முடியாது. மேலும், அதன் துல்லியம் குறித்து உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஐ.சி.எம்.ஆர் தனது சொந்த ஆய்வகங்களில் சோதனைகளையும் மற்றும் கருவிகளின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்து வருகிறது, விரைவில் புதிய வழிகாட்டுதல்களை அது வழங்கும். ” என்றும் அவர் கூறினார்.
உடல் கவசங்கள், என் 95 முகக்கவசங்கள், சோதனைக் கருவிகள், மருந்துகள், சுவாசக் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றின் தேவை மற்றும் தேவையான இருப்பு குறித்து ஒவ்வொரு மாநிலத்துடனும் அவர் கலந்து ஆலோசித்தார். மேலும் இந்த சிக்கலான சூழ்நிலையில் இந்தப் பொருட்களில் பற்றாக்குறை ஏதும் இல்லாத வகையில் மத்திய அரசு உறுதிப்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.
(Release ID: 1618163)
Visitor Counter : 146
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada