உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் குறித்து நிலைமையை ஆய்வு செய்து, மாநிலங்களின் முயற்சிகளை சிறப்பாக மேன்மைப்படுத்துவதற்கு அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுக்களை மத்திய அரசு உருவாக்கியது

Posted On: 24 APR 2020 5:10PM by PIB Chennai

நாட்டில் சில மாவட்டங்களில் பொது முடக்கநிலை விதிகள் மீறப்படுவதால், தீவிர சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகி கோவிட்-19 நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டு, பொது மக்கள் நலன்களைப் பாதிப்பதாக உள்ளது. களத்தில் முன் நின்று பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் மீது தாக்குதல், காவல் துறையினர் மீது தாக்குதல், சமூக இடைவெளி நடைமுறைகளை சந்தைகளில் மீறுதல், தனிமைப்படுத்தல் மையங்கள் அமைப்பதை எதிர்த்தல் போன்ற வகைகளில் விதிமுறைகள் மீறப்படுகின்றன.

இதையடுத்து அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழுக்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. குஜராத்துக்கு இரண்டு குழுக்களும், தெலங்கானா, தமிழகம், மகாராஷ்டிரா (முன்னதாக அமைக்கப்பட்ட மும்பை-புனே குழுவின் பொறுப்புடைமை பகுதி விரிவாக்கம் செய்யப்படுகிறது) மாநிலங்களுக்கு தலா ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் நேரடியாக நிலைமையை ஆய்வு செய்து, மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மாநில நிர்வாகங்களுக்கு வழங்குவதுடன், மத்திய அரசுக்கு தங்களது அறிக்கையை  அனுப்பி வைக்கும்.

ஆமதாபாத் மற்றும் சூரத் (குஜராத்); தானே (மகாராஷ்டிரா); ஹைதராபாத் (தெலங்கானா); சென்னை (தமிழ்நாடு) போன்ற முக்கிய தீவிர பாதிப்புப் பகுதி மாவட்டங்கள் அல்லது தீவிர பாதிப்புப் பகுதி நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் மாவட்டங்களில் நிலைமை தீவிரமாக உள்ளது. மத்திய அரசின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, கோவிட்-19 தொற்று தாக்குதலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளின் முயற்சிகளை மேன்மைப்படுத்த இந்தக் குழுக்கள் உதவி செய்யும்.

பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி முடக்கநிலை அமல் செய்யப்படுதல், மக்களின் ஒத்திசைவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் நிலை, வீடுகளை விட்டு வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளி வரம்புகளை கடைபிடித்தல், மருத்துவமனை கட்டமைப்புகள், மருத்துவமனை வசதிகளின் ஆயத்தநிலை மற்றும் மாவட்டத்தில் உள்ள மாதிரிகள் பரிசோதனை புள்ளிவிவரங்கள், சுகாதாரத் துறை அலுவலர்களின் பாதுகாப்பு, மருத்துவப் பரிசோதனைக்கான உபகரணத் தொகுப்புகள் கிடைக்கும் நிலை, தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் முகக் கவச உறைகள் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்கும் நிலை, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான நிவாரண முகாம்களில் உள்ள சூழ்நிலைகள் உள்ளிட்ட அம்சங்களை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும்.

தீவிர பாதிப்புப் பகுதி மாவட்டங்கள் / அந்த நிலையை நோக்கிச் செல்லும் மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் இல்லாமல் விதிமீறல்கள் அனுமதிக்கப்பட்டால், பெரிய அளவில் நோய்த் தொற்று பரவக் கூடிய அல்லது தொகுப்பு நிலையில் பரவக் கூடிய ஆபத்து ஏற்பட்டு, நாட்டு மக்களுக்கு தீவிர சுகாதாரக் கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் 35(1), 35(2)(a), 35(2)(e) மற்றும் 35(2)(i) பிரிவுகளின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்தக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைவிட கடுமையான விதிமுறைகளை மாநில அரசுகள் அமல் செய்யலாம் என்றாலும், அவை நீர்த்துப் போகும்படி செய்யக் கூடாது என்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது(Release ID: 1617942) Visitor Counter : 220