பிரதமர் அலுவலகம்

சுய சார்போடும், தன்னிறைவோடும் இருப்பது தான் கொரோனா பெருந்தொற்றில் இருந்து கற்று கொண்ட மிகப்பெரிய பாடம்: பிரதமர்.

'இரண்டு அடி தூரம்' - கொவிட்-19ஐ எதிர்த்து போராட கிராமப்புற இந்தியாவின் மந்திரம் இது தான்: பிரதமர்.

இ-கிராம் சுவாராஜ்யா செயலி மற்றும் ஸ்வமித்வா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Posted On: 24 APR 2020 2:57PM by PIB Chennai

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2020 முன்னிட்டு, நாடெங்கிலும் உள்ள கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது, ஒருங்கிணைந்த -கிராம் சுவாராஜ்யா வலைதளம் மற்றும் செயலியையும், ஸ்வமித்வா திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களை தயாரிக்கவும், அமல்படுத்தவும் -கிராம் மின்னணு சுவாராஜ்யா உதவுகிறது. நிகழ்நேரக் கண்காணிப்பையும், பொறுப்புக்கூறலையும் இந்தத் தளம் உறுதி செய்கிறது. கிராமப் பஞ்சாயத்து அளவு வரை டிஜிட்டல்மயமாக்கலில் இந்த வலைத்தளம் ஒரு முக்கியமான படியாகும்.

ஆறு மாநிலங்களில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்வமித்வா திட்டம், ஆளில்லாத சிறு விமானங்கள் மூலமும், சமீபத்திய கணக்கெடுப்பு முறைகளின் படியும் கிராமப்புறக் குடியிருப்பு நிலங்களை ஆவணப்படுத்த உதவுகிறது. வரைமுறைப்படுத்தப்பட்ட திட்டமிடுதல், வருவாய் வசூல் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள சொத்துரிமைகள் பற்றிய தெளிவை வழங்குதல் ஆகியவற்றை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் கடன் பெற விண்ணப்பிக்க இது வழிகளை திறக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் உடைமைப் பத்திரங்கள் மூலமாக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படலாம்.

நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர்களிடம் பேசிய பிரதமர், மக்கள் வேலை செய்யும் விதத்தை கொரோனா மாற்றியுள்ளதாகவும், நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளதாகவும் கூறினார். ஒருவர் எப்போதுமே சுய சார்போடு இருக்க வேண்டும் என்று இந்த பெருந்தொற்று கற்றுக்கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

"நாம் என்றுமே கற்பனை செய்திராத சவால்களையும், சிக்கல்களையும் இந்தப் பெருந்தொற்று நமக்குக் கொடுத்துள்ள போதிலும், வலிமையான செய்தியுடன் கூடிய ஒரு நல்ல படிப்பினையையும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. சுய சார்போடும் தன்னிறைவோடும் நாம் இருக்க வேண்டும் என்று அது நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நம் நாட்டுக்கு வெளியே நாம் தீர்வுகளை தேடக்கூடாது என்று அது நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இது தான் நாம் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம்."

"ஒவ்வொரு கிராமமும் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் தன்னிறைவோடு இருக்க வேண்டும். அதே போல், ஒவ்வொரு மாவட்டமும் அதன் அளவில் தன்னிறைவோடு இருக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலமும் அதன் அளவில் தன்னிறைவோடு இருக்க வேண்டும், மற்றும் ஒட்டுமொத்த நாடும் அதன் அளவில் தன்னிறைவோடு இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

கிராமங்களுக்கு தன்னிறைவை அளிப்பதற்கும், கிராமப் பஞ்சாயத்துகளை வலிமையாக்குவதற்கும் முயற்சிப்பதில் அரசு கடினமாக உழைத்ததாக திரு. நரேந்திர மோடி கூறினார்.

"முன்பிருந்த வெறும் 100இல் இருந்து, கிட்டத்தட்ட 1.25 லட்சம் பஞ்சாயத்துகள் அகண்ட அலைவரிசை இணையம் மூலம் கடந்த ஐந்து வருடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல், பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது," என்றார் அவர்.

இந்தியாவிலேயே கைபேசிகள் தயாரிக்கப்படுவதால், திறன்பேசிகளின் விலை குறைந்து ஒவ்வொரு கிராமத்தையும் குறைந்த விலை திறன்பேசி அடைந்துள்ளதாகக் கூறிய அவர், இது டிஜிட்டல் கட்டமைப்பை சிற்றூர் அளவில் மேலும் வலுவடையச் செய்யும் என்றார்.

"பஞ்சாயத்துகளில் வளர்ச்சி, நாட்டின் மேம்பாட்டையும், ஜனநாயகத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும்," என்று பிரதமர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சி, பிரதமருக்கும் கிராம பஞ்சாயத்து பிரிதிநிதிகளுக்கும் நேரடி உரையாடலை ஏற்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.

ஊராட்சித் தலைவர்களுடனான உரையாடலின் போது, தனி நபர் இடைவெளியை எளிமையான முறையில் விளக்க 'இரு கெஜ தூரம்' என்னும் மந்திரத்தை வழங்கியதற்காக, கிராமங்களை பிரதமர் பாராட்டினார்.

ஊரக இந்திய கொடுத்த 'இரண்டு அடி தூரம்' என்னும் முழக்கம் மக்களின் அறிவைப் பறைசாற்றியதாக அவர் கூறினார். இந்த சுலோகத்தை மேலும் பாராட்டிய அவர், தனி நபர் இடைவெளியை மேற்கொள்ள மக்களை அது ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

தன்னிடத்தில் உள்ள அளவான வளங்களுக்கிடையிலும் சவாலை உத்வேகத்துடன் எதிர்கொண்ட இந்தியா, புதிய சக்தி மற்றும் புதிய வழிகளின் மூலம் முன்னேறிச் செல்லும் தனது உறுதியைக் காட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

"கிராமங்களின் ஒன்றிணைந்த சக்தி தான் இந்தியா முன்னேறிச் செல்வதற்கு உதவுகிறது," என்று அவர் கூறினார்.

இந்த முயற்சிகளுக்கிடையே, நம்மில் ஒருவரின் கவனக்குறைவு கூட ஒட்டுமொத்த கிராமத்தையே ஆபத்தில் தள்ளி விடும், அதன் பின் நிம்மதிக்கு வாய்ப்பே இருக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார்.

தனிமைப்படுத்துதல், தனி நபர் இடைவெளி மற்றும் முகங்களைக் கவசங்களைக் கொண்டு மறைத்தல் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டே, தங்களது கிராமங்களில் தூய்மைப் பிரச்சாரங்களுக்காக வேலை செய்து, வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர தேவையுள்ளோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19இன் பல்வேறு அம்சங்கள் குறித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் சரியான தகவலை வழங்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களை ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், தங்கள் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்குவதை உறுதி செய்யுமாறு பஞ்சாயத்துப் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் சிறப்பான சுகாதாரச் சேவைகள் பெறுவதை உறுதி செய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெரிய நிவாரணமாக உருவாகியுள்ளதாகக் கூறிய அவர், கிட்டத்தட்ட ஒரு கோடி ஏழை நோயாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

e-NAM மற்றும் GEM வலைதளம் ஆகிய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி கிராமப்புறத் தயாரிப்புகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பெரிய சந்தைகளை அடையுமாறு அவர் வலியுறுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் அகிய இடங்களில் இருக்கும் ஊராட்சித் தலைவர்களுடன் பிரதமர் உரையாடினர்.

தன்னாட்சி என்பது கிராமங்களின் தன்னாட்சி அடிப்படையிலானது என்னும் மகாத்மா காந்தியின் கருத்தாக்கத்தை அவர் நினைவு கூர்ந்தார். சாஸ்திரங்களை மேற்கோள் காட்டிய அவர், ஒற்றுமை தான் அனைத்து வலிமைக்கும் ஆதாரம் என்று மக்களுக்கு நினைவூட்டினார்.

பஞ்சாயத்து ராஜ் தினத்துக்காகவும், தங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகள், ஒற்றுமை மற்றும் உறுதியால்  கொரோனாவை வீழ்த்தியதற்காகவும், பிரதமர் ஊராட்சி தலைவர்களை வாழ்த்தினார்.

***



(Release ID: 1617884) Visitor Counter : 280