சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா வைரசால் எழுந்துள்ள மோசமான சவாலை எதிர்க்கொள்ளும் அனைத்து ஆற்றலையும், வளத்தையும் இந்தியா பெற்றுள்ளது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 23 APR 2020 9:10PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பி்ல் இடம்பெற்றுள்ள நாடுகளின் சுகாதாரத்துறை  அமைச்சர்களின்  கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கலந்துக் கொண்டு பேசுகையில், ‘‘கோவிட்-19 கொள்ளை நோயால் ஏற்பட்டுள்ள நிலைமையை இந்தியா மிக சாதகமாகவும், முன்னெச்சரிக்கையுடனும், சிறப்பாகவும் கையாண்டு வருகிறது’’ என்றார்.
தொடக்கத்தில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், ‘‘உலகளவில் தற்போது கோவிட்-19 தொற்று மிக மோசமான நிலையில் உள்ளது. இறப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது’’ என்றார். ‘‘சோதனையான நேரங்களில் நாம் ஒன்றுக்கூடி ஆலோசனை நடத்துகிறோம். அதேபோல், கோவிட்-19க்கு எதிரான நமது சிறப்பான நடவடிக்கைகள் குறித்து பரஸ்பரம் பகிர்ந்துக் கொண்டு  ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டாக்டர் ஹர்ஷ்வர்தன் மேலும் கூறுகையில், ‘‘கோவிட்-19 தொற்றுக்கு எதிராக முதலில் செயல்பட்ட நாடு இந்தியாதான். உலக நாடுகளுக்கு முன்னதாக இந்தியா சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு முக்கியக்காரணம், எங்களது கொரோனா சேவகர்களின் மதிப்புமிக்க மற்றும் சிறப்பான சேவைகள்தான்’’ என்றார். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்லது  நோயாளிகளை கண்காணிக்க அரசு துறைகள் எடுத்த  சீரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், ‘‘நாங்கள் எதிராளியையும் அது எங்கிருக்கிறது என்பதையும் அறிவோம். இந்த எதிராளியை சமூக கண்காணிப்பு, பல்வேறு அறிவுறுத்தல்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சிறப்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தும் திறனை கொண்டுள்ளோம்’’ என்றார்.

கோவிட்-19 தொற்று பிரச்னை, நாட்டின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அமைப்பை உறுதி செய்யவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று கூறிய அமைச்சர், ‘‘கோவிட்-19 தொற்று பரிசோதனைக்கு ஆரம்பத்தில் புனேயில் மட்டும்தான் ஒரே ஒரு ஆய்வகம் இருந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களில், அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,000 சேகரிப்பு மையங்களுடன், 87 தனியார் ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 5 லட்சம் பேருக்கு கோவிட்-19 சோதனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த உள்ளோம். இதேபோல், தினசரி பரிசோதனை திறனான 55,000ஐ, மே 31ம் தேதிக்குள் ஒரு லட்சமாக உயர்த்த உள்ளோம்’’ என்றார்.



(Release ID: 1617754) Visitor Counter : 191