சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் 19 சமீபத்திய தகவல்கள்

Posted On: 22 APR 2020 4:33PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி மூலமாக மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில், மருத்துவத் துறையினரின் பாதுகாப்பு குறித்த அவர்களது கவலைகளைப் போக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர், அவர்களுடைய நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

 

கோவிட் t9 தொற்று தொடர்பான சேவைகள் புரியும், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம், சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய காலங்களில், மற்ற எல்லா துறைகளில் உள்ளவர்களை விட, மருத்துவர்கள் தான் தங்களது சேவைகளையும், திறன்களையும் கொண்டு, மக்களைக் காப்பாற்றக்கூடிய, தனித்துவமான நிலைமையில் உள்ளனர் என்றும் கூறப்பட்டது. மனித ஆற்றல் மேம்பாடு, பணியாளர்களுக்கான திறன்களை  அதிகரிப்பதற்கான பயிற்சியளித்தல், மருத்துவப் பாதுகாப்பு வழங்குதல், பணியாளர்களுக்கான வழிகாட்டி விதிமுறைகள் ஏற்படுத்துதல், குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா செய்தல், உளரீதியான ஆதரவளித்தல், முன்னணியில் நின்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பயிற்சிளித்தல், ஆயுள்காப்பீடு வழங்குதல், உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

பெருந்தொற்றுநோய் சட்டம் 1897ன் கீழ் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர சட்டம் (ஆர்டினன்ஸ்) பிரகடனப்படுத்தப்படவேண்டும் என்று இன்று அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது

 

ராபிட் ஆன்டிபாடி பரிசோதனை செய்வதற்கான வரைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே, பெரும்பாலும் இந்த ஆன்டிபாடி ராப்பிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

உலக அளவிலும், இந்த டெஸ்ட் பரிசோதனையின் பயன்கள் தெரிய வந்து கொண்டிருக்கின்றன. தனிநபர்களில் ஆன்டிபாடிகள் உருவாவதைக் கண்டுபிடிப்பதற்கு, இந்த பரிசோதனை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள், கள நிலைமைகளைச் சார்ந்ததாகவும் இருக்கும்ஐ சி எம் ஆர் குறிப்பிட்டுள்ளபடி,  கோவிட் 19  தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைக்கு மாற்றாக, இந்த சோதனையைப் பயன்படுத்தப்பட முடியாது.

 

ராபிட் ஆன்டிபாடி டெஸ்டுகள், கள நிலைமைகளில் எவ்வாறு, எந்த அளவிற்கு பயன்படுத்தப்படலாம் என்பதை மதிப்பீடு செய்வதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், விவரங்களைச் சேகரிப்பதற்கான உதவிகளை அளிப்பதாக ஐ சி எம் ஆர்  உறுதிளித்துள்ளது. ஐ சி எம் ஆர், மாநிலங்களுக்கு, தொடர்ந்து அறிவுரை வழங்கும். இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அவை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தேசிய தகவல் மையத்தின் மூலமாக 1921 என்ற எண்ணில் இருந்து, குடிமக்களுக்கு, அவர்களின் அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, அலைபேசி வாயிலான ஆய்வு ஒன்றை மத்திய அரசு நடத்தவிருக்கிறது. இது உண்மையாகவே நடத்தப்படும் ஆய்வாகும். கோவிட் 19 தொற்று அறிகுறிகள் உள்ளனவா, எங்கெங்கு பரவலாக உள்ளன என்பதைக் கண்டறிவதற்கான முறையான கருத்துக்கள் கிடைக்க உதவும் வகையில், குடிமக்கள் அனைவரும் இந்த ஆய்வில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேசமயம் இதுபோன்ற ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் வேறு ஏதேனும் எண்ணிலிருந்து போலியான அழைப்புகள் வந்தால் அல்லது வேறு எண்கள் ஏதாவதிலிருந்து அல்லது மாற்று அழைப்புகள் வந்தால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்இந்த ஆய்வு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் அதிகாரபூர்வ தன்மையையும் மக்களுக்கு எடுத்துக்கூறி, மற்ற போலி எண்கள் அல்லது ஏமாற்றுபவர்கள் அல்லது வேறு எண்களில் இருந்து வரக்கூடிய ஏமாற்று அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத் துறையின் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் மற்றும் இதர துறைகளின் இணையதள முகப்புப் பக்கத்தில் இந்த ஆய்வு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 

இதுவரை 3870 நோயாளிகள் குணமடைந்திருக்கின்றனர். குணமடைவோர் விகிதம் 19.36சதவீதம். நேற்று முதல் இதுவரை, 1383 பேருக்கு தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கோவிட் 19 தொற்று மொத்தம் 19984 பேருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1617228) Visitor Counter : 306