நிதி அமைச்சகம்

புதிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களின் ஐந்தாவது ஆண்டு கூட்டத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு

Posted On: 20 APR 2020 9:20PM by PIB Chennai

புதிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களின் ஐந்தாவது ஆண்டு கூட்டத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.

பிரிக்ஸ் நாடுகளால் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) 2014ல் புதிய வளர்ச்சி வங்கி (என்.டி.பி.) உருவாக்கப்பட்டது. உலகளாவிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக தற்போதைய பன்முக முயற்சிகளையும், மண்டல நிதி நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கு, மாறிவரும் பொருளாதாரம் மற்றும் வளரும் நாடுகளுக்கு உதவிடவும், பிரிக்ஸ் நாடுகளில் நீடித்த வளர்ச்சித் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் இந்த வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கி இந்தியாவின் 14 திட்டங்களுக்கு இதுவரை அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கு 4,183 மில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய திருமதி நிர்மலா சீதாராமன், உலக அளவிலான நம்பகமான நிதி நிறுவனம் என்ற செயல்பாட்டை நிலை நிறுத்தியது, நீடித்த மற்றும் பங்கேற்புடன் கூடிய அணுகுமுறையை உருவாக்குதல் பணியை வெற்றிகரமாக செய்தல் ஆகியவற்றுக்காக புதிய வளர்ச்சி வங்கிக்கு பாராட்டு தெரிவித்தார்.

கோவிட்-19 பற்றிக் குறிப்பிட்ட அவர், பிரிக்ஸ் நாடுகளுக்கு துரிதமாக 5 பில்லியன் டாலர் அளவுக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுத்ததை அமைச்சர் பாராட்டினார். கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்க இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் அவசரகால உதவியாக வழங்கியதும் இதில் அடங்கும். இந்த வசதியின் கீழ் வழங்கும் உதவியை 10 பில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். கோவிட்-19 அவசரகால தேவைக்கான நிதியை பிரதமர் திரு. நரேந்திர மோடி உருவாக்கியிருப்பது பற்றியும், கோவிட்-19 தொற்று தாக்குதலை சமாளிக்க, உதவி தேவைப்படும் நாடுகளுக்கு முக்கியமான மருந்துகளை அளிப்பதில் இந்தியாவின் முயற்சிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.  உரிய காலத்தில் முக்கியமான மருந்துகளை அனுப்பியதற்காக பிரேசில் பிரதமர், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கோவிட்-19 தொற்று தாக்குதலை சமாளிக்க இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். சுகாதார கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கு 2 பில்லியன் டாலர்கள் (ரூ.15 ஆயிரம் கோடி) ஒதுக்கியிருப்பதையும், ஏழைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மக்களின் சிரமங்களைக் களைவதற்காக 25 பில்லியன் டாலர் அளவிலான உதவித் திட்டங்கள் பற்றியும், களத்தில் முன் நின்று பணியாற்றும் 2.2 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள்  மற்றும் பிறருக்கு ஒவ்வொருவருக்கும் 67 ஆயிரம் டாலர் (ரூ. 50 லட்சம்) காப்பீட்டு வசதி, சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை அமலாக்கப் பிரிவுகளுக்கு நிவாரணம் அளித்தது, நிதிக் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியது ஆகியவற்றை அமைச்சர் பட்டியலிட்டார்.

 பன்முக வளர்ச்சி வங்கி  / சர்வதேச நிதி நிறுவனங்களின் வரிசையில் ஜி20 அமைப்பில் சேருவதற்கு புதிய வளர்ச்சி வங்கி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இறுதியாக, நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதில் புதுமை சிந்தனையுடன் கூடிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் புதிய வளர்ச்சி வங்கியை அமைச்சர் வலியுறுத்தினார்.



(Release ID: 1616760) Visitor Counter : 128