விவசாயத்துறை அமைச்சகம்
களத்தில் சேவை புரிபவர்களே உண்மையான கொரோனோ வீரர்கள்.
ஊரடங்கின் போது ரபி பருவப்பயிர்கள் அறுவடைக்கும், கோடைப்பயிர்கள் சாகுபடிக்கும் எந்த இடையூறும் இல்லை.
ரபி பயிர்களில், நாட்டில் 310 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கோதுமையில் 67 சதவீதம் வரை அறுவடையானது.
கடந்த ஆண்டு இதே காலத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் 17 வரை, கோடைப்பருவ பயிர் சாகுபடி 14 சதவீதம் அதிகரிப்பு.
மத்திய, மாநில அரசுகளின் உரிய காலத் தலையீடு, அனைத்து இடையூறுகளையும் தாண்டி வயல்களில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வியர்வை சிந்தப் பாடுபட்டு இலக்கை மவுனமாக எட்ட உதவியது.
Posted On:
19 APR 2020 3:28PM by PIB Chennai
இன்று நிலவும் நிலையற்ற சூழலுக்கு இடையே, உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒரே செயல்பாடான விவசாய நடவடிக்கைகள் நம்பிக்கையை அளித்து வருகின்றன. தற்போதைய அனைத்து இடையூறுகளையும் தாண்டி, இந்தியா முழுவதும் எண்ணற்ற விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்கள் வியர்வையை நிலத்தில் சிந்திப் அரும்பாடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கும், கோடைப் பருவப்பயிர்கள் விதைப்புக்கும் எந்தத் தடங்கலும் இல்லாத அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் சரியான நேரத்தில் தலையிட்டு உதவியுள்ளன. விவசாயிகளின் மவுனமான முயற்சிகளுக்குப் இவை பக்கபலமாக அமைந்தன.
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய ஒருங்கிணைந்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள போதிலும், விவசாய நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறவேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் தலையிட்டதுடன் அறிவிக்கப்பட்ட சலுகைகள் நம்பிக்கையூட்டும் பயன்களை அளித்துள்ளன. வேளாண் பணிகளின் போது பின்பற்ற வேண்டிய விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளிகளுக்கான விதிமுறைகள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, ரபி பருவப்பயிர்களின் அறுவடையும், கோடைப் பருவப்பயிர்களின் சாகுபடியும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரபி பருவப்பயிர்கள் அறுவடையில், நாட்டில், மொத்தம் 310 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விதைக்கப்பட்ட கோதுமையில், 63 முதல் 67 சதவீதம் வரை ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டுள்ளது. மாநில வாரியாக அறுவடை அதிகரிக்கப்பட்டு, மத்தியப்பிரதேசத்தில் 90 முதல் 95 சதவீதமும், ராஜஸ்தானில் 80 முதல் 85 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 60 முதல் 65 சதவீதமும், ஹரியானாவில் 30 முதல் 35 சதவீதமும், பஞ்சாபில் 10 முதல் 15 சதவீதமும் அறுவடை முடிந்துள்ளது. ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அறுவடை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாநிலங்களில் ,இந்த மாத இறுதிக்குள் அறுவடை முடிவடைந்து விடும். அறுவடை மற்றும் கதிரடிப்பு பணிகளில் பஞ்சாப் 18000 தொகுப்புகளையும், ஹரியானா 5000 தொகுப்புகளையும் ஈடுபடுத்தியுள்ளது.
161 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருப்பு வகைகளில், கடலை, பயறு, உளுந்து, பாசிப்பயறு, பட்டாணி அறுவடை ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. 54.29 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கரும்பில், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்துவிட்டது. தமிழகம், பீகார், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 92 முதல் 98 சதவீதம் அறுவடை முடிவடைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில், 75 முதல் 80 சதவீதம் அறுவடை முடிவடைந்து, மே மாதம் நடுப்பகுதி வரை இது தொடரும்.
ஆந்திரா, அசாம், சத்தீஷ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, ஒடிசா, தமிழகம், தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 28 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட ரபி பருவ நெல்லின் அறுவடை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நெற்கதிர்கள் இன்னும் முற்றாத நிலையில், அறுவடைக்காலம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
எண்ணெய் வித்துக்களைப் பொறுத்தவரை, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, மே.வங்கம், ஜார்க்கண்ட், குஜராத், சத்தீஷ்கர், பீகார், பஞ்சாப், அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் 69 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கடுகு அறுவடை நிறைவடைந்துள்ளது. 4.7 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலை அறுவடை 85 முதல் 90 சதவீதம் முடிந்துள்ளது.
கோடைப்பருவப் பயிர்கள் சாகுபடி ,இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் பழமையான முறையாகும். இது குறிப்பாக, கூடுதல் உணவு தானிய உள்ளூர் தேவைக்காகவும், கால்நடைத் தீவனத்துக்காகவும் பின்பற்றப்படுகிறது. பருப்பு வகைகள், கடின தானியங்கள், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற கோடைப்பருவப் பயிர் சாகுபடியில், அறிவியல் சாகுபடி முன்முயற்சிகளை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இது தவிர, கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் சில மாநிலங்களில், தண்ணீர் இருப்பதைப் பொறுத்து, விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
2020 ஏப்ரல் 17 வரை, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் கோடைப்பருவ சாகுபடி 14 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், மழைப்பொழிவு 14 சதவீதம் அதிகரித்துள்ளதால், கோடைப்பருவப் பயிர்களை சாகுபடி செய்ய உகந்த சூழல் நிலவுகிறது. ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய நிலவரப்படி, கோடைப்பருவ சாகுபடி பரப்பளவு 38.64 லட்சம் ஹெக்டேரில் இருந்து 52.78 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், பருப்பு வகைகள், கடின தானியங்கள், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவும் 14.79 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
மேற்குவங்கம், தெலங்கானா, ஒடிசா, அசாம், குஜராத், கர்நாடகா, சத்தீஷ்கர், தமிழகம், பீகார், மாகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில், சுமார் 33 லட்சம் ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், சத்தீஷ்கர், பீகார், பஞ்சாப், கர்நாடாகா, மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில், சுமார் 5லட்சம் ஹெக்டேரில் பருப்புவகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மேற்குவங்கம், கர்நாடகா, குஜராத், உத்திரப்பிரதேசம், மாகாராஷ்ட்ரா, தமிழகம், தெலங்கானா, சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் சுமார் 7.4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் பெய்த மழையின் பயனாக, சணல் சாகுபடி தொடங்கியுள்ளது.
கோடை சாகுபடி கூடுதல் வருமானத்தை அளிப்பதுடன், ரபி மற்றும் கரீப் பருவங்களுக்கு இடையே, ஏராளமான வேலை வாய்ப்புகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. கோடைப்பயிர்கள், குறிப்பாக பருப்பு வகைகளைப் பயிரிடுவதன் மூலம் மண்வளமும் மேம்படுகிறது. எந்திரங்கள் மூலம் விதைப்பு செய்வது கோடைப்பயிர்களுக்கு பேருதவியாக அமைகிறது.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் , அறுவடைப்பணிகள் சரியான நேரத்தில் முடிவடைவதை உறுதி செய்துள்ளதுடன் மட்டுமல்லாமல், விவசாயிகளின் கடின உழைப்பு, கோடைப்பயிர் சாகுபடியை அதிக பரப்பளவில் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
*****
(Release ID: 1616308)
Visitor Counter : 416
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada