ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கொவிட்-19 ஊரடங்கு முடக்கத்தின் போது கிராமப்புற பரம ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் சமுதாய சமையலறைகள் உணவு வழங்குகின்றன

Posted On: 13 APR 2020 1:11PM by PIB Chennai

உலகப் பெருந்தொற்று நோயான கொவிட்-19 பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் பட்டினிக்கு இலக்காகும் சூழல் நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரவியுள்ள பெருந்தொற்று மற்றும் முடக்கத்தால், தினக்கூலித் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தோர், வீடற்றவர்கள், ஏழைகள் மற்றும் வேலை தேடி வந்து செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவர்களுக்கு உணவு அளிப்பதற்காக சமுதாய சமையலறைகள் உருவாகி வருகின்றன. உணவு கிடைக்காத மக்களுக்கு குறைந்த விலையில் சத்துள்ள உணவை, சில நேரங்களில் இலவசமாகவும் வழங்குவதே சமுதாய சமையலறைகளின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் உள்ள சுய உதவிக்குழு கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் சமுதாய சமையலறைகள் மற்றும் தீதிஸ் கபே எனப்படும் உணவு விடுதிகளை இயக்க நியமிக்கப்படுகின்றனர். பீகார், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில், 10,000 சமுதாய சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 75 மாவட்டங்களில் செயல்படும் இந்தச் சமையலறைகள் உணவின்றித் தவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 70,000 பேருக்கு தினசரி இரண்டு வேளை உணவை வழங்குகின்றன. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

நடமாடும் காய்கறிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவை, சவால் மிகுந்த நேரங்களில் சுய உதவிக்குழு மகளிர் அளிக்கும்  தீர்வாகும். ஒடிசா, சத்தீஷ்கரில் பெண்கள் ரேசன் பொருள்களுடன் முட்டைகளையும் விநியோகித்து வருகின்றனர். இந்த முறையின் மூலம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு தேவையானவை வழங்கப்படுகின்றன.

பொது விநியோகக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ரேசன் அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதில் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார், ஒடிசா, சத்தீஷ்கர் மாநிலங்களில், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் பிரிவினர், குழந்தைகள், தாய்மார்கள், வளர் இளம் பருவத்தினர் ஆகியோருக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து தொடர்பான உரிமைகளை வழங்குவதில் முன்கள சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

தங்கள் பிரிவுகளுக்குள் பாதுகாப்பான சுகாதார முறைகளைப் பின்பற்றி, சமூகப்பொறுப்புணர்வு மிகுந்தவர்களின் பங்களிப்பில் தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி, இந்தப் பெண்கள் கொவிட்-19க்கு எதிராகத் தீவிர ஈடுபாட்டுடனும், சிரத்தையுடனும் பாடுபட்டு வருகின்றனர்.



(Release ID: 1613918) Visitor Counter : 209