நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதி

Posted On: 08 APR 2020 8:47PM by PIB Chennai
நாடு தழுவிய ஊரடங்கு நேரத்தில், ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உணவு தேவைப்படும் மக்களுக்கும் சமைத்த உணவை வழங்கும் பணியில் அரசுசாரா நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு தடையில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த, இதுபோன்ற அமைப்புகளுக்கு கோதுமை, அரிசி ஆகியவற்றை மின்னணு ஏல முறை அடிப்படையில் இல்லாமல், திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின் (Open Market Sale Scheme - OMSS) விலையில் வழங்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்புகள், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து ஒரே நேரத்தில் ஒன்று முதல் 10 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்துகொள்ளலாம். நாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடங்குகளுடன் இந்திய உணவுக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு கிடங்குகள் இருப்பதன் மூலம், இந்த நெருக்கடியான நேரத்தில் அரசு சாரா அமைப்புகளுக்கு உணவுதானியங்கள் தடையின்றி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். இடம்பெயர்ந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைத்து உணவு வழங்க முடியும். உணவுதானியங்கள் தேவைப்படும் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட உணவுதானியங்கள் குறித்த விவரங்கள், மாவட்ட ஆட்சியர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். உணவுதானியங்களை நாடு முழுமைக்கும் விரைந்து கொண்டு செல்வதற்காக, ஊரடங்கு காலம் தொடங்கியது முதலே, உபரி மாநிலங்களிலிருந்து 22 லட்சம் டன் உணவு தானியங்களை இந்திய உணவுக்கழகம் அனுப்பியுள்ளது. பிரதம மந்திரியின் ஏழைகள் நலனுக்கான உணவுத்திட்டத்தின் கீழ், இலவசமாக விநியோகிப்பதற்காக மாநில அரசுகளுக்கு 10 லட்சம் டன் உணவுதானியங்களை ஏற்கனவே வழங்கியுள்ளது. மார்ச் 24, 2020 முதல் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்கமான உணவு தானிய ஒதுக்கீட்டுத் தேவையை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு 32 லட்சம் டன் உணவுதானியங்களை இந்திய உணவுக் கழகம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உணவுதானிய இருப்பு நிலவரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், அனைத்து இடங்களிலும் போதுமான அளவில் இருப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏப்.7, 2020 நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்தில் 5.442 கோடி மெட்ரிக் டன் (3.062 கோடி மெட்ரிக் டன் அரிசி, 2.38 கோடி மெட்ரிக் டன் கோதுமை) உணவுதானியங்கள் உள்ளன. பொது விநியோகத் திட்டம் மற்றும் பிற அரசுத் திட்டங்களுக்குப் போதுமான உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், எந்தவொரு விலை உயர்வும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், திறந்தவெளி சந்தையில் விநியோகம் இருப்பதையும் இந்திய உணவுக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. விநியோகம் மற்றும் விலையை சரிசெய்யும் வகையில், திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் அடிப்படையில், மாநில அரசுகளுக்கு அரிசியும், மாவு ஆலைகளுக்கு கோதுமையும் வழங்கப்படுகிறது. இதுவரை 1.45 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 1.33 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், நாடு முழுவதும் உணவு தானியங்கள் வழக்கமான அளவில் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. *****

(Release ID: 1612453) Visitor Counter : 290