விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மாநில வேளாண் துறை அமைச்சர்களுடன் திரு. நரேந்திர சிங் தோமர் தலைமையில் ஆலோசனை

Posted On: 09 APR 2020 10:17AM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், நேற்று மாலையில் காணொலிக் காட்சி மூலம் மாநில வேளாண் அமைச்சர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். விதைப்பு நடவடிக்கைகள் மற்றும் அறுவடை, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை (மண்டி) செயல்பாடுகள் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்தல், விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருள்கள் வழங்குதல், பொருள்கள் சேமிப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருட்களை வெளியில் கொண்டு செல்வது தொடர்பான விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பின்வரும் பல்வேறு விதிவிலக்குகள் பற்றி மாநிலங்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டது: • வேளாண் விளைபொருட்கள் கொள்முதலில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள், குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்; • விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலங்களில் மேற்கொள்ளும் விவசாயப் பணிகள்; • வேளாண் கொள்முதல் மார்க்கெட் கமிட்டியால் நிர்வகிக்கப்படும் அல்லது மாநில அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைகள் (மண்டிகள்); • மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் ஆதரவுடன், விவசாயிகள் / விவசாயக் குழுக்கள், எப்.பி.ஓ.க்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவர்களிடம் இருந்து, நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள சந்தைகள் (மண்டிகள்); • விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்கும் கடைகள்; • விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் பிரிவுகள்; • வேளாண் இயந்திரங்கள் தொடர்பான சி.எச்.சி. மையங்கள்; • ஒருங்கிணைந்த அறுவடை கருவி மற்றும் இதர வேளாண்மை/ தோட்டக்கலை சாதனங்கள் போன்ற அறுவடை மற்றும் விதைப்பு தொடர்பான இயந்திரங்களை மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் கொண்டு செல்தல்; • குளிர்பதனக் கிடங்கு மற்றும் பொருள் சேமிப்புக் கிடங்கு சேவைகள்; • உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான பொருட்கள் தயாரிக்கும் பிரிவுகள்; • அத்தியாவசிய சரக்குகள் போக்குவரத்து; • வேளாண் இயந்திரங்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் (வழங்கல் சங்கிலித் தொடர் உள்பட) மற்றும் பழுதுநீக்க கடைகள்; • தேயிலை தொழிற்சாலை, தேயிலைத் தோட்டம் உள்பட, அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்களுக்கு. தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மாநிலங்களுக்கு பின்வரும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன: • விதைப்பு, அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வேளாண் பணிகள் இலகுவாக நடைபெறும் வகையில் களப்பணி ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். • அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோர், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பிரிவுகளில் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஏஜென்சிகளின் சரக்குகள், இயந்திரங்கள், பொருட்களின் போக்குவரத்துக்கு விரைந்து அனுமதி தரப்படுவதை உறுதி செய்தல். • அத்தியவசிய சரக்குகள் வழங்கல் சங்கிலித் தொடர் சேவையில் தேசிய அளவில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் / அமைப்புகளுக்கு, தேசிய அளவில் வழங்கல் பணியைத் தொடர்வதற்கு தேவையான அலுவலர்கள், தொழிலாளர்கள் எளிதில் பயணம் செய்ய மாநில அளவில் அனுமதிக்கும் வகையில் அத்தாட்சிக் கடிதங்கள் வழங்க வேண்டும். • இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது `சமூக இடைவெளி' விதிமுறை பின்பற்றப்பட வேண்டும். பொது இடங்களில் முறையான சுகாதாரம் மற்றும் கழிவறை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். அறுவடை, கொள்முதல், இடுபொருட்கள் கிடைக்கும் நிலைமை, கடன், காப்பீடு மற்றும் மாநிலங்களுக்கு இடையில் வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சில பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டு மாநிலங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கரீப் தேசிய மாநாடு 2020 ஏப்ரல் 16 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். கரீப் பருவ சாகுபடிக்கான கள ஆயத்தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அந்தக் கூட்டம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த மாநாட்டுக்கான முன்தயாரிப்புப் பணிகளை மாநில அரசுகள் செய்து, தேவையான தகவல்களை திரட்டி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆரோக்கியா செயலி பயன் குறித்து அமைச்சர் பேசினார். விவசாயிகள் மற்றும் இதர குடிமக்கள் மத்தியில் அதை பிரபலப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார். இறுதியாக, அனைத்து வேளாண் செயல்பாடுகளிலும் சமூக இடைவெளி மற்றும் சுகாதாரம் பேணுதல் என்ற நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். *****

(Release ID: 1612432) Visitor Counter : 239