பிரதமர் அலுவலகம்

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை: பிரதமர்
ஆக்கபூர்வமான, நேர்மறை அரசியலை பிரதிபலிப்பதாக இன்றைய கலந்துரையாடல் இருந்தது, இந்தியாவின் ஜனநாயக அடித்தளங்கள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் பலத்தை மீண்டும் நிரூபிப்பதாக இருந்தது: பிரதமர்

`சமூக அவசரநிலை பிரகடனம்' என்பது போல இப்போதைய சூழ்நிலை உள்ளது; கடும் முடிவுகள் எடுக்கும் அவசியம் ஏற்பட்டது, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர்

வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்: பிரதமர்

அரசியல் தலைவர்கள் கருத்து, கொள்கை நடவடிக்கைகளுக்கு ஆலோசனை, முடக்கநிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி கலந்துரையாடல்

Posted On: 08 APR 2020 3:33PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், ஒட்டுமொத்த உலகமே கொவிட்-19 என்ற மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறினார். இப்போதைய சூழ்நிலை மனிதகுல வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலகட்டமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதன் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தருணமாக இது இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக மத்திய அரசின் முயற்சிகளில் ஆதரவுடன் செயல்படும் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு, இணைந்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் மூலம் ஆக்கபூர்வமான, நேர்மறை அரசியல் சூழ்நிலை நாட்டில் உருவாகியுள்ளது என்று பிரதமர் கூறினார். சமூக இடைவெளியை பின்பற்றுதல், மக்கள் ஊரடங்கு அல்லது முடக்கநிலை அமலை பின்பற்றுவதில், உரிமையுடன் பங்கேற்றல், அர்ப்பணிப்பு மற்றும் மக்களின் உறுதிப்பாடு குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார். தற்போது உருவாகி வரும் சூழ்நிலையில், ஆதார வளங்கள் பற்றாக்குறையின் தாக்கம் குறித்து அவர் கோடிட்டுக் காட்டினார். இருந்தபோதிலும், இதுவரையில் இந்த வைரஸ் பரவுதலை வெற்றிகரமாகக் குறைந்த அளவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால், எந்த நேரத்திலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர். நாட்டில் இப்போதுள்ள நிலைமை `சமூக அவசர நிலை பிரகடனம்' போல உள்ளது என்றும் பிரதமர் கூறினார். கடுமையான முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் நிபுணர்கள், இந்த முடக்கநிலை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். சூழ்நிலைகள் மாறிவரும் அதேநேரத்தில், பணி கலாச்சாரம் மற்றும் பணி நடைமுறையில் நாம் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார் பிரதமர். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு அரசு முதல் முன்னுரிமை தரும் என்று அவர் வலியுறுத்தினார். கொவிட்-19 காரணமாக நாடு கடும் பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது என்று கூறிய அவர், அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அரசு உறுதியுடன் போராடி வருவதாகத் தெரிவித்தார். உருவாகி வரும் சவால்களை சமாளிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் விரிவான தகவல்கள் அளித்தனர். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் பயன்களை விநியோகித்தல் குறித்தும் அவர்கள் விவரித்தனர். இந்தக் கூட்டத்தை நடத்தியமைக்காக பிரதமருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். உரிய காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்தனர். நெருக்கடியான இந்த காலகட்டத்தில், அவரின் பின்னால் நாடே ஒன்றுபட்டு நிற்பதாக அவர்கள் கூறினர். சுகாதாரத் துறையினரின் ஆரோக்கியம் மற்றும் மனோதிடத்தை அதிகரிக்க வேண்டியது பற்றியும், மருத்துவப் பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டியது பற்றியும், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவிட வேண்டியதன் அவசியம் பற்றியும், பட்டினி மற்றும் சத்துக்குறைபாடுகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசினர். நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்ட காலத்தில் நாட்டின் திறன்களை மேம்படுத்துவதற்கான பொருளாதார மற்றும் கொள்கை நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் பேசினர். முடக்கநிலை முடிவுக்கு வரும் நிலையில் அதை நீட்டிப்பது குறித்தும், முடக்கநிலை முடிவுறும் போது படிப்படியாக விதிகளை தளர்த்துவது பற்றியும் அவர்கள் ஆலோசனைகள் கூறினர். ஆக்கபூர்வமான கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்காக பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தப் போராட்டத்தில் அரசுக்கு உதவியாக இருப்போம் என்ற உத்தரவாதம் அளித்திருப்பதன் மூலம், நாட்டின் ஜனநாயக அடித்தளங்கள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், நாடு முழுக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ****

(Release ID: 1612262) Visitor Counter : 65