ரெயில்வே அமைச்சகம்

கோவிட் 19 வைரஸ் தொற்றைத் தடுக்க தனது ஒட்டு மொத்த இயக்கத்தையும் பெரிய அளவில் தயார் நிலையில் வைத்துள்ளது இந்திய ரயில்வே

ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு. பியுஷ் கோயல், ரயில்வே இணை அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர் தயார் நிலையை மேம்படுத்த மார்ச் 5ம் தேதியில் இருந்து தொடர் ஆய்வு

Posted On: 03 APR 2020 4:25PM by PIB Chennai

கோவிட்-19 வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விரிவான நடவடிக்கைகளுக்காகதனது ஒட்டு மொத்த இயக்கங்களையும் பெரிய அளவில் இந்திய ரயில்வே தயார் நிலையில் வைத்துள்ளது. ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு. பியுஷ் கோயல், ரயில்வே இணை அமைச்சர் திரு. சுரேஷ் அங்காடி, ரயில்வே வாரியத் தலைவர் திரு. வினோத் குமார் ஆகியோர் மார்ச் 5ம் தேதியில் இருந்து தொடர்ந்து தயார் நிலையை ஆய்வு செய்து வருகின்றனர்.

கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன‍:

1. நாடெங்கிலும் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய 24 மணி நேரமும் தொடர்ந்து சரக்கு ரயில்கள் இயக்கம். விநியோக இணைப்பை செயல்பாட்டில் வைத்திருக்க, 4 லட்சத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் 24.03.2020 முதல் 02.04.2020 வரை பொருள்களை எடுத்துச் சென்றன. இதில், 2.23 லட்சத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள், அத்தியாவசிய பொருள்களான உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணை, வெங்காயம், பழங்கள்காய்கறிகள், பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி, உரங்கள் போன்றவற்றை நாடெங்கிலும் எடுத்துச் சென்றன.

2. பார்சல் ரயில்கள் இயக்கம்: மருத்துவ பொருள்கள், மருத்துவக் கருவி, உணவு  போன்ற அத்தியாவசிய பொருள்களை சிறு பார்சல் அளவுகளில் கோவிட்-19 தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் போது எடுத்து செல்வது அவசியமாகிறது.

3. தாமதக் கட்டணம் மற்றும் வாடகை விதிகளில் தளர்வு.

4. காலி கொள்கலன்கள் மற்றும் சமதள கொள்கலன்களை இழுத்து செல்லும் கட்டணம் 24.03.2020ல் இருந்து 30.04.2020 வரை கிடையாது.

5. மத்திய கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது: ரயில்வே நிர்வாகத்துக்கும் பொது மக்களுக்குமிடையே தடையற்ற தகவல் மற்றும் யோசனைகள் பரிமாற்றத்தை உறுதி செய்ய இயக்குனர் நிலை அதிகாரியின் தலைமையில் மத்திய கட்டுப்பாட்டு மையம் 27.03.2020 முதல் அமைக்கப்பட்டது. ரயில்வே உதவி எண்களான 138 & 138ல் பெறப்படும் அழைப்புகள், railmadad@rb.railnet.gov.in என்னும் இணைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்கள், மற்றும் சமூக ஊடகங்களின் போக்குகளை (டிரென்ட்) கண்காணிக்க இந்தக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

6. தனிமைப்படுத்தலுக்கான 11000 படுக்கைகளைத் தவிர‌, கோவிட்-19 தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்காக 17 பிரத்யேக மருத்துவமனைகளில் 5000 படுக்கைகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 33 மருத்துவமனைத் தொகுதிகள் சிகிச்சைக்காகக் கண்டறியப்பட்டுள்ளன.

கோவிட்19 தொற்றுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவ மனையில் வைத்தல் வசதிகளாக 8000 படுக்கைகளுடன் 5000 ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் 3.2 லட்சம் படுக்கைகளுடன் மாற்றியமைப்பதற்காக 20000 பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

7. வென்டிலேட்டர்கள் (நுரையீரலுக்குள் உயிர்க்காற்றை அனுப்பும் இயந்திரம்), தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை வாங்க ரயில்வே மண்டலங்கள் மற்றும் தயாரிப்பு மையங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

8. அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் அடையாள அட்டையைக் காட்டும் பட்சத்தில் ரயில்வே மருத்துவமனைகள் / சுகாதார மையங்களில், ரயில்வே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

9. தங்கள் ஒரு நாள் ஊதியமான ரூ. 151 கோடியை பிரதமரின் பாதுகாப்பு நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் வழங்குகிறார்கள்.

10. துணை மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்துதல்: பணியில் உள்ளவர்களுக்கு உதவ துணை மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்திக் கொள்ள பொது மேலாளர்கள் / தலைமை நிர்வாக அதிகாரிகள் / மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியோடு இலவச உணவுத் தேவைப்படுவோருக்கு இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் சமையல் அறைகள் மார்ச்  28ம் தேதி  முதல் உணவு வழங்கி வருகின்றன. நாடெங்கிலும் உள்ள 25 இடங்களில் 2.25 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

12. குறைந்தபட்ச பணியாளர்கள் இருந்த போதும், இயக்கத்தில் உள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப அமைப்பை பயன்படுத்தியன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பண வழங்கல்களும் தடையின்றி நடைபெற்றன.

13. பொது முடக்க காலத்தில் தூய்மைப்பணி மற்றும் சேவைகள் ஒப்பந்தங்களில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எப்போதும் போல் ஊதியம் வழங்குதல் உறுதி செய்யப்பட்டது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள, துறையைச் சேர்ந்த மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

****



(Release ID: 1610968) Visitor Counter : 156