சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தாக்குதலை சமாளிப்பதில் டாக்டர். ஆர்.எம்.எல். மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளின் ஆயத்த நிலையை கண்டறிய டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நேரில் ஆய்வு; நோயாளிகளுடன் கலந்தாடல்

ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை மையம் கோவிட்-19க்கான தனிமைப்படுத்தல் வார்டாக செயல்படும்

சப்தர்ஜங் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கோவிட்-19 கையாள்வதற்கான பிரத்யேக மையமாக மாற்றப்பட்டுள்ளது

Posted On: 03 APR 2020 4:51PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று டாக்டர் ஆர்.எம்.எல். மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு செய்து, கொவிட்-19 பாதிப்பை எதிர்கொள்வதற்கான ஆயத்தநிலைகளைக் கண்டறிந்தார்.

டாக்டர் ஆர்.எம்.எல். மருத்துவமனையில், சளிக் காய்ச்சல் சிகிச்சைப் பகுதி, அவசர சிகிச்சைப் பகுதி, அதி தீவிர சிகிச்சைப் பகுதி மற்றும் கொரோனா மருத்துவப் பரிசோதனைப் பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். இந்தப் பகுதிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு, மருத்துவப் பரிசோதனை செயல்பாடுகளின் வேகம் குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார். நுண்ணுயிரியல் துறையையும் அமைச்சர் பார்வையிட்டார். அங்கு தினமும் ஏராளமான எண்ணிக்கையில் சாம்பிள்கள் கையாளப்படுகின்றன. சாம்பிள்கள் பெறுதல் மற்றும் அறிவியல் ரீதியிலான பரிசோதனைகளை அவர் கூர்ந்து கவனித்தார். பரிசோதனை முடிவுகளின் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகளை உரிய வகையில் அந்தத் துறை பின்பற்றி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, டாக்டர் ஆர்.எம்.எல். மருத்துவமனையில் உள்ள அதி தீவிர சிகிச்சை மையம், கொவிட்-19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் பிரத்யேக வார்டாக செயல்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சப்தர்ஜங் மருத்துவமனையை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் பகுதியில் உள்ள சிகிச்சை வசதிகளை அவர் ஆய்வு செய்தார். அந்தப் பகுதி கொவிட்-19 சிகிச்சைக்கான அதிநவீன வசதிகள் கொண்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 400 தனிமைப்படுத்தல் சிகிச்சை படுக்கை வசதிகளும், 100 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

இரு மருத்துவமனைகளிலும் நோயாளிகளை கையாளுதல் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவாக ஆய்வு செய்தபோது, கொவிட் 19 நோயாளிகளைக் கையாள்வது தொடர்பாக, டாக்டர்கள், நர்ஸ்கள் மருத்துவமனை மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் அவர் பேசினார். நோயாளிகளுக்கு அவசர நிவாரணம் தருவதற்கு அவர்கள் ஓய்வின்றி உழைப்பதாகக் கூறிய அவர், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் வகையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளுடன் புதிய தடம் பதிக்கும் வகையில் அவர்களுடைய சேவைகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் பற்றி மத்திய அமைச்சர் பேசினார். அனைத்துமே மனிதகுலத்துக்கான சேவையாக இருக்கும் என்பதால், அவர்கள் தங்கள் கடின உழைப்பைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். டாக்டர்கள் மற்றும் இதர சுகாதாரத் துறை அலுவலர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியான உழைப்புக்கு தலை வணங்குவதாகக் கூறிய அவர், சுகாதாரத் துறை அலுவலர்களின் அர்ப்பணிப்பு குறித்து நாடே பெருமைப்படுகிறது என்று கூறினார்.

 

*****



(Release ID: 1610729) Visitor Counter : 133