ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பிரதமரின் ஜன்தன் யோஜ்னா கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு, கொவிட் -19 நோய்த் தொற்று சூழலில் ஏப்ரல் 2020க்கான உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது

கணக்கு வைத்திருப்பவர்கள் கிளைகள், பட்டுவாடா மையங்கள் மற்றும் ஏ.டி.எம்.களில் தாமதித்து பணம் எடுக்க ஆலோசனை

Posted On: 03 APR 2020 12:25PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் பெண்கள் தொடங்கியுள்ள வங்கிக் கணக்குகளில் (வங்கிகள் தெரிவித்துள்ள அந்தக் கணக்குகளில்) தலா ரூ.500 தொகையை 2020 ஏப்ரல் மாதத்துக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளது. அந்தந்தக் கணக்குகளில் 2020 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இந்தத் தொகை செலுத்தப்பட்டது.

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்புத் திட்டத்தின் கீழ், பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.500 கருணைத் தொகையாக செலுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் 26.03.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

பயனாளர்கள் சமூக இடைவெளியைப் பராமரிக்கவும், பணம் எடுப்பதில் ஒழுங்குமுறையை கடைபிடிக்கவும், பணம் எடுக்க வரும் பயனாளிகள் வங்கிக் கிளைகள், பட்டுவாடா மையங்கள், ஏ.டி.எம்.களுக்கு வருவதை நேர அவகாசத்துக்கு ஏற்ப பிரித்து முறைப்படுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களுக்கு நிதிச் சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கிக் கணக்கு எண்ணில் கடைசி எண் அடிப்படையில், அவர்கள் பணம் எடுப்பதற்கான தேதி பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் பின்வருமாறு முடியும் ஜன் தன் திட்ட பெண் வாடிக்கையாளர்கள்

பயனாளிகள் பணம் எடுப்பதற்கான தேதி

0 அல்லது 1

3.4.2020

2 அல்லது 3

4.4.2020

4 அல்லது 5

7.4.2020

6 அல்லது 7

8.4.2020

8 அல்லது 9

9.4.2020

09.04.2020க்குப் பிறகு பயனாளிகள் கிளை அல்லது பட்டுவாடா மையங்களுக்கு வழக்கமான வங்கி நேரங்களில் எந்தத் தேதியிலும் செல்லலாம். பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதை வங்கிகள் அதற்கேற்ப பல கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். மேற்படி கால அட்டவணையை பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ். தகவல்களுடன், (உள்ளூர் சேனல்கள் / அச்சு ஊடகங்கள் / கேபிள் ஆபரேட்டர்கள் / உள்ளூர் வானொலி / பிற வழிமுறைகள் மூலம்) விளம்பரமும் செய்யலாம். கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்தப் பணத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்கள் கிளை அல்லது பட்டுவாடா மையத்தை மேலே 3வது பத்தியில் குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி அணுகலாம் என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியைப் பராமரித்தல் மற்றும் பணம் எடுப்பதில் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் மேற்படி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்திக் கூற வேண்டும்.

இந்த விஷயத்தைப் பொருத்த வரையில், மாநில அரசுகளை தொடர்பு கொண்டு, பணம் எடுப்பதற்கு அட்டவணை தயாரித்துள்ள விஷயம் பற்றி தெரிவித்து, கிளைகள், பட்டுவாடா மையங்கள் மற்றும் ஏ.டி.எம்.களில் போதிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதில் ஆதரவு கேட்க வேண்டும் என்று  மாநில அளவிலான வங்கியாளர்கள் கமிட்டி (எஸ்.எல்.பி.சி.) ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். பயனாளிகளுக்கு பணம் வழங்கலில் ஒழுங்குமுறையைக் கடைபிடிப்பதில் வங்கிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், அதற்காக உள்ளூர் அளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி செயல்பாட்டு தொடர்பாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

*******


(Release ID: 1610643) Visitor Counter : 298