ஆயுஷ்

கோவிட்-19 நெருக்கடியான காலகட்டத்தில் சுயபராமரிப்புக்கான, ஆயுர்வேத மருத்துவத்தின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு நடவடிக்கைகள்

Posted On: 31 MAR 2020 2:31PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மனித சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது. சரியான நிலையில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் உடலின் இயல்பான பாதுகாப்பு அமைப்பை (நோய் எதிர்ப்பு சக்தி) மேம்படுத்துவது என்பது மிக முக்கியமான பங்கினை ஆற்றுகிறது.  வருமுன் காப்போம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.  இன்றைய தேதியில் கோவிட்-19க்கு மருந்து இல்லை என்ற சூழலில், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது ஆகும்.

வாழ்வின் அறிவியலாக இருக்கின்ற ஆயுர்வேதம், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பராமரிப்பதில் இயற்கையின் கொடைகளை எடுத்துக்காட்டுகிறது. ஆரோக்கிய வாழ்வை பராமரிப்பதற்கான “தினச்சார்யா” – தினசரி சிகிச்சை முறை மற்றும் “ரிதுச்சார்யா” – பருவநிலைகளுக்கு ஏற்ற சிகிச்சை முறை ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் இருந்து முன்தடுப்பு பராமரிப்புக்கான ஆயுர்வேதத்தின் அறிவு உருவாகியுள்ளது.  இது தாவர அடிப்படையிலான அறிவைக் கொண்டது ஆகும்.  ஒருவர் தன்னைப் பற்றி விழிப்புணர்வு பெறுதல் மற்றும் ஒரு தனிநபர் தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதனைப் பராமரித்தல் ஆகியவை ஆயுர்வேதத்தின் பாரம்பரிய நூல்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

முன்தடுப்பு ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதலுக்கு கீழ்வரும் சுயபராமரிப்பு வழிமுறைகளை ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த வழிமுறைகள் சுவாசமண்டல ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றவை ஆகும். 

பொதுவான நடவடிக்கைகள்

 1. வெதுவெதுப்பான தண்ணீரை நாள் முழுவதும் குடியுங்கள்.
 2. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளவாறு குறைந்தது 30 நிமிடங்களுக்கு நாள்தோளும் யோகாசனம். பிரணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை செய்யுங்கள் (#YOGAatHome #StayHome #StaySafe)
 3. மஞ்சள், சீரகம், மல்லி மற்றும் பூண்டு போன்ற வாசனைத் திரவியப் பொருட்களைப் பயன்படுத்தி சமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது..

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதற்கான ஆயுர்வேத நடைமுறைகள்

 1. காலையில் சீவன்பிராஷ் 10கிராம் (1 மேசைக்கரண்டி) உட்கொள்ளுங்கள்.  நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை இல்லாத சீவன்பிராஷ் உட்கொள்ளுங்கள்.
 2. துளசி, லவங்கப்பட்டை, கறுப்பு மிளகு, சுக்கு மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைத் தேநீர் / கஷாயத்தை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடியுங்கள். உங்களின் விருப்பத்துக்கேற்ப வெல்லம் (நாட்டுச் சர்க்கரை) மற்றும் / அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
 3. கோல்டன் மில்க் – 150மிலி சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடியுங்கள்.

எளிய ஆயர்வேத நடைமுறைகள்

 1. மூக்குப் பிரயோகம் – காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் மூக்கு துவாரங்களில் (பிரதிஅர்ஷ் நசியா) நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விடவும்
 2. எண்ணெய் கொப்பளிக்கும் சிகிச்சை – 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் எடுத்துக் கொள்ளவும்.  முழுங்கிவிட வேண்டாம்.  2 அல்லது 3 நிமிடங்களுக்கு நன்கு கொப்பளித்துத் துப்பி விடவும்.  தொடர்ந்து வெதுவெதுப்பான தண்ணீரால் கொப்பளிக்கவும். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைச் செய்யவும்.

வறட்டு இருமல் / தொண்டை வலி இருக்கும் போது

 1. கொதிக்கும் நீரில் புதினா இலைகள் அல்லது ஓமம் போட்டு ஆவி பிடிக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதைச் செய்யவும்.
 2. இருமல் அல்லது தொண்டையில் எரிச்சல் இருந்தால் நாட்டுச் சர்க்கரை / தேனுடன் கிராம்புப் பொடியைச் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடவும்.
 3. இந்த நடவடிக்கைகள் சாதாரணமான வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு குணம் அளிக்கும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகள் பெறுவது நல்லது.

 

ஒருவர் தனது சௌகரியத்திற்கேற்ப முடிந்த அளவிற்கு மேற்கூறிய செயல்முறைகளை கடைபிடிக்கலாம். நோய்த்தொற்றுகளுக்கு எதிராக தனிநபரின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இந்த வைத்தியங்களுக்கு இருப்பதாக நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற வைத்தியர்கள் இந்த நடைமுறைகளை பரிந்துரைத்து உள்ளனர்:

பத்மஸ்ரீ வைத்தியர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், கோயம்புத்தூர்

பத்ம பூஷண் வைத்தியர் தேவேந்திர திரிகுணா, டெல்லி

வைத்தியர் பி.எம்.வாரியர், கோட்டக்கல்

வைத்தியர் ஜெயந்த் தேவ்பூஜாரி, நாக்பூர்

வைத்தியர் வினய் வேலங்கர், தானே

வைத்தியர் பி.எஸ் பிரசாத், பெல்காம்

பத்மஸ்ரீ வைத்தியர் குர்தீப் சிங், ஜாம்நகர்

ஆச்சார்யா பால்கிருஷ்ணஜீ, ஹரித்துவார்

வைத்தியர் எம்.எஸ் பாகல், ஜெய்பூர்

வைத்தியர் ஆர்.பி திவிவேதி, ஹர்டோய் உ.பி.

வைத்தியர் கே.என் திவிவேதி, வாரணாசி

வைத்தியர் ராகேஷ் ஷர்மா, சண்டிகர்

வைத்திதயர் அபிசால் சட்டோபாத்யாய், கொல்கத்தா

வைத்தியர் தனுஷா நேசரி, டெல்லி

வைத்தியர் சஞ்சீவ் ஷர்மா, ஜெய்ப்பூர்

வைத்தியர் அனுப் தாக்கர், ஜாம்நகர்

 

பொறுப்புதுறப்பு : மேலே கூறிய ஆலோசனை குறிப்புகள் அனைத்தும் கோவிட்-19க்கான சிகிச்சை முறைகள் அல்ல.

 

***(Release ID: 1609597) Visitor Counter : 854