ஆயுஷ்

கொவிட் 19 க்கான மருந்துகள் பற்றி கூறுவோர் அதற்கான சான்றுகளை அளிக்குமாறு ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிட அறிவியல்பூர்வமான, ஆதார அடிப்படையிலான தீர்வுகளுக்குப் பணியாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது

Posted On: 31 MAR 2020 2:29PM by PIB Chennai

கொவிட் 19 க்கான சிகிச்சை பற்றி சான்றாதாரம் இல்லாமல் பகட்டாக  உரிமை கோரப்படுவதை நிறுத்த உதவுமாறு பிரதமர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து,  விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதுபோன்ற உரிமை கோரல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை ஆயுஷ்  அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.  மேலும் தொற்றுநோய் பரவலைத்  தடுக்க பிரதமரின் அறிவுறுத்தல்படி  ஆயுஷ்  முறைகளிலிருந்து அறிவியல்பூர்வமான,  ஆதார அடிப்படையிலான தீர்வுகளுக்கும்,  ஆயுஷ் மருத்துவர்களிடமிருந்தும்,  ஆயுஷ் நிறுவனங்களிடமிருந்தும்  யோசனைகளையும்,  முன்மொழிவுகளையும் பட்டியலிட தனி வழிமுறையை உருவாக்குதல்,  விஞ்ஞானிகள் குழுவின் மூலம் உறுதிப்படுத்துவதற்காக  அவற்றைப் பரிசோதித்தல் எனும் செயல்முறைகளுக்கும் ஆயுஷ் அமைச்சகம் பாடுபடுகிறது .

 

ஆயுஷ் மருத்துவர்களைத்  தொடர்பு கொள்ளவும் ,  ஆதாரமில்லாத , தவறான உரிமை கோரல்களைத் தடுத்தல் மற்றும் ஊக்கமிழக்கச் செய்தலில் ஈடுபடவும்,  காணொலி காட்சி ,  சமூக ஊடகம் போன்ற நடைமுறைகளை இந்த அமைச்சகம் பயன்படுத்துகிறது.

 

2020 மார்ச் 30 அன்று நடைபெற்ற காணொலிக்காட்சி கருத்தரங்கில் ஆயுஷின் பல்வேறு பிரிவுகளிலிருந்து சுமார் 100 நிபுணர்கள் பங்கேற்று,  இத்தகைய பொருத்தமற்ற உரிமை கோரல்களுக்கு எதிராக விழிப்புணர்வைப் பரவலாக்கத்  தீர்மானித்தனர்.

 

 2020 மார்ச் 20 அன்று நடைபெற்ற காணொலிக்காட்சி கருத்தரங்கில் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல்,  ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு ) திரு ஸ்ரீபத் நாயக் ஆயுஷ் துறை வல்லுநர்களுக்கு  உரையாற்றினர்.

 

 ஆயுஷ் முறைகளிலிருந்து அறிவியல்பூர்வமான , சான்றாதார அடிப்படையில் தீர்வுகளுக்குப்  பணியாற்றுமாறு பிரதமர் விடுத்த அழைப்பு மீதான தொடர் நடவடிக்கையாக,  ஆயுஷ் அமைச்சகம் செயல் முயற்சியை மேற்கொண்டது.  இதன்படி,  சிகிச்சைகளுக்கு அறிவியல் பூர்வமான , விளக்கங்கள் அடிப்படையிலான யோசனைகளையும் முன்மொழிவுகளையும்  வரவேற்பதற்கு அதன் இணையதளத்தில் ஒரு தனிப் பிரிவை உருவாக்கியுள்ளது. கோவிட் -19 தொற்று நோயின்  பரவலைத் தடுக்க அல்லது நோயைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமான வழிகாட்டு நெறிமுறைகளைத்  தயாரித்துள்ளது .

 

இதன்படி ஆயுஷ் மருத்துவர்கள்,  ஆயுஷ் நிறுவனங்கள் ( கல்லூரிகள் /பல்கலைக்கழகங்கள்,  மருத்துவமனைகள் , ஆய்வு அமைப்புகள் , ஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்கள், ஆயுஷ்  சங்கங்கள் போன்றவை நிறுவனங்களில் அடங்கும் )  ஆகியவற்றிடமிருந்து தகவல்கள் வரவேற்கப்பட்டுள்ளன .

 

இந்தத் தகவல்களை  அமைச்சகத்தின் கீழ்க்காணும் இணையதள இணைப்பில் சமர்ப்பிக்கலாம் http://ayush.gov.in/covid-19 ( இதன் மீது கிளிக் செய்யும்போது இந்த இணைப்பு செயல்படாவிட்டால்,  இதனைப் பிரதி எடுத்து உங்களின் இணைய தேடுதல் கட்டத்தில் ஒட்டி இணைப்பு பெறலாம் )

 

பெறப்படும் தகவல்கள் நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்படும் . பரிசீலனைக்  குழுவால் பரிந்துரைக்கப்படும் முன்மொழிவுகள், பல்வகை சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால்  மீண்டும் சரிபார்க்கப்படும்.  சாத்தியப்படும் இடங்களில்,  அந்த முன்மொழிவுகள், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

                                                                 *************


(Release ID: 1609596) Visitor Counter : 192