தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரிமியத் தொகை செலுத்துவதற்கான காலக்கெடு 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

Posted On: 30 MAR 2020 5:16PM by PIB Chennai

கொரோனோ வைரஸ் (கொவிட்-19) வேகமாகப் பரவுவதால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், இந்தியா முழுவதும் அமலில் உள்ள முழு முடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2020 மார்ச் மாதம் கட்டவேண்டிய பிரிமியத் தொகையை, எந்தவித அபராதம், தாமதத் தொகையும் இன்றி 2020 ஏப்ரல் 30-ந்தேதி வரை செலுத்தலாம் என, தகவல் தொடர்பு அமைச்சகத்தில், அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு இயக்ககம் காலநீட்டிப்பு அளித்துள்ளது. பல அஞ்சலகங்கள் அத்தியாவசிய சேவைகளின் கீழ் இயங்கி வருகின்ற போதிலும், அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வாடிக்கையாளர்கள்  பிரிமியத் தொகையை அஞ்சலகங்களுக்கு நேரில் சென்று செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே, அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வாடிக்கையாளர்களின் வசதிக்காக பிரிமியம் செலுத்தும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

நடப்பு மாதத்தில் பிரிமியம் செலுத்த இயலாத, சுமார் 13 லட்சம் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் ( 5.5 லட்சம் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் 7.5 லட்சம் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வாடிக்கையாளர்கள்) இந்த முடிவால் பயனடையக்கூடும். கடந்த மாதம் 42 லட்சம் பாலிசிதாரர்கள் பிரிமியம் செலுத்தியுள்ளதுடன் ஒப்பிடுகையில், இதுவரை இந்த மாதத்துக்கான பிரிமியத்தை 29 லட்சம் பேரால் மட்டுமே செலுத்த முடிந்துள்ளது.

போர்ட்டல் எனப்படும் வலை வாயிலில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், அஞ்சலகக் காப்பீட்டு வாடிக்கையாளர் வலைவாயிலைப் பயன்படுத்தி, ஆன்லைன் வழியாக தங்கள் பிரிமியத்தை செலுத்தலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

****



(Release ID: 1609319) Visitor Counter : 129