உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

மருத்துவப் பொருள்கள் விநியோகத்துக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு விமானப் போக்குவரத்தை அரசு உறுதி செய்கிறது

Posted On: 30 MAR 2020 10:43AM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்புக்கும், பரிசோதனைக்கும் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருள்களின் விநியோகத்துக்கு மாநில அரசுகளுடன், விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பெறப்படும் அவசரத் தேவைகளுக்கான கோரிக்கைகளின் படி, விநியோக நிறுவனங்களிடம் ஒருங்கிணைத்து தேவையான பொருள்களை அவை சென்று சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பும் வேலைகளை அமைச்சகம் செய்கிறது. இந்தப் பணிகளுக்காக ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தப் பொருள்களை விமானங்களில் அனுப்ப விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பிராந்தியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய ஒருங்கிணைப்பு வேலைகளை செய்கின்றன.

கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் தேவைகளுக்காக, கொல்கத்தா, கவுகாத்தி, திப்ருகர் மற்றும் அகர்தலாவுக்கான பொருள்களை, 29 மார்ச் 2020 அன்று தில்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ஒரு அலையன்ஸ் ஏர் விமானம் எடுத்துச் சென்றது.

வடக்குப் பகுதியைப் பொறுத்த வரை, தில்லியில் இருந்து சண்டிகர் சென்று அங்கிருந்து லே வரை செல்லும் இந்திய விமானப் படை விமானம், ஐசிஎம்ஆர் விடிஎம் பெட்டிகள் (கிட்ஸ்) மற்றும் இதர அவசியப் பொருள்களை எடுத்துச் சென்றது. புனேவுக்கு சென்று சேர வேண்டிய சரக்கை, அலையன்ஸ் ஏர், ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பைக்கு மாற்றியது.

(மும்பை-தில்லி-ஹைதராபாத்-சென்னை-மும்பை மற்றும் ஹைதராபாத்-கோயமுத்தூர்) இந்த வழியில் செல்லும் விமானங்கள் ஷிம்லா, ரிஷிகேஷ், லக்னோ மற்றும் இம்பாலுக்கான ஐசிஎம்ஆர் பெட்டிகளை புனே முதல் தில்லி வரை எடுத்து சென்றன. ஹைதரபாத்துக்கான ஒரு சரக்கும் அங்கு சேர்க்கப்பட்டது. ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான சரக்குகளும் சேர்க்கப்பட்டன. ஜவுளி அமைச்சகத்தின் ஒரு சரக்கு கோயமுத்தூருக்கு அனுப்பட்டது.

கொவிட்-19க்கு எதிரான போருக்கான முயற்சிகளை பலப்படுத்துவதற்கும் வலிமை சேர்ப்பதற்கும், இந்த பொருள்கள் எல்லாம் சரியான நேரத்துக்கு இலக்குகளை அடைவதற்காக, தகவல் பகிர்தல், கேள்விகளுக்கு பதிலளித்தல் மற்றும் களப்பணிகள் 24 நான்கு மணி நேரமும் நடைபெறுகின்றன.

*******


(Release ID: 1609252) Visitor Counter : 169