பிரதமர் அலுவலகம்

கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையான வழிகாட்டுதல்

பிரதமர் தொடர்புடைய பல்வேறு துறையினருடன் பிரதமர் தொடர்ந்து கலந்தாய்வு

தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுடன் கலந்தாய்வு

பல்வேறு தரப்பினரிடம் இருந்து தகவல்களை நேரடியாகக் கேட்டறிகிறார்

Posted On: 29 MAR 2020 11:29AM by PIB Chennai

கோவிட் - 19க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் தொடர்புடைய துறையினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடர்ந்து கலந்தாய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். பல்வேறு மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், சுகாதார அமைச்சர்களுடன் நேரடியாக அவர் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டறிவதும் இதில் அடங்கும்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிறைய டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களை ஊக்குவிப்பதுடன், நாட்டுக்கும் சமூகத்துக்கும் அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய சேவைகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அன்றாட வாழ்வில் தொடர்புடைய பல தரப்பு மக்களுடன் காணொலிக் கலந்தாய்வு மூலம் தொடர்பு கொண்டு திரு. மோடி கலந்துரையாடி வருகிறார்.

பல்வேறு மின்னணு ஊடகக் குழுக்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் காணொலிக் கலந்தாய்வு மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். மார்ச் 24 ஆம் தேதி அச்சு ஊடகங்களின் தலைமை நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

மார்ச் 27 ஆம் தேதி, வானொலி அறிவிப்பாளர்கள் மற்றும் அகில இந்திய வானொலியின் அறிவிப்பாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் கலந்தாய்வு நடத்தினார்.

``உள்ளூர்ப் பகுதி பிரபலங்கள் தேசிய அளவில் ஆற்றியுள்ள பங்களிப்புக்கும், நம்பிக்கையை அதிகரிக்கச் செய்த முயற்சிகளுக்குமாக தொடர்ந்து பாராட்ட வேண்டிய அவசியம் உள்ளது'' என்று பிரதமர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சிலருடன் தொலைபேசி மூலம் பிரதமர் தொடர்பு கொண்டு, சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பேசினார். பாதிப்பில் இருந்து குணமானவர்களுடனும் அவர் பேசினார்.

2020 மார்ச் 25 ஆம் தேதி தனது தொகுதி வாரணாசியைச் சேர்ந்தவர்களுடன் பங்கேற்ற சிறப்பு காணொளிக் காட்சி கலந்தாய்வில், விலகியிருத்தல், நிலைமையை உணர்ந்தறிதல், தீர்மானமாக இருத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில், சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 அடிக்கடி கலந்தாய்வுகள் , கூட்டங்கள்

கோவிட் - 19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வழிகள் காணும் வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் திரு. மோடி பல சுற்றுகள் கூட்டங்கள் நடத்தி, கலந்துரையாடல்களை செய்துள்ளார்.

தினமும் அவர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். அமைச்சரவை செயலர், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர் ஆகியோர் அவ்வப்போது தகவல்களை பிரதமரிடம் தெரிவித்து வருகின்றனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

முன்னுதாரணமாகத் திகழ்கிறார்

மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை வலியுறுத்தும் முயற்சியாக, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரை - மக்கள் ஊரடங்கு , 3 வார கால முடக்கநிலை அறிவிப்பு

கோவிட் - 19 நோய்த் தொற்று சூழ்நிலையின் சவாலை சமாளிக்க நாட்டை தயார்படுத்தும் வகையில் 2020 மார்ச் 19 ஆம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் மக்கள் ஊரடங்கு நிலையைக் கடைபிடிக்க வேண்டும் என்று அப்போது அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சமூக இடைவெளி பராமரிப்புக்கு மக்களை வெற்றிகரமாக ஆயத்தப்படுத்தும் முயற்சியாக, 2020 மார்ச் 24 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்த வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கு, 3 வார கால முடக்கநிலை கடைபிடிப்பது தான் சிறந்த ஒரே வழியாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரை வெற்றிகரமானதாக ஆக்கிட, ``தீர்மானமாக இருங்கள், விலகியிருங்கள்'' என்று இரண்டு அணுமுறை மந்திரங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்வைத்தார்.

மக்கள் பதற்றமடைந்து பொருள்களை அதிகமாக வாங்க வேண்டாம் என்று தனது உரையின் போது கேட்டுக் கொண்ட அவர், அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

கோவிட் - 19 பொருளாதார மீட்புப் பணிக் குழு

இந்த நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு மத்திய நிதியமைச்சர் தலைமையில் `கோவிட்-19 பொருளாதார மீட்பு பணிக் குழு' அமைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.  தொடர்புடைய துறையினருடன் இந்தப் பணிக்குழு தொடர்பு கொண்டு, கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில், இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தச் சவால்களை முறியடிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமல் செய்யப்படுவதையும் இந்தப் பணிக் குழு உறுதி செய்யும்.

தொழில்துறையினரும், உயர் வருவாய்ப் பிரிவினரும், தங்களுக்கான சேவையில் ஈடுபட்டிருக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினரின் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். வேலை செய்யும் இடத்துக்கு வர முடியாமல் போய், பணிக்கு வராத காலத்துக்கு ஊதியங்களைப் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நேரங்களில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் உதவி நிதி

கோவிட்-19 நோய்த்தொற்று போன்றவற்றால் ஏற்படும் எந்தவிதமான அவசர நிலை அல்லது துயர நிலையையும் சமாளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதலை பிரதான நோக்கமாகக் கொண்ட பிரத்யேகமான தேசிய நிதி ஒன்று தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, `அவசர சூழ்நிலைகளுக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி'  (PM CARES Fund)  என்ற பெயரில் தரும சிந்தையுள்ள பொது அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் தலைவராக பிரதமர் இருப்பார். பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

எந்தப் பிரச்சினையையும் தணிப்பதற்கு மக்கள் பங்கேற்பு தான் சிறந்த வழியாக இருக்கும் என்பதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அதை செயலிலும் காட்டியிருக்கிறார். அந்த வகையில் இந்த அறிவிப்பு மற்றும் ஒரு உதாரணமாக இருக்கும். இதில் சிறு அளவிலான நன்கொடைகளும் அளிக்க முடியும். எனவே மிகக் குறைந்த பங்களிப்புடன் பெருமளவிலான மக்கள் இதில் பங்கேற்றுக் கொள்ள முடியும்.

ரூ.1.7 லட்சம் கோடிக்கு நிதி உதவித் திட்டங்கள் அறிவிப்பு

திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2020 மார்ச் 26 ஆம் தேதி ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது. ஏழைகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கு இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 3 மாதங்களுக்குத் தேவையான உணவுதானியங்கள், பருப்புகள், எரிவாயு ஆகியவை இலவசமாக அளிக்கப்படும் என்பதும் இதில் அடங்கும். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் பொருளாதார குழப்பங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் கூட்டம்

மார்ச் 24ஆம் தேதி டாக்டர்கள், நர்ஸ்கள், ஆய்வகத் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகிய மருத்துவத் துறையினருடன் பிரதமர் திரு. மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார். கோவிட்-19 ஐ சமாளிப்பதில் நாட்டிற்கு ஆற்றிவரும் தன்னலமற்ற சேவைகளுக்காக அவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

``உங்களுடைய பரந்த மனதுடன் கூடிய செயல்பாடுகளால், இந்த சவாலை தேசம் வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கிறது'' என்று அந்தக் கலந்துரையாடலின் போது பிரதமர் திரு. மோடி கூறினார்.

மருத்துவத்தில் டெலி கலந்தாய்வுக்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது உயர் முன்னுரிமை என்று கூறிய அவர், மருத்துவத் துறையினரைப் பாதுகாக்க, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.

மருந்து உற்பத்தித் துறையினருடன் கூட்டம்

மருந்துகளும், மருத்துவச் சாதனங்களும் தொடர்ந்து கிடைக்கச் செய்யும் முயற்சியாக, மருந்துத் தயாரிப்புத் துறை பிரதிநிதிகளுடன் 2020 மார்ச் 21 ஆம் தேதி காணொளிக் கலந்தாய்வு மூலம் பிரதமர் தொடர்பு கொண்டு கலந்துரையாடல் மேற்கொண்டார். கோவிட்-19க்கான ஆர்.என்.ஏ. பரிசோதனைப் பொருள்களை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்யவேண்டும் என்று அப்போது மருந்து உற்பத்தித் துறையினரை பிரதமர் கேட்டுக்கொண்டார். ஏ.பி.ஐ.களின் சப்ளையை தொடர்ந்து பராமரிப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய வைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

அத்தியாவசிய மருந்துகள் தொடர்ந்து கிடைக்கச் செய்வதும், மருந்துகள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுத்தலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆயுஷ் துறையினருடன் கூட்டம்

நாட்டு மக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, ஆயுஷ் சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் நிபுணர்களுடன் 2020 மார்ச் 28ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடினார். கோவிட் - 19 நோய்த் தொற்றைத் தடுக்கும் முயற்சியில் ஆயுஷ் துறையின் பங்களிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி பணியாற்றி, இந்த வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, இந்தத் துறையில் உள்ள கட்டமைப்பு வசதிகளை நல்ல முறையில் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். நெருக்கடியான காலக்கட்டத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலை பலப்படுத்தவும்,  வீட்டில் இருந்தே யோகா செய்தல் (#YogaAtHome ) குறித்து ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்

அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மார்ச் 20 ஆம் தேதி காணொளிக் கலந்தாய்வு மூலம் பிரதமர் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். இந்தச் சவாலை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என அப்போது அவர் அழைப்பு விடுத்தார். இந்த வைரஸ் பரவுதலைத் தொடர்ந்து கண்காணித்து, விழிப்புடன் இருந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நோய்த் தொற்றை சமாளிப்பதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதில் நெருக்கடியான காலக்கட்டத்தில் நாடு உள்ளது என்று முதல்வர்களுக்கு நினைவுபடுத்திய பிரதமர், இதில் பதற்றம் அடைவதற்கு எந்தத் தேவையும் இல்லை என்று உறுதியளித்தார்.

இதுவரை மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த நிமையை பிரதமர் எப்படி நேரடியாக கண்காணித்து வருகிறார் என்பதௌ பற்றியும் முதலமைச்சர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் தரப்பு மக்களுக்கு அதிக உதவிகள் அளித்தல் குறித்து இந்தக் கலந்தாய்வின் போது முதலமைச்சர்கள் வலியுறுத்தினர். மாநிலங்களுக்கு தனது ஆதரவு  இருக்கும் என்று உறுதியளித்த பிரதமர், சுகாதாரப் பணியாளர்களின் அளவை அதிகரித்தல் மற்றும் சுகாதார சேவைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அவசர அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார்.  தங்கள் பகுதியில் உள்ள வர்த்தக அமைப்பினருடன் முதலமைச்சர்கள் காணொளிக் கலந்தாய்வு மூலம் பேசி, கள்ளச்சந்தையில் பொருள்களை விற்பதையும், அநியாய விலைக்கு விற்பதையும் தடுக்கவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அவர்களை இணங்கச் செய்வதற்கு மென்மையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவை ஏற்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் யோசனை தெரிவித்தார்.

சார்க் நாடுகள் கைகோர்த்தன

உலக மக்கள் தொகையில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்கும் நாடு என்ற வகையில், சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலிக் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்ததில் பிராந்திய அளவிலான ஆலோசனைக்கு வித்திட்ட முதலாவது தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளார். இந்தியாவின் தலைமையின் கீழ் சார்க் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் 2020 மார்ச் 15 ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டு முயற்சி என்ற உத்வேகத்தை வலியுறுத்தி திரு. மோடி வழிகாட்டியாக இருந்தார். கோவிட் - 19 அவசர கால நிதி ஒன்றை உருவாக்கலாம் என்று ஒரு திட்டத்தை அவர் முன்வைத்தார். நாடுகள் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடைகளுடன் இந்த நிதி செயல்படும். இதற்கு இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்து தொடங்கி வைத்தது. உடனடி செயல்பாடுகளுக்காக எந்தவொரு உறுப்பு நாடும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்ற சார்க் நாடுகள், அதாவது நேபாளம், பூட்டான், மாலத்தீவுகளும் இந்த அவசர கால நிதிக்கு பங்களிப்பு செய்துள்ளன.

அற்புதமான மெய்நிகர்  ஜி 20 உச்சிமாநாடு

அற்புதமான மெய்நிகர் ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாடு 2020 மார்ச் 26ஆம் தேதி நடைபெற்றது. கோவிட் - 19 நோய்த்தொற்று குறித்த சவால்கள் பற்றி விவாதித்தல், உலக அளவில் ஒருங்கிணைந்த நடைமுறைகளை உருவாக்குதல் ஆகியவை அதன் நோக்கமாக இருந்தன. முன்னதாக, இது குறித்து சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

உளகளாவிய வளமை மற்றும் ஒத்துழைப்பில் மனிதர்களை மையமாகக் கொண்டு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் குறித்த தகவல்களை தாராளமாக, வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது, ஏற்புடைய, பயன்தரக் கூடிய, மனிதர்களுக்கான ஆரோக்கிய நடைமுறைகளை உருவாக்குவது ஆகியவை பற்றி இந்த உச்சி மாநாட்டில் பேசப்பட்டது.

மனிதகுலத்தின் நன்மைக்காக, புதிய உலகமயமாக்கல் சூழலில் அடியெடுத்து வைக்க உதவிட வேண்டும் என்று தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மனிதகுலத்தின் நன்மைகள் குறித்து பல துறைகளின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச முயற்சி

பிரிட்டன் பிரதமர் மேன்மைமிகு போரிஸ் ஜான்சன், இஸ்ரேல் பிரதமர் மேன்மைமிகு பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருடன் 2020 மார்ச் 12 ஆம் தேதியும், சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் 2020 மார்ச் 17 ஆம் தேதியும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

ரஷிய அதிபர் மேன்மைமிகு விளாடிமிர் புதினுடன் மார்ச் 25ஆம் தேதி பிரதமர் கலந்தாடல் மேற்கொண்டார். மார்ச் 26ஆம் தேதி, அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மைக்குரிய ஷேக் முகமது பின் ஜாவித் அல் நஹ்யனுடன் பிரதமர் திரு. மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதே நாளில் கத்தார் நாட்டின் அமீரான மேன்மைக்குரிய ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடனும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

2020 மார்ச் 24ஆம் தேதி ஐரோப்பிய கமிஷனின் தலைவர் மேன்மைமிகு உர்சுலா வோன் டேர் லெயேனுடன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

பரிதவிப்பு ஆளான குடிமக்களுக்கு ஆதரவு

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த சீனா, இத்தாலி, ஈரான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட குடிமக்களை வெளியேற்றி அழைத்து வந்துள்ளது.

 

*****


 



(Release ID: 1609008) Visitor Counter : 720