தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள்

Posted On: 28 MAR 2020 11:03AM by PIB Chennai

கோவிட்-19ஐ எதிர்கொள்ள முன்கூட்டியே அனுமானித்து இந்தியா, ஆக்கபூர்வமான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கோவிட்-19 நோய்த் தாக்குதலை, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தும் பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவிப்பதற்கு (30 ஜனவரி) முன்பே, தனது எல்லைப் பகுதிகளில் விரிவான பரிசோதனை முறைகளை இந்தியா அமல்படுத்திவிட்டது.

விமானத்தில் வந்து இந்தியாவிற்குள் இறங்கியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, விசாக்களுக்கான அனுமதி தற்காலிக ரத்து, சர்வதேச விமானங்கள் வருவதற்குத் தடை போன்ற நடவடிக்கைகள் வேறு எந்த நாட்டுக்கும் முன்னதாகவே எடுக்கப்பட்டுவிட்டன.

சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யும் நடைமுறை, இந்தியாவில் முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட 30 ஜனவரி 2020 தேதிக்கு வெகு முன்னதாகவே, அதாவது ஜனவரி 18 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது.

கோவிட்-19 மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு முறையே 25 நாட்கள் மற்றும் 39 நாட்களுக்குப் பிறகு தான், பயணிகளைப் பரிசோதிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன என்பது, உலகளாவிய சூழ்நிலைகளை கவனித்தால் அறிந்து கொள்ள முடியும்.

பயணத்துக்குக் கட்டுப்பாடு, பரிசோதனை செய்ய வேண்டிய பயணிகளின் பட்டியலில் மேலும் சில நாடுகளைச் சேர்த்தது, விசா அனுமதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, நோய்த் தொற்று பரவலை சிறப்பாகக் கட்டுப்படுத்துதல், தடுத்தல் மற்றும் கையாளுதலுக்காக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதி போன்ற நிறைய ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் காலவரிசைப் பட்டியல்:

 

 • 17 ஜனவரி - சீனாவுக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்
 • 18 ஜனவரி - சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் நடைமுறை தொடக்கம்
 • 30 ஜனவரி - சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று கடுமையான அறிவுறுத்தல்
 • 3 பிப்ரவரி -  சீனக் குடிமக்களுக்கு மின்னணு விசா வசதி தற்காலிகமாக நிறுத்தம்
 • 22 பிப்ரவரி - சிங்கப்பூருக்குப் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்; காத்மாண்டு, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியாவில் இருந்து விமானங்களில் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய உத்தரவு
 • 26 பிப்ரவரி - ஈரான், இத்தாலி, தென்கொரியாவுக்குப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல். அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்படும். பரிசோதனையின் அடிப்படையிலும், ஆபத்துக்கான வாய்ப்புகள் பற்றிய மதிப்பீட்டு அடிப்படையிலும் தேவை இருந்தால் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு ஏற்பாடு.
 • 3 மார்ச் - இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான், சீனாவுக்கான அனைத்து விசாக்களும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; சீனா, தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மக்காவ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது அந்த நாடுகளின் வழியாகவோ பயணித்து இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாய உடல்நலப் பரிசோதனைக்கு உத்தரவு
 • 4 மார்ச் - அனைத்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை. பரிசோதனையின் அடிப்படையிலும்,  ஆபத்து நேர்வதற்கான வாய்ப்பின் அடிப்படையிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை அல்லது வீடுகளில் தனிமையாக வைத்து சிகிச்சை அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு.
 • 5 மார்ச் - இத்தாலி அல்லது தென்கொரியாவில் இருந்து வரும் பயணிகள், இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னதாக மருத்துவச் சான்றிதழ் பெற்றாக வேண்டும்.
 • 10 மார்ச் - வீட்டில் தனிமைப்படுத்தல்: வெளிநாடுகளில் இருந்து வந்த சர்வதேசப் பயணிகள் வீடுகளில் தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொண்டு, அரசு கூறிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சீனா, ஹாங்காங், கொரியா, ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்குப் பயணித்த விவரங்கள் இருக்கும் நபர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததில் இருந்து 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
 • 11 மார்ச் - கட்டாயத் தனிமைப்படுத்தல் - சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகளின் வழியாக பயணம் மேற்கொண்டோ 15 பிப்ரவரி 2020க்குப் பின் இந்தியாவுக்கு வந்தவர்கள் (இந்தியர்கள் உள்பட) கட்டாயமாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என உத்தரவு.
 • 16, 17, 19 மார்ச் - விரிவான அறிவுறுத்தல்:

 

16 மார்ச்

ஐக்கிய அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் ஆகிய நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகள் வழியாகவோ இந்தியாவிற்கு வந்த பயணிகளுக்கு குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல்.

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய தாராள வர்த்தக சங்க உறுப்பு நாடுகள், துருக்கி மற்றும் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வருகை தருவது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.

17 மார்ச்

ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியாவில் இருந்து பயணிகள் வருகை தடை செய்யப்படுகிறது.

19 மார்ச்

மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கத் தடை.

 • 25 மார்ச் - அனைத்து சர்வதேச விமானங்கள் வருகைக்கான அனுமதி தற்காலிக நிறுத்தம் 2020 ஏப்ரல் 14 வரையில் நீ்ட்டிப்பு.

 

உலக அளவில் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பயணத்துக்கான அறிவுறுத்தல்கள் மாற்றி அமைக்கப்பட்டதுடன், விமான நிலையங்களில் பரிசோதனை செய்வதும் அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

விமான நிலையங்களில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தபிறகு, அவர்களால் மதிப்பிடப்பட்ட ஆபத்து வாய்ப்புகளின் அடிப்படையில் பயணிகள் தனிமைப்படுத்தல் , சிகிச்சைக்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை முடித்து அனுப்பி வைத்தவர்களின் பட்டியலும் கூட மாநில அரசு நிர்வாகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், குறிப்பிட்ட நாட்கள் வரையில் அவர்களுடைய ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வசதியாக இந்தத் தகவல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

30 விமான நிலையங்கள், 12 பெரிய மற்றும் 65 சிறிய துறைமுகங்களிலும், நில எல்லைப் பகுதிகளிலும் பயணிகளுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. 36 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

`வசதி படைத்த இந்தியர்கள்' பரிசோதனை இல்லாமல் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் என்று பரவிய தகவல் விபரீதமானது. பரிசோதனைகள் நடத்துவதற்கு அரசு விரிவான, துடிப்பான நடைமுறைகளை வேகமாக அமல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ஆரம்பத்தில் இருந்தே தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இதன் அங்கமாக உள்ளன.  வெளிநாடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு இந்தியரும், வணிகக் காரணங்களுக்காகவோ அல்லது சுற்றுலாவோ சென்று வந்தவர்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரும்கூட இதில் பரிசோதிக்கப்பட்டனர்.

இதில் அனைவரும் பரிசோதிக்கப்படுவதை உறுதி செய்து, யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும், உரிய நடைமுறைகளை அமல் செய்வதற்கும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன. கண்காணிப்பைத் தவிர்க்க முயற்சிக்கும் அல்லது தனிமைப்படுத்தல் நடைமுறைகளைப் பின்பற்றாத தனிநபர்களைப் பின்தொடர்ந்து கவனித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாநில அரசுகள், மிக உன்னிப்பான நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.

மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் சுமார் 20 காணொளிக் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தியுள்ளார். மாநில தலைமைச் செயலர்களுடன், அமைச்சரவைச் செயலாளர் ஆறு காணொளிக் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். கொரோனா சிகிச்சையில் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்யவும், வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்கள் உருவாக்குவது இந்தக் கூட்டங்களின் நோக்கங்களாக இருந்தன. ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடைமுறையில், சர்வதேசப் பயணிகளைக் கவனிப்பதும் அடங்கியுள்ளது. இந்த காணொளிக் கலந்தாய்வுகளில் இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது.(Release ID: 1608858) Visitor Counter : 347