எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி துறையில் முக்கிய நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அனுமதி

பொது முடக்கத்தின் போது 24 மணி நேர மின்சார விநியோகத்துக்கு மத்திய எரிசக்தி அமைச்சகம் உறுதி

உத்தரவாதக் கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்

மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உரிமதாரர்களுக்கு விநியோக நிறுவனங்கள் 3 மாத காலத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

Posted On: 28 MAR 2020 10:40AM by PIB Chennai

கொவிட் -19 பரவலைத் தடுக்க பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அனைத்து வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் ஒளி வழங்கிட, மின்சார உற்பத்தி, மின் செல்லுத்துகை , விநியோகம், அமைப்புமுறை இயக்கம் என எரிசக்தி துறையின் அனைத்துப்பிரிவுப் பணியாளர்களும் , 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இந்த நெருக்கடியான நிலையில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க எரிசக்தி அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

சுமார் 70 சதவீத  மின்சார உற்பத்தி, நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களால் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து ரயில்வே மூலம் ,தொடர்ச்சியான நிலக்கரி விநியோகத்தைப் பராமரிக்க, எரிசக்தி அமைச்சகம், நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சகங்களுடன் தொடர்பில் உள்ளது.

 

பொது முடக்கம் காரணமாக, மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை விநியோக நிறுவனங்களுக்கு செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், விநியோக நிறுவனங்கள்  பணம் பெறும் நிலை பாதிக்கப்பட்டு, உற்பத்தி மற்றும் செலுத்துகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த இயலாத நிலை உருவாகிறது. இந்த நிலையில், மத்திய எரிசக்தி துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங், எரிசக்தி துறை முக்கியமான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். விநியோக நிறுவனங்களின் நிலையை மேம்படுத்த பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

  1. மின் உற்பத்தி, செலுத்துகை நிறுவனங்களுக்கு மின் விநியோக நிறுவனங்கள் பெருமளவுக்கு பண பாக்கி வைத்துள்ள போதிலும், பொதுத்துறை மின் உற்பத்தி , செலுத்துகை நிறுவனங்கள். மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்கும். தற்போதைய, அவசரகாலச் சூழலில், எந்த விநியோக நிறுவனத்துக்கும், விநியோகப் பற்றாக்குறை இருக்காது.

  

  1. உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து விநியோக நிறுவனங்கள்  மின்சாரத்தைப் பெறுவதற்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் உத்தரவாதக் கட்டணம் ஜூன் 30 வரை பாதியாகக் குறைக்கப்படும்.

 

  1. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், மின் செலுத்துகை உரிமதாரர்களுக்கும் செலுத்த வேண்டிய கட்டணத்தை விநியோக நிறுவனங்கள் , மூன்று மாத காலம் செலுத்த வேண்டியதில்லை என்றும், தாமதமாக செலுத்தப்படும் கூடுதல் கட்டணத்துக்கு அபராதம் விதிக்க வேண்டாமென்றும், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மானில மின் உற்பத்தி ஆணயங்களுக்கு இதே போன்ற வழிகட்டுதல்கலை வழங்கும்படி மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

***



(Release ID: 1608857) Visitor Counter : 190