ரெயில்வே அமைச்சகம்
தங்கு தடையற்ற சரக்கு சேவை மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது
கடந்த 4 நாட்களில், 1.6 லட்சத்துக்கு மேற்பட்ட ரயில் பெட்டிகளில் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன; இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன
உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால் ,சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள், காய்கறிகள், பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரி, உரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களை இந்திய ரயில்வே நாடு முழுவதும் ஏற்றிச் சென்றுள்ளது
प्रविष्टि तिथि:
27 MAR 2020 4:39PM by PIB Chennai
கொரோனோ வைரஸ் பெருந்தொற்றால் நாடு முழுவதும் முழுமையான பொது முடக்கம் நிலவுகின்ற நிலையில், நாட்டு மக்களின் நலனில் இந்திய ரயில்வே முழுமையான அக்கறை கொண்டு, தடைபடாத தனது சரக்குப் போக்குவரத்து மூலம், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. கடந்த 4 நாட்களில், சுமார் 1.6 லட்சம் பெட்டிகளில் பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டு, விநியோகச் சங்கிலி அறுந்து விடாமல் இயங்கி வருகிறது. இதில், ஒரு லட்சம் பெட்டிகளில் அத்தியாவசியப் பொருள்கள் இந்திய ரயில்வேயால் ஏற்றிச் செல்லப்பட்டு, நாடும், விநியோகச் சங்கிலியும் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நிலவும் சூழலில், நாடு முழுவதற்கும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, பல்வேறு சரக்கு வளாகங்கள், ரயில் நிலையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்கும் வகையில், இந்திய ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மார்ச் 23-ந்தேதியன்று, மொத்தம் 26577 பெட்டிகளில், உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள், காய்கறிகள், பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரி, உரம் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன. இதில், 1168 பெட்டிகளில் உணவு தானியங்கள், தலா 42 பெட்டிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள், வெங்காயம், சர்க்கரை, 168 பெட்டிகளில் உப்பு, 20 பெட்டிகளில் பால், 22473 பெட்டிகளில் நிலக்கரி, 2322 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் ஆகியவை ஏற்றிச் செல்லப்பட்டன.
மார்ச் 24-ம் தேதி ,மொத்தம் 27742 பெட்டிகளில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன. இதில்,1444 பெட்டிகளில் உணவு தானியங்கள், 84 பெட்டிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள், 168 பெட்டிகளில் உப்பு, 15 பெட்டிகளில் பால், 50 டேங்குகளில் சமையல் எண்ணெய், 24207 பெட்டிகளில் நிலக்கரி, 1774 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றப்பட்டன.
மார்ச் 25-ம் தேதியன்று, மொத்தம் 23097 பெட்டிகளில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன. இதில்,876 பெட்டிகளில் உணவு தானியங்கள், தலா 42 பெட்டிகளில் சர்க்கரை மற்றும் உப்பு , 15 பெட்டிகளில் பால், 20418 பெட்டிகளில் நிலக்கரி, 1704 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றப்பட்டன.
மார்ச் 26-ம் தேதியன்று, மொத்தம் 24009 பெட்டிகளில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன. இதில்,1417 பெட்டிகளில் உணவு தானியங்கள், தலா 42 பெட்டிகளில் சர்க்கரை மற்றும் உப்பு , 20784 பெட்டிகளில் நிலக்கரி, 1724 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றப்பட்டன.
கொவிட்-19 தாக்கத்தை ஒட்டி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிய பெட்டிகளை தாமதமின்றியும், சுமுகமாகவும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் விதத்தில் நெருங்கிய ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்க ரயில்வே அமைச்சகத்தில் அவசரகால சரக்குக் கட்டுப்பாட்டு முறை செயல்பட்டு வருகிறது. மூத்த அதிகாரிகள் மட்டத்தில் சரக்கு போக்குவரத்து மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில், இந்திய ரயில்வே அதன் முக்கியமான பங்கை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. அதேபோல, அத்தியாவசியப் பொருள்களை விரைந்து ஏற்றவும், இறக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது.
****
(रिलीज़ आईडी: 1608826)
आगंतुक पटल : 186