பிரதமர் அலுவலகம்
கொவிட்-19-ஐ எதிர்கொள்வது குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை
‘மக்கள் ஊரடங்கு’ மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்படும்
தன்னலமின்றி நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு மக்கள் மார்ச் 22-ந் தேதி மாலை 5 மணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டுகோள்
பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள கொவிட்-19 பொருளாதார பதிலடி நடவடிக்கைக் குழு அமைக்கப்படும்
‘பீதியில் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதை’ தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்
Posted On:
19 MAR 2020 8:41PM by PIB Chennai
கொவிட்-19-ன் சவால்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ‘நவராத்ரா’-வை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு 9 வேண்டுகோள்களை விடுத்தார்.
உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றை எதிர்ப்பதற்கு இந்திய மக்களிடையே பொறுமையும், மனஉறுதியும் அவசியம் என்று அவர் கூறினார். விரைவாக பரவி வரும் கொவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். உலகத்தையே உலுக்கி உள்ள இந்த நோய் தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்திய பிரதமர், கொவிட்-19-ஐ தடுப்பதற்கான நடவடிக்கைகளை உணர்ந்திருப்பது அவசியம் என்று கூறினார்.
“நாம் நலமாக இருந்தால் உலகம் நலமாக இருக்கும்” என்ற மந்திரத்தை பின்பற்றுமாறு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். நாமே விதித்துக் கொண்ட ‘சமூக இடைவெளியை’ கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்றார். இந்த நெறிகளைப் பொறுமையாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், வீட்டிலிருந்தபடியே பணிகளை செய்யும் போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரும் வாரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மருத்துவமனைகள் மீதான பணிப்பளு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தக் காலகட்டத்தில் சாதாரணமான மருத்துவப் பரிசோதனைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் சாத்தியமானால் ஏற்கனவே திட்டமிட்ட அறுவை சிகிச்சைத் தேதிகளை தள்ளிவைக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இம் மாதம் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ‘மக்கள் ஊரடங்கு’ கருத்தை கடைப்பிடிக்குமாறு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். இதன்படி அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போர் தவிர வேறு எவரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது. இத்தகைய மக்கள் இயக்கத்தின் வெற்றியும், அதனால் கிடைத்த அனுபவங்களும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றார். இம்மாதம் 22-ந் தேதி நாம் எடுக்கும் இந்த முயற்சி நமது சுயகட்டுப்பாடு, தேசிய நலன் கருதி கடமையை ஆற்றுவதில் உறுதிப்பாடு ஆகியவற்றின் சின்னங்களாக அமையும் என்றார்.
இந்த வகையில் மாநில அரசுகள் தலைமையேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற இளைஞர் அமைப்புகள், சிவில் சமுதாயம் ஆகியன இந்த ‘மக்கள் ஊரடங்கு’ குறித்த விழிப்புணர்வை உருவாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுயமாக விதித்துக் கொள்ளப்பட்ட இந்த ஊடரங்கு குறித்து தொலைபேசி மூலம் குறைந்தது 10 பேருக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
சுயநலமற்ற சேவை வழங்கியோருக்கு நன்றி தெரிவித்தல்
கொவிட்-19 உலகத் தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள், விமான நிறுவனப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், பேருந்து / ரயில்/ மோட்டார் வாகன செலுத்துனர்கள், வீடுகளுக்கு பொருட்களை வழங்குபவர்கள் போன்ற தீரம் மிக்க மக்கள் முன்னணியில் உள்ளனர்.
இந்த மாபெரும் சேவைக்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இம்மாதம் 22-ந் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து குடிமக்களும் தங்கள் வீடுகளின் முற்றங்களிலும், வாயில்களிலும் வந்து நின்று 5 நிமிட நேரம் கை தட்ட வேண்டும் அல்லது மணியோசை செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்த நன்றி தெரிவிக்கும் நேரம் வந்து விட்டது என்பதை நாடெங்கும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சைரன்களை ஒலித்து அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளுதல்
கொவிட்-19 உலகத் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள மத்திய நிதியமைச்சர் தலைமையில் ‘கொவிட்-19 பொருளாதார பதிலடி நடவடிக்கைக் குழு’ அமைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இந்த குழுவினர் அக்கறையுள்ள அனைவரையும் கலந்து ஆலோசனை செய்து, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து பொருளாதாரச் சவால்களை சந்திப்பதற்கான முடிவுகளை மேற்கொள்ளும் என்றார். சவால்களை சந்திப்பதற்கான இந்த முடிவுகளை அமல்படுத்தும் நடவடிக்கையையும் குழுவே மேற்கொள்ளும்.
வர்த்தக சமுதாயத்தினர், உயர் வருவாய் குழுவினர் ஆகியோர் குறைந்த வருமானக் குழுவினரின் பொருளாதாரத் தேவைகளில் உதவ வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். குறைந்த வருமான குழுவினரிடமிருந்துதான் நாம் அனைவரும் பல்வேறு சேவைகளைப் பெற்று வருகிறோம் என்பதை நினைவூட்டிய பிரதமர், பணியிடத்திற்கு வர இயலாத காரணங்களால் பணி செய்ய இயலாமல் போகும் நாட்களுக்கு அவர்களது ஊதியத்தை நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய நெருக்கடியான சமயங்களில் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடக் கூடாது என்று பிரதமர் கூறினார்.
உணவுப்பொருட்கள், பால், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏதும் இருக்காது என்று மக்களுக்கு பிரதமர் உறுதி அளித்தார். ‘பீதியடைந்து பொருட்களை வாங்கிக் குவிக்கும்’ போக்கை மக்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொவிட்-19 தொற்றினை முழுமையான அளவில் வெற்றி கொள்வதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். தவறான தகவல்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று அவர் மக்களை கேட்டுக் கொண்டார். இத்தகைய உலகளாவிய நோய் தொற்றுச் சமயங்களில் ‘மனிதகுலம் வெல்வதையும், இந்தியா வெல்வதையும்’ உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
**************************
(Release ID: 1607272)
Visitor Counter : 308
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam