பிரதமர் அலுவலகம்

கொரோனா வைரஸ்: பிரதமர் உரையின் முழுவிவரம்

Posted On: 19 MAR 2020 9:15PM by PIB Chennai

எனதருமை நாட்டு மக்களே,

ஒட்டுமொத்த உலகமும் தற்போது மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.  வழக்கமாக, ஒரு இயற்கை சிக்கல் ஏற்பட்டால், அது ஒருசில நாடுகள் அல்லது மாநிலங்களை மட்டும்தான் பாதிக்கும்.  ஆனால், இம்முறை இந்த பேரழிவு ஒட்டுமொத்த மனித குலத்தையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.  தற்போது கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு போல, முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது கூட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்படவில்லை. 

கடந்த இரண்டு மாதங்களில், கொடிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை நாம் தொடர்ந்து கவனித்தும், கேட்டும் வருகிறோம்.  இந்த இரண்டு மாதங்களில் 130 கோடி இந்திய மக்களும், உலகம் முழுவதும் தொற்றியுள்ள கொரோனாவை எதிர்கொள்ள ஆயத்தமாகியிருப்பதுடன், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

எனினும், கடந்த சில நாட்களில், பிரச்சினையை நாம் தடுத்து வருவதுடன் அனைத்தும் சரியாக உள்ளது போல்  தோன்றுகிறது.  கொரோனா போன்ற உலகளாவிய தொற்று ஏற்படும் போது, மனநிறைவு அடைந்தது போல்  இருப்பது சரியானது அல்ல.    எனவே, ஒவ்வொரு இந்தியரும் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். 

நண்பர்களே,

நான் எப்போது உங்களிடம் எதைக் கேட்டாலும், நீங்கள் என்னை கைவிட்டதில்லை. உங்களின் வாழ்த்துகளின் வலிமை காரணமாகவே நமது முயற்சிகள் வெற்றி அடைகின்றன. 

இன்று எனதருமை நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் சிலவற்றை கேட்டுக் கொள்ளவிருக்கிறேன்.

வரவிருக்கும் சில வாரங்களில், உங்களது நேரத்தை உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். 

நண்பர்களே,

இதுவரை, கொரோனா தொற்றை தடுக்க அறிவியல் ரீதியாக உறுதியான தீர்வு காண முடியவில்லை.  எந்தவொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுபோன்ற சூழலில், கவலை ஏற்படுவது இயற்கையானதே. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளை பார்க்கும் போது, மற்றொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

இந்த நாடுகளில், தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் தவிர, அதன்பிறகு இந்த நோய் ஒரு வெடிவிபத்து போல, பயங்கரமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. 

மத்திய அரசு இதுபற்றிய நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, கொரோனா பரவுவது குறித்தும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விரைவான முடிவுகள் மற்றும் பெருமளவிலான மக்களை தனிமைப்படுத்தியதன் மூலம் ஒருசில நாடுகள் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளன. 

130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா போன்ற சிக்கல்கள் சாதாரணமானது அல்ல. 

வளர்ந்த நாடுகளில் கூட, கொவிட்-19 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தற்போது நம்மால் காண முடிவதால், இந்தியாவுக்கு இந்த நோயால் பாதிப்பு ஏற்படாது என்று கருதினால் அது தவறானதாகி விடும்.  

எனவே, இந்த தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது,  உறுதிப்பாடு மற்றும் பொறுமை ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  தற்போதைய நிலையில் 130 கோடி இந்திய மக்களும், ஒரு குடிமகன் என்ற முறையில் நமது கடமைகளை பின்பற்றி நடப்பதுடன், மத்திய–மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதன் மூலம், நம்மால் இந்த நிலைமையிலிருந்து மீண்டுவர முடியும் என்ற உறுதிப்பாட்டுடன்  இருக்கவேண்டும்.

தற்போது இந்த நோய் நம்மை தொற்றாத வகையிலும், மற்றவர்களையும், இந்த நோய் தாக்காமல் தடுக்க வேண்டும். 

நண்பர்களே,

இதுபோன்ற தொற்று ஏற்படும் காலக்கட்டங்களில் நாம் ஆரோக்கியமாக இருந்தால் இந்த உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – என்ற தாரகமந்திரமே நம்மைக் காப்பாற்றும். 

இதுபோன்ற சூழ்நிலையில், நமக்குத் தெரிந்து இந்த நோயை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லாவிட்டாலும், நாம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். 

இதுபோன்ற நோயை புறக்கணிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும், பொறுமை மிகவும் அவசியமானதாகும்.

ஒருவர் எவ்வாறு பொறுமை காக்க வேண்டும்?  நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து, உங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். 

கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க சமுதாயத்திலிருந்து ஒதுங்கியிருப்பது அவசியம் என்பது நாம் அறிந்ததாகும்.

இந்த தொற்று நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளை கட்டுப்படுத்துவதில், நமது உறுதிப்பாடும், பொறுமையும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே, நீங்கள் தொடர்ந்து சந்தைகளுக்கோ, நெரிசல் மிகுந்த இடங்களுக்கோ, கொவிட்-19 பாதிப்பு ஏற்படாத இடங்களுக்கோ செல்லலாம் என்று நினைத்தால் அது தவறானதாகி விடும்.  இதுபோன்று நினைப்பது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தீங்கு விளைவிப்பதாகிவிடும். 

இதை மனதில்கொண்டு, அடுத்த சில வாரங்களுக்கு, மிக அவசியம் ஏற்பட்டால் தவிர, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உங்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்களது அனைத்து வேலைகளையும்,  அது வர்த்தகம் அல்லது எந்த வேலையாக இருந்தாலும், இயன்றவரை வீட்டில் இருந்தே செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். 

அரசுப் பணியில் இருப்போர், மருத்துவ சேவையாற்றுவோர், மக்கள் பிரதிநிதிகள், ஊடகப் பணியாளர்கள், தொடர்ந்து துடிப்புடன் பணியாற்றுவது அவசியம். மற்றவர்கள் பிறரிடம் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

மற்றொரு வேண்டுகோளை விடுக்கவும் நான் விரும்புகிறேன்.  வயது முதிர்ந்தவர்கள், மூத்த குடிமக்கள், மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். 

இன்றைய தலைமுறையினர் இது பற்றி பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.  ஆனால், பழங்காலங்களில், போர் நேரங்களில், இரவு நேரங்களில் இதுபோன்ற சூழல் நிலவியது.  இது நீண்டகாலம் கூட நீடித்து இருக்கிறது.  இதுதொடர்பான ஒத்திகைகளும் பலமுறை நடந்திருக்கிறது. 

நண்பர்களே,

மற்றொரு அம்சம் குறித்தும் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை நான் கோர விரும்புகிறேன்.  அது மக்கள் – ஊரடங்கு ஆகும்.  

மக்கள் ஊரடங்கு என்பது, மக்கள் தங்களுக்கு தாங்களே பிறப்பித்துக் கொள்ளும் ஊரடங்கு ஆகும். 

வருகிற ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாட்டு மக்கள் அனைவரும்.  இதனை பின்பற்ற வேண்டும்.  இந்த ஊரடங்கு காலத்தில், நாம் நமது வீட்டை விட்டு வெளியேறவோ, அல்லது வீதிகளுக்கு வரவோ கூடாது. நம்மைச் சார்ந்த பகுதிகளில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும். 

அவசரப் பணி மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். 

நண்பர்களே,

மார்ச் 22 ஆம் தேதி, தேசப் பணிக்கான நமது முயற்சிகள், நமது சுய கட்டுப்பாடு, நமது உறுதிப்பாடு போன்றவற்றின் அடையாளமாக திகழ வேண்டும்.  மார்ச் 22 அன்று கடைபிடிக்கவிருக்கும் மக்கள் ஊரடங்கின் வெற்றியும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் அனுபவமும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமக்கு உதவிகரமாக இருக்கும். 

மக்கள் ஊரடங்கை பின்பற்றுவதை உறுதி செய்வதில், அனைத்து மாநில அரசுகளும் முன்னிலை வகிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். 

நம்நாட்டு இளைஞர்கள், தேசிய மாணவர் படை (என்சிசி), நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்),  மக்கள் அமைப்புகள் மற்றும்  பிற அமைப்புகளும், அடுத்த இருநாட்களில் மக்கள் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

முடிந்தால், ஒவ்வொருவரும் தினந்தோறும் தலா 10 பேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், மக்கள் ஊரடங்கு குறித்தும்  விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 

இந்த மக்கள் ஊரடங்கு என்பது, நம்நாட்டிற்காக நாம் மேற்கொள்ளும்  மனஉறுதியை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். கொரோனா போன்ற உலகம் முழுவதும் தொற்றக்கூடிய நோய்களை எதிர்ப்பதில், இந்தியா எந்த அளவுக்கு ஆயத்தமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இதுவே சரியான தருணமாகும். 

நண்பர்களே,

மார்ச் 22 அன்று கடைபிடிக்கவிருக்கும் மக்கள் ஊரடங்கு போன்ற இந்த முயற்சிகளுக்கு மத்தியில், அன்றைய தினம் மற்றொரு அம்சம் குறித்தும் நான் உங்களது ஒத்துழைப்பைக் கோர விரும்புகிறேன்.  கடந்த இரண்டு மாதங்களில், நம்நாட்டில் உள்ள மருத்துவமனைகளிலும், விமான நிலையங்களிலும் லட்சக்கணக்கானோர் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர்.  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விமான ஊழியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ஊடகப் பணியாளர்கள், ரயில்-பேருந்து-ஆட்டோ-ரிக்சா சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வீட்டிற்கே பொருட்களை கொண்டு வந்து சேர்ப்போர்; என அனைவரும் சுயநலம் பார்க்காமலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் பிறருக்காக அயராது பணியாற்றி வருகின்றனர்.

தற்போதைய சூழலில், இத்தகைய சேவைகளை சாதாரணமாகக் கருத முடியாது. இன்று, இத்தகைய மக்கள் தங்களைத் தொற்று  தாக்கும் அபாயத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் தங்களது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி, மற்றவர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். நாட்டின் பாதுகாவலர்கள் என்ற முறையில், அவர்கள் நமக்கும், கொரோனா தொற்றுக்குமிடையே உறுதியாக நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மார்ச் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் அனைவருக்கும் நாம் நமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக ஐந்து மணிக்கு, நாம் அனைவரும் நமது வீடுகளின் வாயிலிலோ, பால்கனியிலோ, ஜன்னல்களிலோ நின்று கொண்டு, ஐந்து நிமிடம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் நமது கைகளைத் தட்டி, தட்டுக்களை அடித்து, மணிகளை ஒலித்து, அவர்களது மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சேவைக்கு தலைவணங்க வேண்டும். 

மக்களுக்கு இதுபற்றி தெரிவிக்க, நாடுமுழுவதும் உள்ளூர் அதிகாரிகள், மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சைரனை ஒலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

சேவையை உயரிய கடமையாகக் கருதி மதிப்பு மிக்க தொண்டாற்றிவரும் அனைத்து சக குடிமக்களுக்கும் நமது உணர்வுகளை முழுமையான உண்மையான முழு உணர்வுடன் நாம் தெரிவிக்க வேண்டும்.

நண்பர்களே,

இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், நமது அத்தியாவசிய சேவைகள், நமது மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதான சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் தெரிந்து கொண்டு கவனமுடன் இருப்பது அவசியமாகும்.

எனவே, இயன்றவரை நீங்கள் மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவசியம் ஏற்பட்டால், உங்களது உள்ளூர் மருத்துவர், குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவராக இருக்கும் உங்களது உறவினரிடம் தொலைபேசி மூலம் தேவையான வழிகாட்டுதலை நீங்கள் கேட்டுப் பெறலாம். தேவையில்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சை போன்றவற்றை ஒரு மாத காலத்திற்குத் தள்ளிப்போட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தத் தொற்றுநோய், பொருளாதாரத்தின் மீதும், பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதாரச் சவால்களை கருத்தில் கொண்டு,  கொவிட்-19 பொருளாதார மீட்பு பணிக்குழு ஒன்றை நிதியமைச்சரின் தலைமையில் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்தப் பணிக்குழு அனைத்து சூழல்கள் மற்றும் பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது தொடர்புடைய அனைவரின் கருத்துக்களைக் கேட்டறிந்து கூடிய விரைவில் முடிவுகளை எடுக்கும். பொருளாதாரச் சிக்கல்களைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை இந்தப் பணிக்குழு உறுதி செய்யும்.

இந்தத் தொற்று நோய் நமது நாட்டின் நடுத்தரப்பிரிவு, கீழ் நடுத்தரப்பிரிவு மற்றும் ஏழை மக்களின் நலன்களையும், பொருளாதார நலன்களையும் கடுமையாக பாதித்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில், வர்த்தக உலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாயத்தின் உயர் வருவாய் பிரிவினர், இயன்றவரை அவர்களுக்கு சேவை புரியும் அனைத்து மக்களின் பொருளாதார நலன்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து வரும் சில நாட்களுக்கு அவர்கள் அலுவலகத்திற்கோ அல்லது உங்களது வீடுகளுக்கோ வர இயலாத சூழல் ஏற்படக்கூடும். அப்படி நேரிட்டால் அவர்களை கருணையுடனும், மனிதநேயத்துடனும் நடத்துவதுடன் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது வீடுகளை நடத்திச் செல்வதுடன், குடும்பங்களை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு உள்ளது என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

பால், மளிகைப்பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உறுதி செய்யும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை அனைத்து இந்தியர்களுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். எனவே, எனது அனைத்து சக குடிமக்களும் அச்ச உணர்வுடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க எண்ணாமல், இயல்பான முறையில் பொருட்களை வாங்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

கடந்த 2 மாதங்களாக 130 கோடி இந்தியர்களில் ஒவ்வொருவரும் இந்த தேசிய பிரச்சினையை தங்களது சொந்தப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, தங்களால் இயன்றவரை சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டியதைச் செய்துள்ளனர். வருங்காலத்திலும், இதே போல நீங்கள் உங்களது பொறுப்புக்களையும், கடமைகளையும் தொடர்ந்து செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆமாம், இதுபோன்ற தருணங்களில் சூழலுக்கு இடையூறுகளும், வதந்திகளும் ஏற்பட்டு கஷ்டங்கள் உருவாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல நேரங்களில், குடிமக்கள் என்ற வகையில் நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுவது இல்லை. இருப்பினும், இந்த சிக்கல் மிகவும் தீவிரமடைந்திருப்பதால், இந்த அனைத்து நெருக்கடிகளுக்கு இடையே சக குடிமக்கள் அனைவரும் இத்தகைய சவால்களை உறுதிப்பாட்டுடன் எதிர்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமது அனைத்துத் திறன்களையும் நாம் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசுகளாக இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகள், ஊராட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் அல்லது சிவில் சொஸைட்டிகள் என யாராக இருந்தாலும், இந்த உலக அளவிலான தொற்று நோய்க்கு எதிராகப் போராட, தங்களது சொந்த வழியில் அனைவரும் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் உங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இந்த உலக அளவிலான தொற்றுநோய் பரவும் சூழலில், மனிதநேயம் வெற்றிகரமாக உருவெடுப்பதும் இந்தியா வெற்றிகரமாக உருவெடுப்பதும் முக்கியமாகும்.

அடுத்த சில நாட்களில் நவராத்திரி பண்டிகை வரவுள்ளது. இது சக்தியை வணங்கும் திருவிழாவாகும். இந்தியாவும் முழு ஆற்றல், முழு வலிமை மற்றும் சக்தியுடன் நடைபோடுகிறது என்பதுதான் அனைவருக்குமான எனது இதயங்கனிந்த வாழ்த்துகளாகும்.

பல, பல நன்றிகள்

                                     *****

 



(Release ID: 1607260) Visitor Counter : 1083