பிரதமர் அலுவலகம்

கோவிட் -10 நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பிரதமர் முன்வைத்த யோசனைகள்

Posted On: 15 MAR 2020 6:15PM by PIB Chennai

மேதகைமை மிக்கவர்களே, இப்போதைய நிலைமை குறித்தும், நீங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் தீவிர சவாலை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதை நாம் அனைவருமே ஒப்புக்கொண்டிருக்கிறோம். வரக்கூடிய நாட்களில், எந்த வகையிலான நோய்த் தொற்று பரவும் என்பது பற்றி இன்னும் நமக்குத் தெரியவில்லை.

நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. விலகிப் போகாமல், நாம் நெருங்கி வருவதன் மூலம், குழப்பத்திற்குப் பதிலாக கூட்டு முயற்சியாக செயல்படுவதன் மூலம், பதற்றம் அடைவதற்குப் பதிலாக ஆயத்தமாக இருப்பதன் மூலம் இதை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

இந்த கூட்டு முயற்சி என்ற உத்வேகத்துடன், இந்த முயற்சியில் இந்தியாவால் என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்பது பற்றி சில சிந்தனைகளை தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.

கோவிட் -19 அவசர கால நிதியம் ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனையை நான் முன்வைக்கிறேன். நம் அனைவருடைய தன்னார்வ அடிப்படையிலான பங்களிப்புகளைக் கொண்டதாக இது இருக்கும். இதற்கு 10 மில்லியன் டாலர்கள் என்ற ஆரம்ப பங்களிப்புடன் இந்தியா இதைத் தொடங்கி வைக்கிறது. உடனடி செயல்பாடுகளுக்கான தேவைக்காக நம்மில் யாரும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக, நமது வெளியுறவுச் செயலாளர்கள், நம் தூதரகங்கள் மூலம் விரைவாக ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.

இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட விரைந்த செயல்பாட்டுக் குழுவை நாங்கள் உருவாக்குகிறோம். அதில் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் சாதனங்களும் இருக்கும். தேவையின் அடிப்படையில் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

அவசர நிலை சிகிச்சைக் குழுவினருக்கு ஆன்லைனில் பயிற்சி அளிப்பதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்ய முடியும். எங்களுடைய அவசர நிலை அலுவலர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு, எங்கள் நாட்டில் நாங்கள் பயன்படுத்திய நடைமுறைகளின் அடிப்படையில் இவை இருக்கும்.

வைரஸ் பாதிப்பு இருப்பவர்களை நல்ல முறையில் பின்தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்டவர்களையும் பின்தொடர்ந்து கண்காணித்தலை சிறப்பாக செய்வதற்கு ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு முனையத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த நோய் கண்காணிப்பு மென்பொருளை சார்க் பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், இதில் பயிற்சி அளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாம் மேற்கொண்டு வருபவற்றில் சிறந்த நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, இப்போதுள்ள சார்க் பேரிடர் மேலாண்மை மையம் போன்ற வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொலைநோக்குப் பார்வையில், தெற்காசிய பிராந்தியத்திற்குள் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, பொதுவான ஆராய்ச்சி தளம் ஒன்றை நாம் உருவாக்கலாம். இதுபோன்ற ஒரு நடைமுறையை ஒருங்கிணைப்பதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் உதவிகளை அளிக்கும்.

கோவிட் -19-ன் நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யுமாறு நம் நிபுணர்களை நாம் கேட்டுக் கொள்ளலாம். நமது உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படாத வகையிலும், இந்த தாக்கத்தில் இருந்து உள்நாட்டு மதிப்புகூட்டு சங்கிலித் தொடர் பாதிக்கப்படாமல் இருக்கவும் இவர்கள் ஆய்வு செய்யலாம்.

நம் பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்திய முதலாவது தொற்றாக இது இல்லை, இதுவே கடைசியாக இருக்கும் என்பதும் கிடையாது.

இந்த முயற்சி நமது பிராந்தியத்தில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க உதவுவதுடன், உள்நாட்டில் நமது போக்குவரத்தை கட்டுப்பாடுகள் அற்றதாக வைத்திருக்க உதவும்.

********



(Release ID: 1607046) Visitor Counter : 143