பிரதமர் அலுவலகம்

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள், தேவையற்ற வதந்திகளுக்கு இடம்கொடுக்காதீர்கள்: பிரதமர்
கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் பழக்கத்தை மீண்டும் அறிமுகம் செய்வதற்கு சரியான நேரம் இது, என்கிறார் பிரதமர்

Posted On: 07 MAR 2020 2:12PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்ட பயனாளிகள் மற்றும் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் மிகவும் திறமைவாய்ந்த மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் இருப்பதாகவும், மக்கள் மத்தியில் முழுமையாக விழிப்புணர்வு இருப்பதாகவும் அவர் கூறினார். விழிப்புடன் செயல்படும் குடிமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

அடிக்கடி கைகழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை, மிகைப்படுத்தி கூறுவதாகக் கருத முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், தும்மும்போது அல்லது இருமும்போது, தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வாய் மற்றும் மூக்குப் பகுதியை கையால் மூடிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் தேவையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தோம் என்று யாராவது சந்தேகித்தால், அச்சப்பட வேண்டாம். அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களும் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் குறித்து எந்த மாதிரியான வதந்தி பரப்புவதையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மருத்துவரின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்த உலகமுமே வணக்கம் கூறும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஏதோ காரணங்களால், இந்தப் பழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டோம். கரங்களைக் கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு இது சரியான நேரமாக உள்ளது,” என்றும் பிரதமர் கூறினார்.

****


(Release ID: 1605793) Visitor Counter : 191