பிரதமர் அலுவலகம்

மனதின் குரல் - 8ஆவது பகுதி

Posted On: 26 JAN 2020 6:35PM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று ஜனவரி 26.  குடியரசுத் திருநாளுக்கான அநேக நல்வாழ்த்துக்கள்.  2020ஆம் ஆண்டுக்கான முதல் மனதின் குரல்வழி சந்திப்பு இது.  இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்பதைத் தவிர, எதிர்வரும் பத்தாண்டுகளின் முதல் நிகழ்ச்சியும் கூட.  நண்பர்களே, இந்தமுறை குடியரசு தினக் கொண்டாட்டங்கள் காரணமாக மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒலிபரப்பு வேளையில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வது உசிதமாக இருக்கும் எனத் தோன்றியது.  ஆகையால், வேறு ஒரு வேளையைத் தீர்மானம் செய்து உங்களோடு மனதின் குரலைப் பகிர்ந்து கொள்கிறேன்.  நண்பர்களே, நாட்கள் மாறுகின்றன, வாரங்கள் மாறுகின்றன, மாதங்களும் மாற்றம் அடைகின்றன, ஆண்டு மாறுகிறது என்றாலும்கூட, பாரதநாட்டு மக்களின் உற்சாகமும் நாமும் சற்றும் சளைப்பதில்லை, நாமும் ஆக்கப்பூர்வமான விஷயத்தைச் சாதித்தே தீருவோம்,  நம்மால் முடியும்.  நம்மால் முடியும் என்ற இந்த உணர்வு, தீர்மானமாக வடிவெடுத்து வருகிறது.  நாடு மற்றும் சமூகத்துக்காக ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒவ்வொரு நாளும், முன்பை விட அதிக அளவில் பலமடைந்து வருகிறது.

 

     எனது நண்பர்களே, மனதின் குரல் என்ற மேடையில், நாமனைவரும் மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைந்திருக்கிறோம்.  புதியபுதிய விஷயங்கள் குறித்த விவாதங்களைச் செய்யவும், நாட்டுமக்களின் புதியபுதிய சாதனைகளைக் கொண்டாடவும், பாரதநாட்டைக் கொண்டாடவும் ஒன்று கூடியிருக்கிறோம்.  மனதின் குரல் என்பது பகிர்தல், கற்றல், ஒன்றாக வளர்தல் ஆகியனவற்றுக்கான ஒரு இயல்பான மேடையாகி விட்டது.  ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பேர்கள், தங்களின் ஆலோசனைகள், தங்கள் முயற்சிகள், தங்களின் அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  அவற்றிலிருந்து சமுதாயத்துக்குக் கருத்தூக்கம் கிடைக்கும் பொருட்டு, சில விஷயங்கள் குறித்து, மக்களின் அசாதாரணமான முயற்சிகள் பற்றி விவாதிப்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு வாய்க்கிறது.

 

     யாரோ ஒருவர் சாதித்துக் காட்டியிருக்கிறார் – அப்படி என்றால் இதை நம்மால் செய்ய முடியுமில்லையா?  அப்படி என்றால் இந்தச் செயல்பாட்டை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தி, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் இல்லையா?   இதை சமூகத்தின் இயல்பான பழக்கமாக பரிமளிக்கச் செய்யலாம் இல்லையா?  இப்படிப்பட்ட சில வினாக்களுக்கான விடைகளைத் தேடித்தேடி, ஒவ்வொரு மாதமும் மனதின் குரலில், சில அறைகூவல்கள், சில வேண்டுகோள்கள், என ஆக்கப்பூர்வமானதாகச் சாதிக்கும் மனவுறுதி தொடர்கிறது.  கடந்த சில ஆண்டுகளில் நாம் பல சின்னச்சின்ன உறுதிப்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம்.  எடுத்துக்காட்டாக, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு விடுப்பு, கதராடைகளுக்கும் உள்ளூர் பொருட்களுக்கும் ஆதரவு, தூய்மை பற்றிய அக்கறை, பெண்களை மதித்து அவர்களின் சுயகௌரவத்தைப் போற்றுதல், குறைவான ரொக்கப் பரிவர்த்தனை கொண்ட பொருளாதாரம் என்ற புதிய பரிமாணத்துக்கு ஆதரவளித்தல், என ஏகப்பட்ட உறுதிப்பாடுகளின் பிறப்பு, இந்த எளிய மனதின் குரல்களில் தான் உண்டாயின.  மேலும் இதற்கு நீங்கள் தான் வலு சேர்த்தீர்கள்.  

 

     எனக்கு மிகவும் இனிமையானதொரு கடிதம் வந்திருக்கிறது.  இதை பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷைலேஷ் அவர்கள் எழுதியிருக்கிறார்; ஆனால் தற்போது அவர் பிஹாரில் வசிக்கவில்லை என்பது வேறு விஷயம்.  அவர் தில்லியில் ஏதோ அரசுசாரா அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.  ஷைலேஷ் அவர்கள் எழுதுகிறார் – மோதிஜி, நீங்கள் ஒவ்வொரு மனதின் குரலிலும் ஏதோ ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறீர்கள்.  அவற்றில் பல விஷயங்களை நான் பின்பற்றியும் இருக்கிறேன்.  இந்தக் குளிர்காலத்தில் வீடுதோறும் சென்று, துணிமணிகளைச் சேகரித்து, தேவைப்படும் ஏழைமக்களுக்கு அவற்றை விநியோகம் செய்து வருகிறேன்.  மனதின் குரலைக் கேட்கத் தொடங்கிய பிறகு, பல விஷயங்களைச் செய்யத் தொடங்கி விட்டேன்.  ஆனால் மீண்டும் மெல்ல மெல்ல சில விஷயங்களை மறந்து விடுகிறேன் அல்லது சில விஷயங்கள் விடுபட்டுப் போய் விடுகின்றன.  இந்தப் புத்தாண்டில் மனதின் குரலை ஒட்டி நான் ஒரு அட்டவணையை ஏற்படுத்தி இருக்கிறேன்; இதில் இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறேன்.  புத்தாண்டுத் துவக்கத்தில், புத்தாண்டுத் தீர்மானங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம்.  மோதி ஜி, இதுதான் என்னுடைய புத்தாண்டுத் தீர்மானம்.  இது மிகமிகச் சின்ன விஷயம் தான் என்று எனக்குப் படுகிறது.  ஆனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.  இந்த அட்டவணையில் உங்கள் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  ஷைலேஷ் அவர்களே, உங்களுக்குப் பலப்பலப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.  உங்களது புத்தாண்டுத் தீர்மானமான, மனதின் குரல் அட்டவணை என்பது மிகவும் புதுமையானதாக இருக்கிறது.   நான் என் தரப்பில் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை அதில் பதிவு செய்கிறேன், கண்டிப்பாக இதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.  நண்பர்களே, இந்த மனதின் குரல் அட்டவணையை நான் படித்துக் கொண்டிருந்த போது, இத்தனை விஷயங்களா என்று எனக்கே கூட ஆச்சரியமாக இருந்தது.  இத்தனை ஹேஷ் டேகுகளா!!  மேலும் நாமனைவருமாக இணைந்து அல்லவா இத்தனை முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளோம்!!  சில வேளைகளில் நாம் இராணுவ வீரர்களுக்கான செய்தியுடன், நமது இராணுவ வீரர்களோடு உணர்வுபூர்வமான வகையிலே, பலமாக இணையும் இயக்கத்தை நடத்தியிருக்கிறோம், தேசத்துக்காக கதராடைகள், ஃபேஷனுக்காக கதராடைகள் என்பதை அறிவித்து, கதராடைகள் விற்பனையை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றோம்.  உள்ளூர் பொருட்களை வாங்குவோம் என்ற மந்திரத்தைக் கைக்கொண்டோம்.  நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியா உறுதியாக இருக்கும் என்ற முழக்கத்தால், உடலுறுதியின்பால் விழிப்புணர்வைப் பெருக்கினோம்.  ’என்னுடையதூய்மையானஇந்தியா’ அல்லது ’உருவச்சிலைகளைத்தூய்மைப்படுத்தல்’முயற்சிகளால், தூய்மையை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு சென்றோம்.  Hashtag NotoDrugs, Hashtag BharatKiLakshmi, Hashtag Self4Society, Hashtag StressFreeExams, Hashtag SurakshaBandhan, Hashtag DigitalEconomy, Hashtag RoadSafety, அடேயப்பா, ஏராளமாக இருக்கின்றன.

 

     ஷைலேஷ் அவர்களே, உங்களது இந்த மனதின் குரல் அட்டவணையைப் பார்த்து, பட்டியல் உண்மையிலேயே மிகவும் நீண்டதாக இருக்கிறது என்று உணர்கிறேன்.  வாருங்கள், இந்தப் பயணத்தை நாம் மேற்கொண்டு தொடர்வோம்.  இந்த மனதின் குரல் அட்டவணையில் இருப்பனவற்றில் உங்கள் விருப்பத்திற்கேற்ப, ஏதோ ஒரு நல்ல நோக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  ஹேஷ்டேகைப் பயன்படுத்தி, அனைவருடனும் மிகுந்த பெருமிதத்தோடு உங்கள் பங்களிப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  நண்பர்களை, குடும்பத்தாரை, மற்ற அனைவரையும் உத்வேகப்படுத்துங்கள்.  ஒவ்வொரு இந்தியரும் ஓரடி முன்னெடுத்து வைப்பாரேயானால், நம்முடைய பாரதநாடு 130 கோடி அடிகள் முன்னெடுத்து வைக்கும்.  ஆகையால் சரைவேதி சரைவேதி, பயணப்படு, பயணப்படு, பயணப்படு என்ற மந்திரத்தை மனதில் ஏந்தி, நமது முயற்சிகளை நாம் செய்தவண்ணம் இருப்போம். 

 

     எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நாம் மனதின் குரல் அட்டவணை பற்றிப் பேசினோம்.  தூய்மைக்குப் பிறகு, மக்கள் பங்களிப்பு உணர்வு, இன்று மேலும் ஒரு துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது என்றால் அது நீர்ப் பாதுகாப்பு.  நீர்ப்பாதுகாப்பிற்காக, பல பரவலான, நூதனமான முயற்சிகள், நாட்டின் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கடந்த பருவமழைக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஜலசக்தி இயக்கமானது, மக்கள் பங்களிப்பு காரணமாக மிகப்பெரிய வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது என்பதைக் கூறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.  அதிக எண்ணிக்கையில் குளங்கள், நீர்நிலைகள் போன்றவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.  மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த இயக்கத்தில் சமூகத்தின் அனைத்து மட்டத்தில் இருப்போரும் தங்களின் பங்களிப்பை நல்கியிருக்கின்றார்கள் என்பது தான்.  இப்போது ராஜஸ்தானத்தின் ஜாலோர் மாவட்டத்தையே எடுத்துக் கொள்வோமே!!  இங்கே இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குளங்கள், குப்பை செத்தைகள் அடங்கிய நீர் மண்டிக் கிடப்பவையாக மாறிப் போயிருந்தன.  என்ன ஆயிற்று?  பத்ராயு மற்றும் தான்வாலா பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜலசக்தி இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, இந்தக் குளங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சவாலை மேற்கொண்டார்கள்.  மழைக்கு முன்னதாகவே இந்த மக்கள், இந்தக் குளங்களில் மண்டிக்கிடந்த அசுத்தமான நீர், குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.  இந்த இயக்கத்துக்காக, சிலர் தங்கள் உழைப்பை அளித்தார்கள், சிலர் பொருளை அளித்தார்கள்.  இதன் விளைவாக, இந்தக் குளங்கள், இன்று அந்தப் பகுதியின் வாழ்க்கை ஊற்றாக மாறி விட்டன.   இதைப் போன்ற விஷயம் தான் உத்திர பிரதேசத்தின் பாராபங்கீயிலும் நடந்தது.  இங்கே 43 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியில் பரவிக் கிடக்கும் ஸராஹீ ஏரியானது தனது இறுதி மூச்சை வெளியிட்டுக் கொண்டிருந்தது.  ஆனால் கிராமத்து மக்கள் தங்களின் மனவுறுதி காரணமாக, இதற்குப் புத்துயிர் ஊட்டினார்கள்.  இத்தனை பெரிய இலக்கை முன்னெடுத்துக் கொண்ட அவர்கள், எந்த ஒரு குறைபாட்டையும் தடையாக மாற விடவில்லை.  ஒன்றன்பின் ஒன்றாக பல கிராமங்கள் இணைந்து பணியாற்றத் தொடங்கின.  அவர்கள் ஏரியின் நாலாபுறங்களிலும், ஒரு மீட்டர் அளவுக்கு உயரமுள்ள தடுப்புச்சுவர்களை ஏற்படுத்தினார்கள்.  இப்போது ஏரியில் நீர் முட்டமுட்ட நிறைந்திருக்கிறது, அங்கே அக்கம்பக்கச் சூழல் பறவைகளின் கீச்சொலியால் எதிரொலிக்கிறது.

 

     உத்தராக்கண்டின் அல்மோடா-ஹல்த்வானீ நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுனியாகோட் கிராமத்திலிருந்தும் மக்கள் பங்களிப்பு தொடர்பான இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு வெளியாகி இருக்கிறது.  கிராமவாசிகள் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க, தாங்களே கிராமம்வரை நீரைக் கொண்டுவரும் உறுதியை மேற்கொண்டார்கள்.  பிறகு என்ன!!   மக்கள் பரஸ்பரம் நிதி திரட்டினார்கள், திட்டம் தீட்டினார்கள், உழைப்பை அளித்தார்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம் வரை குழாய்களைப் பதித்து விட்டார்கள்.  நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டது, பார்த்துக் கொண்டிருந்த வேளையிலேயே பல பத்தாண்டுகள் பழமையான பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட்டு விட்டது.  இதைப் போலவே தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றை, மழைநீர் சேகரிப்புக்கான சாதனமாக ஆக்கும் மிக நூதனமான செயல்பாடு தெரிய வந்திருக்கிறது.  நாடு முழுவதிலும் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய இப்படிப்பட்ட எண்ணிலடங்கா சம்பவங்கள்-நிகழ்வுகள் இருக்கின்றன, இவைதாம் புதிய இந்தியாவின் தீர்மானங்களுக்கு பலம் கூட்டுகின்றன.  இன்று நமது ஜலசக்தி சேம்பியன்களின் கதைகளைக் கேட்க நாடு முழுவதும் உற்சாகமாக இருக்கிறது.  நீர்சேமிப்பு மற்றும் நீர்ப்பாதுகாப்பு குறித்து உங்கள் முயற்சியோ, உங்கள் அக்கம்பக்கத்தில் நடக்கும் முயற்சிகள் பற்றிய கதைகளோ இருந்தால், அவற்றின் புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை #jalshakti4Indiaவிலே பகிர்ந்து கொள்ளுங்களேன்!!

 

     எனதருமை நாட்டுமக்களே, குறிப்பாக எனது இளைய சமுதாய நண்பர்களே, இன்று மனதின் குரல் வாயிலாக, கேலோ இண்டியாவின் போது உங்களுடைய அற்புதமான விருந்தோம்பலுக்காக நான் அஸாம் அரசு மற்றும் அஸாமைச் சேர்ந்த மக்களுக்கு பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நண்பர்களே, ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று குவாஹாத்தியில் மூன்றாவது கேலோ இண்டியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தன.  இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  விளையாட்டுக்களின் இந்த பெருங்கொண்டாட்டத்தில், 80 சாதனைகள் படைக்கப்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்; இவற்றில் 56 பதிவுகளை நமது பெண்குல ரத்தினங்கள் தாம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து வெற்றியாளர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதே வேளையில், இதில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வீரர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதோடு கூடவே, கேலோ இண்டியா விளையாட்டுக்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக, இதோடு தொடர்புடைய அனைவருக்கும், பயிற்றுநர்களுக்கும், தொழில்நுட்ப அதிகாரிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் கேலோ இண்டியா விளையாட்டுக்களில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது நம்மனைவருக்கும் ஒரு சுகமான அனுபவம்.  பள்ளிக்கூட நிலையில் பிள்ளைகளிடம் விளையாட்டுக்களின்பால் எந்த அளவுக்கு நாட்டம் அதிகமாகி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.  2018ஆம் ஆண்டு, கேலோ இண்டியா விளையாட்டுக்கள் தொடங்கப்பட்ட வேளையில், இதில் 3500 பேர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டார்கள், ஆனால் வெறும் மூன்றாண்டுகளிலேயே விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 6000த்துக்கும் அதிகமாகி விட்டது, அதாவது கிட்டத்தட்ட இரண்டு பங்கு.  இதுமட்டுமல்ல, வெறும் மூன்றாண்டுகளில் கேலோ இண்டியா விளையாட்டுக்கள் வாயிலாக 3200 திறமைகள்மிக்க பிள்ளைகள் வெளிப்பட்டிருக்கிறார்கள்.  இவர்களில் பல பிள்ளைகள், இல்லாமை-ஏழ்மை என்ற நிலையில் வளர்பவர்கள்.  கேலோ இண்டியா விளையாட்டுக்களில் பங்குபெறும் பிள்ளைகள், அவர்களின் பெற்றோர் ஆகியோரின் பொறுமை, மனவுறுதிப்பாடு பற்றிய கதைகள் எப்படிப்பட்டவை என்றால், இவை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவையாக இருக்கின்றன.  இப்போது குவாஹாட்டியின் பூர்ணிமா மண்டலையே எடுத்துக் கொள்வோமே!!  அவர் குவாஹாட்டி நகராட்சியில் பணியாற்றும் ஒரு துப்புரவுப் பணியாளர்.  அவரது மகளான மாளவிகா, கால்பந்தாட்டத்தில் தன் திறமையை வெளிப்படுத்தினார் என்றால், இவரது ஒரு மகனான சுஜித், கோகோ விளையாட்டில், இவரது இன்னொரு மகன் பிரதீப், ஹாக்கியில் அஸாம் மாநில அணியில் விளையாடுகிறார்.

 

     இப்படி பெருமிதமளிக்கும் கதை ஒன்று  தமிழ்நாட்டின் யோகானந்தனுடையது.  அவர் தமிழ்நாட்டிலே பீடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றாலும், அவரது மகளான பூர்ணஸ்ரீ, பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறார்.  அவருக்கு என் நெஞ்சார்த்த பாராட்டுக்கள்.   நான் டேவிட் பெக்கம் என்ற பெயரைச் சொன்னவுடனேயே நீங்கள், பிரபலமான சர்வதேச கால்பந்தாட்ட வீரர் என்பீர்கள்.  ஆனால் நம்மிடையேயும் கூட, ஒரு டேவிட் பெக்கம் இருக்கிறார், அவர் குவாஹாட்டியின் இளைஞர்களுக்கான ஆட்டங்களில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.  அதுவும் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தின், 200 மீட்டர் ஸ்ப்ரிண்ட் போட்டியில்; சிலகாலம் முன்பாக, நான் அண்டமான் நிக்கோபார் சென்றிருந்த போது, கார் நிக்கோபார் தீவில் வசிக்கும் டேவிடின் பெற்றோர், அவரது சிறுவயதிலேயே காலமாகி விட்டார்கள் என்பதை அறிந்தேன்.  சிற்றப்பா அவரை கால்பந்தாட்ட வீரனாக ஆக்க விரும்பினார் என்ற காரணத்தால் பிரபலமான கால்பந்தாட்ட வீரரின் பெயரை இவருக்குச் சூட்டி விட்டார்.  ஆனால் இவரது மனமோ சைக்கிள் ஓட்டுவதிலேயே லயித்திருந்தது.  கேலோ இண்டியா திட்டத்தின்படி, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பாருங்கள், இவர் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் ஒரு புதிய பதிவை ஏற்படுத்தி இருக்கிறார்!!

 

     பிவானீயைச் சேர்ந்த பிரஷாந்த் சிங் கன்ஹையா, கழி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில், முன்னர் தான் ஏற்படுத்திய தேசியப் பதிவையே முறியடித்திருக்கிறார்.   19 வயதான ப்ரஷாந்த் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  பிரஷாந்த் மண்ணில் கழி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டிக்கான பயிற்சியை மேற்கொண்டார் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.  இதுபற்றித் தெரிந்த பின்னர் விளையாட்டுத் துறை அவரது பயிற்றுநருக்கு தில்லியின் ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பயிலகம் நடத்த உதவியது, இன்று பிரஷாந்த் அங்கே பயிற்சிகள் பெற்று வருகிறார். 

 

     மும்பையைச் சேர்ந்த கரீனா ஷாந்தாவின் கதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தோல்வியை ஏற்காத, துவளாத கருத்தூக்கத்தை யாருக்கும் அளிக்கவல்லது.  கரீனா 100 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவின் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, புதிய தேசியப்பதிவை ஏற்படுத்தி இருக்கிறார்.  பத்தாம் வகுப்பு படிக்கும் கரீனாவுக்கு, இது எப்படிப்பட்ட சமயமாக இருந்தது என்றால், முட்டியில் அடிபட்டு, பயிற்சியையே துறக்க வேண்டியிருந்தது.  ஆனால் கரீனாவும் அவரது தாயும் மனோதைரியத்தை விடவில்லை, அதன் விளைவு இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கிறது.  நான் அனைத்து விளையாட்டு வீரர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கான விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.  இது மட்டுமல்லாமல், நாட்டுமக்கள் அனைவரின் சார்பாகவும் இவர்கள் அனைவரின் பெற்றோரையும் போற்றுகிறேன்; இவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஏழ்மை ஒரு தடைக்கல்லாக இருக்க அனுமதிக்கவில்லை.  தேசிய விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக, எங்கெல்லாம் தங்கள் பேரார்வத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு வீரர்களுக்குக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் பிற மாநிலங்களின் கலாச்சாரத்தோடும் அறிமுகம் பெறுகிறார்கள்.  ஆகையால் நாம் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களை ஒட்டியே, ஒவ்வொரு ஆண்டும் கேலோ இண்டியா பல்கலைக்கழக விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறோம்.

 

     நண்பர்களே, அடுத்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி முதல், மார்ச் மாதம் 1ஆம் தேதி வரை, ஒடிஷாவின் கட்டக் மற்றும் புவனேஷ்வரில், முதல் கேலோ இண்டியா யூனிவர்சிட்டி கேம்ஸ் நடக்கவிருக்கிறது.  இதில் பங்கெடுக்க 3000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

 

     என் இனிய நாட்டுமக்களே, தேர்வுகளுக்கான காலம் வந்தே விட்டது, மாணவர்கள் அனைவரும் தங்கள் தயாரிப்பு முஸ்தீபுகளுக்கு நிறைவானதொரு வடிவத்தைக் கொடுப்பதில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  நாட்டின் கோடிக்கணக்கான மாணவ நண்பர்களோடு, தேர்வுகளை எதிர்கொள்வோம் அனுபவத்திற்குப் பிறகு, நாட்டின் இளைஞர்கள் மனதிலே தன்னம்பிக்கை நிரம்பி இருக்கிறது, அனைத்துவகைச் சவால்களையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும்.

 

     நண்பர்களே, ஒருபுறம் தேர்வுகள் என்றால் மறுபுறமோ, குளிர்காலம்.  இந்த இரண்டுக்கும் இடையே எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களை உடலுறுதியோடு வைத்துக் கொள்ளுங்கள் என்பது தான்.  கொஞ்சம் உடற்பயிற்சியைச் செய்யுங்கள்.  இப்போதெல்லாம் ஃபிட் இண்டியா தொடர்பாக பல நிகழ்ச்சிகள் நடப்பதை என்னால் பார்க்க முடிகிறது.  ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று இளைஞர்கள், நாடுமுழுவதிலும் சைக்ளோதான் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இதில் பங்கெடுத்த இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் உடலுறுதி பற்றிய செய்தியை அளித்தார்கள்.  நமது புதிய இந்தியா, முழுமையான உடலுறுதியோடு இருக்க, அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தெம்பும், உற்சாகமும் அளிக்கவல்லவையாக இருக்கின்றன.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ஃபிட் இண்டியா ஸ்கூல் என்ற இலக்கு, இப்போது பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது.  இப்போது வரை 65000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இணையவழிப் பதிவைச் செய்து ஃபிட் இண்டியா ஸ்கூல் என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார்கள் என்று என்னிடத்தில் கூறப்பட்டிருக்கிறது.  நாட்டின் பிற பள்ளிகள் அனைத்திடமும் என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், படிப்புடன்கூட, உடல்ரீதியான செயல்பாடுகளையும் இணைத்து, ’ஃபிட் ஸ்கூலாக’ அவர்கள் ஆக வேண்டும் என்பது தான்.  அவர்கள் உடல்ரீதியான செயல்பாட்டுக்கு அதிகப்படியான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்பது தான்.  நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பதனை, தினமும் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வோம்.

 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, இருவாரங்கள் முன்னர், பாரதத்தின் பல்வேறு பாகங்களில் பல்வேறு பண்டிகைகளின் மணம் கமழ்ந்தது.  பஞ்சாபில் லோஹ்டீ எனும் போது துடிப்பும் உற்சாகமும் எங்கும் பெருகியோடும்.  தமிழ்நாட்டின் சகோதரிகளும் சகோதரர்களும், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள், திருவள்ளுவர் பற்றிய நினைவுகளைப் போற்றினார்கள்.  அஸாமில் பிஹூவின் மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சிகளைக் காண முடிந்தது, குஜராத்தின் அனைத்து திசைகளிலும் உத்தராயணத்தின் கோலாஹலமும், காற்றாடிகள் நிறைந்த வானமும் காணப்பட்டன.  இப்படிப்பட்ட வேளையில், தில்லி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு சாட்சியாக அமைந்திருந்தது.  தில்லியில், ஒரு மகத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  இதோடு கூடவே, சுமார் 25 ஆண்டுக்கால ப்ரூ-ரியாங்க் அகதிகள் நெருக்கடி, ஒரு துயரமிகு அத்தியாயம் முடிவுக்கு வந்தது, நிரந்தரமாக அதற்கு முடிவு கட்டப்பட்டது.   சுறுசுறுப்பான சூழல் காரணமாகவும், பண்டிகைகள் காலம் காரணமாகவும், ஒருவேளை நீங்கள் இதுபற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.  ஆகையால் இதுபற்றி மனதின் குரலில் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  இந்தப் பிரச்சனை 90களைச் சேர்ந்தது.  1997ஆம் ஆண்டு இனங்களுக்கு இடையேயான நெருக்கடி காரணமாக, ப்ரூ ரியாங்க் பழங்குடியின மக்கள், மீஸோரமிலிருந்து வெளியேறி திரிபுராவில் தஞ்சம் புகுந்தனர்.  இந்த அகதிகள் வடக்கு திரிபுராவின் கஞ்சன்புரில் இருக்கும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.  மிகவும் துயரம்மிகு விஷயம் என்னவென்றால், இந்த ப்ரூ ரியாங்க் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளாகத் தங்கள் வாழ்க்கையின் ஒரு மகத்துவம் வாய்ந்த பகுதியை இழந்தே போனார்கள்.  முகாம்களில் தங்குவதன் பொருள் என்னவென்றால், அனைத்துவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் இருத்தல் தான்.  23 ஆண்டுகளாக வீடில்லை, நிலமில்லை, நோய் வந்தால் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இன்மை, குழந்தைகளுக்கு கல்விவசதிகள் இல்லாமை.  சற்றே சிந்தித்துப் பாருங்கள், 23 ஆண்டுகள் வரை முகாம்களின் தீவிரமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பது என்பது அவர்களுக்கு எத்தனை துயரம் மிக்கதாக இருந்திருக்கும் தெரியுமா!!  வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், நிச்சயமில்லாத ஒரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது என்ற இந்த நிலை எத்தனை சங்கடமானது தெரியுமா!!  அரசுகள் வந்தன, சென்றன, ஆனால் இவர்களின் துயரத்துக்கு மட்டும் ஒரு விடிவு பிறக்கவில்லை.  ஆனால் இத்தனை கஷ்டங்களைத் தாண்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டமும், கலாச்சாரத்தின்பால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் உறுதியாக, அசைக்கமுடியாதனவாக இருந்தன.  அவர்களின் இந்த நம்பிக்கையின் விளைவாக, அவர்களின் வாழ்க்கையில் இன்று ஒரு புதிய விடியல் பிறந்திருக்கிறது.  ஒப்பந்தப்படி, இப்போது அவர்களால் ஒரு கண்ணியம் மிக்க வாழ்க்கையை வாழக்கூடிய பாதை திறக்கப்பட்டிருக்கிறது.  நிறைவாக, 2020ஆம் ஆண்டின் இந்தப் புதிய பத்தாண்டு, ப்ரூ ரியாங்க் சமூகத்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய எதிர்பார்ப்பின் கிரணத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  சுமார் 34,000 ப்ரூ அகதிகள், திரிபுராவில் குடியமர்த்தப்படுவார்கள்.  இது மட்டுமல்ல, அவர்களின் மறுவாழ்வு மற்றும் முழுமையான வளர்ச்சியின் பொருட்டு, மத்திய அரசு சுமார் 600 கோடி ரூபாய்கள் உதவியும் அளிக்கும்.   புலம் பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் அளிக்கப்படும்.  வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும்.  இதோடுகூடவே, அவர்களுக்கு உணவுப் பொருள்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.  அவர்கள் இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களாலும் பயன்பெறலாம்.  இந்த ஒப்பந்தம் பல காரணங்களுக்காகச் சிறப்பானது.  இது கூட்டுறவுக் கூட்டாட்சி உணர்வினை வெளிப்படுத்துகிறது.  ஒப்பந்தத்தின் போது, மிஸோராம் மற்றும் திரிபுரா – இரு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இருந்தார்கள்.  இந்த ஒப்பந்தம், இரு மாநிலங்களின் மக்களின் சம்மதம் மற்றும் நல்வாழ்த்துக்களோடு சாத்தியமாகி இருக்கிறது.  இதன் பொருட்டு இருமாநில மக்களுக்கும், அங்கே இருக்கும் முதல்வர்களுக்கும், குறிப்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இந்த ஒப்பந்தம் பாரதநாட்டு கலாச்சாரத்தில் கலந்திருக்கும் கருணை உணர்வு மற்றும் நேசமான மனதை வெளிப்படுத்துகிறது.    அனைவரையும் நம்மவர்கள் என ஏற்றுக் கொண்டு நடத்தல் மற்றும் ஒற்றுமையாக இருத்தல் என்பன, இந்த பவித்திரமான பூமியின் குணநலன்களாக என்றுமே இருந்து வந்திருக்கின்றன.  நான் மீண்டும் ஒருமுறை இந்த மாநிலவாசிகளுக்கும், ப்ரூ ரியாங்க் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் சிறப்பான என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

     எனதருமை நாட்டுமக்களே, இத்தனை பெரிய கேலோ இண்டியா விளையாட்டுக்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கும் அஸாம் மாநிலத்தில், மேலும் ஒரு பெரிய பணி நிறைவேறி இருக்கிறது.   சில நாட்கள் முன்பாக ஆஸாமில், எட்டு தனித்தனி தீவிரவாதக் குழுக்களின் 644 பேர்கள் தங்கள் ஆயுதங்களைத் தூரப் போட்டு, சரணடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம்.  முதலில் வன்முறையைக் கையாண்ட இவர்கள், அமைதியின் மீது நம்பிக்கை வைத்தார்கள், தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் முடிவினை மேற்கொண்டார்கள், தேசிய நீரோட்டத்தில் மீண்டும் வந்து இணைந்தார்கள்.  வன்முறை என்பது தீர்வை அளிக்கும் என்று நம்பி ஆயுதங்களை கைகளில் எடுத்தவர்கள், அமைதியும் ஒருமைப்பாடும் மட்டுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை, இன்று திடமாக நம்பத் தொடங்கி இருக்கிறார்கள்.  வடகிழக்கில் கிளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டது என்பது நாட்டுமக்களுக்கு  மகிழ்ச்சியைத் தரும்; இதற்குப் பெரிய காரணம் என்னவென்றால், இந்தத் துறையில் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளும் அமைதியோடும், நேர்மையோடும், விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு தீர்க்கப்பட்டு வருவது தான்.  நாட்டின் எந்த மூலையிலும், வன்முறை மற்றும் ஆயுதங்களின் பலத்தால் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டுவிடலாம் என்று நினைப்பவர்களிடத்தில், இந்த குடியரசுத்திருநாள் என்ற பவித்திரமான வேளையில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் மீண்டு வாருங்கள் என்பது தான்.  பிரச்சனைகளை அமைதியான வழிவாயிலாகத் தீர்ப்பதில் நம் மீதும், நமது நாட்டின் திறமை மீதும் நம்பிக்கை வையுங்கள்!!  நாம் 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், இது அறிவு-அறிவியல் மற்றும் ஜனநாயகத்தின் யுகம்.  எந்த இடத்திலாவது வன்முறையால் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?   அல்லது எந்த இடத்திலாவது அமைதி மற்றும் நல்லிணக்கம் காரணமாக வாழ்க்கையில் இடர்கள் ஏற்பட்டன என்று தான் கேள்விப்பட்டதுண்டா?  வன்முறை, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது.  உலகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வு, வேறு பிரச்சனைகளை உருவாக்குவதால் ஏற்படாது, மேலும் தீர்வுகளைத் தேடுவதன் மூலமே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.   நாமனைவரும் இணைந்து, அமைதியின் அடிப்படையில் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணக்கூடிய புதிய பாரதத்தைப் படைப்போம் வாருங்கள்.  ஒன்றுபடுவது என்பது அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கான முயற்சியில் அமையட்டும்.  மேலும் சகோதரத்துவமானது, பிரிவினைகள், பிளவுகளுக்கான முயற்சிகளை முறியடிக்கட்டும். 

 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, குடியரசுத் திருநாளான இன்று ககன்யான் பற்றிப் பேசும் போது அபரிமிதமான சந்தோஷம் ஏற்படுகிறது.  நாடு, இந்தத் திசைநோக்கி மேலும் ஒரு அடியெடுத்து வைத்திருக்கிறது.  2022ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது.  இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் ககன்யான் திட்டத்துடன் கூட, ஒரு இந்தியரையும் விண்வெளியில் கொண்டு செல்ல நமது தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.  ககன்யான் மிஷன், 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், பாரதத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும்.  புதிய பாரதத்தின், ஒரு புதிய மைல்கல்லாக இது அமையும். 

 

     நண்பர்களே, இந்தக் குறிக்கோளுக்காக, விண்வெளிவீரருக்கான தேர்விலே 4 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.  இந்த நால்வருமே இந்திய விமானப்படையின் இளம் விமானிகள்.  இந்த புத்திகூர்மை உடைய இளைஞர்கள், இந்தியாவின் திறன்கள், திறமைகள், தைரியம், கனவுகள் ஆகியவற்றின் எடுத்துக்காட்டுக்கள்.  நமது நான்கு நண்பர்களும், அடுத்த சில நாட்களில் பயிற்சிக்காக ரஷியநாடு பயணப்பட இருக்கிறார்கள்.  இது பாரதம் மற்றும் ரஷியாவுக்கு இடையே ஒத்துழைப்புக்கான, மேலும் ஒரு பொன்னான அத்தியாயமாக மிளிரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இவர்களுக்கு ஓராண்டுக்கும் கூடுதலாக பயிற்சி அளிக்கப்படும்.  இதன் பிறகு, நாட்டின் ஆசைகள் எதிர்பார்ப்புக்களின் பயணத்தை, விண்வெளிவரை கொண்டு செல்லும் பொறுப்பு, இந்த நான்கு இளைஞர்களில் யாரேனும் ஒருவரிடத்தில் இருக்கும்.  இன்று குடியரசுத் திருநாள் என்ற சுபவேளையில், இந்த நான்கு இளைஞர்களுக்கும், இந்த குறிக்கோளோடு இணைந்திருக்கும் பாரதம் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

     என் கனிவான நாட்டுமக்களே, கடந்த மார்ச் மாதம் ஒரு காணொளி, ஊடகங்கள், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.  விவாதம் என்னவென்றால், எப்படி 107 வயதான ஒரு மூதாட்டித் தாய், குடியரசு மாளிகை நிகழ்ச்சியின் நெறிமுறைகளைத் தகர்த்து, குடியரசுத் தலைவருக்கு ஆசிகள் அளிக்கலாம் என்பது தான் அது.  இந்தப் பெண்மணியான சாலூமரதா திம்மக்கா, கர்நாடகத்தின் வ்ருக்ஷ மாதா என்ற பெயரால் புகழ் பெற்றவர்.  நடைபெற்ற விழா பத்ம விருதுகள் அளிக்கும் விழா.  மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து வரும் திம்மக்காவின் அசாதாரணமான பங்களிப்பு பற்றி நாடு அறிந்தது, புரிந்து கொண்டது, கௌரவம் அளித்தது.  அவருக்குப் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.

 

     நண்பர்களே, இன்று பாரதம் இப்படிப்பட்ட மகத்தான மனிதர்களுக்காக பெருமிதம் கொள்கிறது.  வேர்களோடு தொடர்புடைய மக்களுக்கு கௌரவம் அளிப்பதால் நாடே பெருமைப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டினைப் போலவும், நேற்று மாலை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.  விருது பெற்றவர்கள் அனைவரைப் பற்றியும் நீங்கள் கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.  இவர்களின் பங்களிப்புப் பற்றி, குடும்பம் பற்றி விவாதம் செய்யுங்கள்.  2020இன் பத்ம விருதுகளுக்காக, இந்த ஆண்டு 46000த்திற்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டன.  இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 20 பங்குக்கும் அதிகமானது.   பத்ம விருதுகள், இப்போது மக்கள் விருதுகளாகி விட்டன என்பதையே இந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.    இன்று பத்ம விருதுகள் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையிலேயே இருக்கின்றன.  முன்பெல்லாம் முடிவுகள், குறிப்பிட்ட சிலருக்கிடையே மட்டும் எடுக்கப்பட்டன; ஆனால் இன்றோ இது முழுமையாக மக்களால் எடுக்கப்படுகிறது.  ஒருவகையில் சொல்லப்போனால், பத்ம விருதுகள் மீது நாட்டுமக்களுக்கு இப்போது நம்பிக்கையும், நன்மதிப்பும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.  இப்போது விருது பெறுவோரில் பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், கடினமான உழைப்பால் மேலே உயர்ந்தவர்கள்.  குறைவான சாதனங்கள் என்ற இடர்களையும், அக்கம்பக்கம் இருக்கும் தீவிரமான ஏமாற்றம்நிறை சூழலையும் தகர்த்து, இவர்கள் முன்னேறி இருக்கிறார்கள்.   உண்மையில் அவர்களின் பலமான பேரார்வம், சேவையுணர்வு, தன்னலமற்ற உள்ளம் ஆகியவை நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லவை.  நான் மீண்டும் ஒருமுறை பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் அனைவரும் அவர்களைப் பற்றிப் படிக்க, அவர்களைப் பற்றி அதிகத் தகவல்களைச் சேகரியுங்கள் என்று சிறப்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.  அவர்களின் வாழ்க்கை பற்றிய அசாதாரணமான கதைகள், சமூகத்துக்கு சரியான வகையிலே கருத்தூக்கம் அளிக்கும்.

 

     எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மீண்டும் ஒருமுறை குடியரசுத் திருநாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  வரும் இந்தப் பத்தாண்டுகள் முழுவதுமே, உங்கள் வாழ்க்கையில், பாரதநாட்டின் வாழ்க்கையில், புதிய உறுதிப்பாடுகள் உடையனவாக, புதிய சாதனைகளைப் படைப்பனவாக அமையட்டும். மேலும் உலகம், பாரதத்திடமிருந்து எதை எதிர்பார்க்கிறதோ, அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றித் தரும் திறம், பாரதநாட்டுக்குக் கிடைக்கட்டும்.  இந்த நம்பிக்கையோடு, புதிய பத்தாண்டுக்காலத்தைத் துவக்குவோம் வாருங்கள்.  புதிய உறுதிப்பாடுகளுடன், பாரத அன்னையின் தாள் பணிவோம். பலப்பல நன்றிகள், வணக்கம்.

 

*****


(Release ID: 1600666) Visitor Counter : 322