பிரதமர் அலுவலகம்
ஜோக்பானி - பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியும் கூட்டாக தொடங்கி வைத்தனர்
நேபாளத்தில் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தனர்
Posted On:
21 JAN 2020 12:10PM by PIB Chennai
ஜோக்பானி - பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியுடன் இணைந்து கூட்டாக இன்று (21.01.2020) தொடங்கி வைத்தார்.
ஜோக்பானி – பிராட்நகர், இருநாடுகள் இடையேயான முக்கிய வர்த்தக மையமாக திகழ்கிறது. ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-நேபாள எல்லையில் வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக, ஜோக்பானி – பிராட்நகரில் இந்திய உதவியுடன் 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு பிரதமர்களும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி பேசுகையில், “நேபாளத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய பங்குதாரராக இந்தியா பணியாற்றி வருகிறது”.
“ ‘அண்டை நாடு முதலில்’ என்பதே எனது அரசின் முக்கிய கொள்கை என்று குறிப்பிட்ட அவர், எல்லைப்புற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும், அதில் முக்கிய அம்சமாகும்” என்றும் தெரிவித்தார்.
“இந்தியா-நேபாளத்தை பொறுத்தவரை, மேம்பட்ட போக்குவரத்து வசதி மிகவும் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. நம் இருநாடுகள் இடையேயான நட்புறவு, அண்டை நாடுகள் என்பதோடு மட்டுமின்றி, வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், கலாச்சாரம், இயற்கை, குடும்பங்கள், மொழி, வளர்ச்சி மற்றும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அமைந்ததாகும்” என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
“அனைத்து நட்பு நாடுகளுடனான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த எனது அரசு உறுதிபூண்டிருப்பதோடு, வர்த்தகம், கலாச்சாரம், கல்வி போன்ற துறைகளிலும் உறவு மேலும் மேம்படுத்தப்படும்” என்றும் பிரதமர் கூறினார்.
எல்லைப்புற சாலை, ரயில், போக்குவரத்துகளையும், நேபாளத்தில் உள்ள மின்சார பகிர்மான சேவையை மேம்படுத்தவும் இந்தியா பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீடுகளை புனரமைக்கும் திட்டத்தின் முன்னேற்றத்தையும் இருபிரதமர்களும் ஆய்வு செய்தனர்.
நேபாளத்தில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, “நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் இந்தியா முதல் நாடாக களம் இறங்கியதுடன், நேபாள மறுநிர்மாணப் பணியில் தற்போது அந்நாட்டுடன் தோளோடுதோள் நின்று பணியாற்றுவதாகவும் கூறினார்.
கூர்கா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 50,000 வீடுகள் கட்டித் தருவது என்ற இந்தியாவின் வாக்குறுதியில், இதுவரை 45,000 வீடுகளுக்கான பணி முடிவடைந்துள்ளது.
இந்தியாவின் முயற்சிகளுக்காக நேபாள பிரதமர் திரு கே பி ஷர்மா ஒலி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
************
(Release ID: 1599990)
Visitor Counter : 212