பிரதமர் அலுவலகம்

ப்ளூம்பெர்க் உலகத் தொழில் மன்றக் கூட்டத்தில் பிரதமர் சிறப்புரையாற்றினார்

Posted On: 25 SEP 2019 8:03PM by PIB Chennai

 

          பிரதமர் திரு. நரேந்திர மோடி நியூயார்க்கில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் உலகத் தொழில் மன்றக் கூட்டத்தில் இன்று சிறப்புரையாற்றினார்.

     கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே பேசிய பிரதமர், இந்த வாய்ப்பை இந்தியாவின் வருங்கால வளர்ச்சி பற்றி பேசப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார். ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை, முடிவெடுக்கும் உறுதி ஆகிய நான்கு தூண்களின் மேல் இந்தியாவின் வளர்ச்சி வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.  

     நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக இந்தியப் பொருளாதாரம் பயனடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

     அரசு அறிமுகப்படுத்திய வெற்றிகரமான சீர்திருத்தங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் பயனாக போர்த்திறன் குறியீட்டில் பத்து இடங்கள், உலகப் போட்டித்திறன் குறியீட்டில் 13 இடங்கள், உலக புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 24 இடங்கள் என இந்தியா முன்னேறியுள்ளதை அவர் குறிப்பிட்டார். உலக வங்கி வெளியிட்ட எளிதாக தொழில் நடத்தும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறியிருப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

     அண்மையில் வெளியிடப்பட்ட, 2018 ஆம் ஆண்டுக்கான ப்ளூம்பெர்க் தேசிய முத்திரைத் தட ஆய்வறிக்கையில், உலக முதலீடுகளை ஈர்ப்பதில் ஆசியாவிலேயே இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாகத் திகழ்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசியல் ஸ்திரத்தன்மை, நாணய ஸ்திரத்தன்மை, உயர்தர உற்பத்திப் பொருட்கள், ஊழல் எதிர்ப்பு, குறைந்த விலையில் உற்பத்தி, ஏற்ற இடங்கள், அறிவுசார் சொத்துரிமைகளை மதிப்பது என ஏழு அம்சங்கள், பத்து அம்சங்களைக் கொண்ட ஆய்வறிக்கையின்  குறிகாட்டியுடன் பொருந்தியுள்ளதால், இந்தியா முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு உலகத் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் திறமையுடன்  சேர்ந்து உலகத்தை மாற்ற முடியும் என்றும், இந்தியாவின் திறன் மேம்பாடும், உலகத் தொழில் நிறுவனங்களின் முதலீடும் சேர்ந்து உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

     பிரதமரின் சிறப்புரைக்குப் பின்னர், ப்ளூம்பெர்க் நிறுவனர் திரு.மைக்கேல் ப்ளூம்பெர்க்குடன் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.   

 

.*****



(Release ID: 1586240) Visitor Counter : 120