பிரதமர் அலுவலகம்

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் “நமாமி நர்மதா” திருவிழாவில் கலந்துகொண்டார் பிரதமர் திரு.நரேந்திர மோடி

Posted On: 17 SEP 2019 5:00PM by PIB Chennai

குஜராத்தின் கெவாடியாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, சுற்றுச்சூழல் சுற்றுலாப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்

குஜராத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்த்துள்ளது ஒற்றுமையின் சிலை – பிரதமர்

ஜம்மு-காஷ்மீர் குறித்து அரசு முடிவை எடுப்பதற்கு உத்வேகம் அளித்தது சர்தார் படேலின் தொலைநோக்கு திட்டம் தான் – பிரதமர்

ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு வளத்தையும், நம்பிக்கையையும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது - பிரதமர்

குஜராத் மாநிலத்தின், கெவாடியாவில் நடைபெற்ற “நமாமி நர்மதா” திருவிழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். நர்மதா அணையின் நீர்மட்டம், அதன் முழு அளவான 138.68 மீட்டர் உயரத்தை எட்டியதைக் குறிக்கும் வகையில், இந்தத் திருவிழாவை குஜராத் மாநில அரசு நடத்துகிறது. அணையின் உயரத்தை கடந்த 2017-ம் ஆண்டில் அதிகரித்ததற்குப் பிறகு, முதல்முறையாக அணையின் நீர்மட்டம் முழுஅளவை, செப்டம்பர் 16-ம் தேதி மாலை எட்டியது. குஜராத்தின் வாழ்வாதாரமாக திகழும் நர்மதா ஆற்றில் நீரை வரவேற்கும் விதமாக பூஜை செய்து பிரதமர் வழிபாடு நடத்தினார்.

அதன்பிறகு, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தையும், கற்றாழை தோட்டத்தையும் பிரதமர் பார்வையிட்டார். கெவாடியாவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில், மிகப்பெரும் தொகுப்பிலிருந்து வண்ணத்துப்பூச்சிகளை பூங்காவிற்குள் பறக்கவிட்டார். ஒற்றுமையின் சிலை அருகே அமைந்துள்ள ஏக்தா செடிகள் பராமரிப்பு மையத்துக்கும் பிரதமர் சென்றார். இதனைத் தொடர்ந்து, ஒற்றுமையின் சிலைக்கு அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிரதமர் பேசும்போது, “சர்தார் சரோவர் அணையில் 138 மீட்டருக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்க்கும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். குஜராத் மக்களின் நம்பிக்கை துளிர்களாக சர்தார் சரோவர் அணை திகழ்கிறது. கடுமையாக உழைக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்க உள்ளது,” என்றார்.

சுதந்திர தேவி சிலையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும், ஒற்றுமையின் சிலையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைும் பிரதமர் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது அவர், “திறக்கப்பட்ட 11 மாத காலத்துக்குள், 133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கு இணையான சுற்றுலாப் பயணிகளை ஒற்றுமையின் சிலை ஈர்த்துள்ளது. ஒற்றுமையின் சிலையின் மூலம், கெவாடியா-வும், குஜராத்தும் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த 11 மாதங்களில் இந்த இடத்தை இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இருந்தும், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர் என்று என்னிடம் தெரிவித்தனர்,” என்றார்.

“சராசரியாக நாள்தோறும் 10,000 சுற்றுலாப் பயணிகளை சுதந்திர தேவி சிலை ஈர்த்து வருகிறது. எனினும், அது 133 ஆண்டுகால பழமையானது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மற்றொருபுறம், ஒற்றுமையின் சிலை திறக்கப்பட்டு 11 மாதங்களே ஆகியுள்ளது. இருந்தாலும், நாள்தோறும் 8,500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இது அதிசயம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரின் பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அக்டோபர் 31, 2018-ல் ஒற்றுமையின் சிலை திறக்கப்பட்டது.

சர்தார் படேலின் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் வெகுவாக பாராட்டினார். இந்திய முன்னாள் உள்துறை அமைச்சரின் உத்வேகத்தாலேயே, ஜம்மு-காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு கடந்த மாதத்தில் முடிவு எடுத்ததாகவும் அவர் கூறினார். சர்தார் படேலின் உத்வேகத்தாலேயே ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க முடிவுசெய்யப்பட்டதாகவும், இது பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சியாக அமைந்ததாகவும் அவர் கூறினார். லட்சக்கணக்கான மக்களின் முழு ஆதரவுடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் வளத்தையும், நம்பிக்கையையும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் பேசும்போது, “இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மேன்மைக்காக உங்களது சேவகன் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். இந்த உறுதியை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். புதிய அரசு இதற்கு முன்பு இருந்ததைவிட வேகமாக பணியாற்றும், இதற்கு முன்னதாக இருந்ததைவிட மிகப்பெரும் இலக்குகளை நிறைவேற்றும்,” என்றார்.

*****(Release ID: 1585474) Visitor Counter : 254