மத்திய அமைச்சரவை

இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையங்களில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் முறைப்படுத்துவதற்கான ஒரே அதிகார அமைப்பை சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணைய மசோதா 2019 மூலம் உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:36PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள  சர்வதேச நிதிச் சேவை  மையங்களில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் முறைப்படுத்துவதற்கான ஒரே அதிகார அமைப்பை,  சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணைய மசோதா 2019 மூலம் உருவாக்குவதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆணையத்தின் மேலாண்மை:

   இந்த ஆணையத்தின் தலைவர் தவிர, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பரிவர்த்தனை ஆணையம், காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய ஆணையம், ஓய்வூதிய நிதியக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு உறுப்பினரும் மத்திய அரசு நியமிக்கும் இரண்டு உறுப்பினர்களும் மற்றும்  இரண்டு முழு நேர அல்லது பகுதி நேர உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பார்கள்.

ஆணையத்தின் செயல்பாடுகள்:

     நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி பெற்று  செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச்சேவை மையங்களின் அனைத்து நிதிச் சேவைகள், நிதிச் சார்ந்த பொருட்கள் மற்றும் நிதி ஆவணங்கள் ஆகியவை அனைத்தையும் இந்த ஆணையம் முறைப்படுத்தும்.  இது தவிர மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் நிதிப் பொருட்கள், நிதி சேவைகள் மற்றும் நிதி ஆவணங்கள் ஆகியவற்றையும் இந்த ஆணையம் முறைப்படுத்தும்.

ஆணையத்தின் அதிகாரங்கள்:

     சர்வதேச நிதிச் சேவைகள் மையங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளான ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏஐ, பிஎஃப் ஆர்டிஏ போன்றவை செலுத்திய கட்டுப்பாட்டு அதிகாரங்கள் அனைத்தையும் இந்த ஆணையம் இனி மேற்கொள்ளும். இந்த மைங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நிதிப் பொருட்கள், நிதிச் சேவைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான கட்டுப்பாட்டு அதிகாரங்கள் ஆணையத்திடம் இருக்கும்.

ஆணையத்தின் நடைமுறைகள்:

    இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின்படி, நிதிப் பொருட்கள், நிதிச் சேவைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான தனது நடைமுறைகளை இந்த ஆணையம் வகுத்துக் கொண்டு செயல்படும்.

மத்திய அரசின் மானியங்கள்:

     இந்த ஆணைய செயல்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடிய  தொகையை  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கென இயற்றப்படும் சட்டங்களின்படி மானியமாக வழங்கும்.

 

அந்நிய செலாவணி பரிவர்த்தனை:

     மத்திய அரசின்  ஆலோசனையின்படி இந்த ஆணையம் குறிப்பிடும் அந்நிய செலாவணி வழியாக சர்வதேச நிதிச் சேவை மையங்களின் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும்.

 

     சர்வதேச நிதிச் சேவைகள் மைங்களுக்கு என ஒருங்கிணைந்த நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கட்டுப்பாட்டு சூழலை வழங்குவதுடன் எளிதாக வர்த்தகம் புரிவதையும் மேம்படுத்தும். இதனை அடுத்து இந்தியாவில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் மேலும் மேம்பாடு அடைய உத்வேகம் கிடைக்கும். மேலும், வெளிநாடுகளிலிருந்து தற்போது செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான நிதிச்சேவை மையங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வருவது ஊக்குவிக்கப்படும்.  இந்த நடவடிக்கை சர்வதேச நிதிச் சேவை மையங்களிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த நிதித்துறையிலும்,  கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும்.

-----------



(Release ID: 1563239) Visitor Counter : 420