மத்திய அமைச்சரவை
அருணாச்சலப்பிரதேச மாநில பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான ‘அரசியல்சாசன (பழங்குடியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2018’-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
02 JAN 2019 5:45PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல்சாசன (பழங்குடியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2018 என்ற பெயரிலான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்காக அரசியல்சாசன (பழங்குடியினர்) ஆணை 1950-ல் சில திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
அருணாச்சலப்பிரதேச பழங்குடியினர் பட்டியலில் கீழ்க்காணும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன:
- வரிசை எண் 1-ல் உள்ள ‘அபோர்’ என்ற வார்த்தையை நீக்குதல், இது வரிசை எண் 16-ல் ‘ஆதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- வரிசை எண் 6-ல் ‘கம்ப்தி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘தாய் கம்ப்தி’ என்று மாற்றியமைத்தல்.
- வரிசை எண் 8-ல், ‘மிஷ்மி-கமன்’ (மிஜு மிஷ்மி), இடு (மிஷ்மி) மற்றும் தராவோன் (திகாரு மிஷ்மி) ஆகியவற்றை சேர்த்தல்.
- வரிசை எண் 9-ல் ‘மொம்பா’-வுக்கு மாற்றாக மொன்பா, மெம்பா, சர்டங், சஜோலோங் (மிஜி) ஆகியவற்றை சேர்த்தல்.
- வரிசை எண் 10-ல் ஏதாவது நாகா பழங்குடியினர் என்பதற்கு மாற்றாக, ‘நோக்டே’, ‘தங்சா’, ‘வான்சோ’ ஆகியவற்றை சேர்த்தல்.
திட்டமிடப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படைகளாவன:
- அபோர் என்பதை நீக்குதல் – இரட்டை வார்த்தையை அகற்றுதல்
- காம்ப்தி-யை மாற்றுதல் – ‘காம்ப்தி’ என்ற பழங்குடியினர் கிடையாது.
- மிஷ்மி-கமன், இடு, தராவோன் ஆகியவற்றை சேர்த்தல் – ஏற்கனவே உள்ள பட்டியலில் ‘மிஷ்மி’ என்பது மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரில் எந்தவொரு சமூகமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மொன்பா, மெம்பா, சர்டங், வான்சோ ஆகியவற்றை சேர்த்தல் – ஏற்கனவே உள்ள பட்டியலில் “ஏதாவது நாகா பழங்குடியினர்” என்றே உள்ளது. இது மாநிலத்தில் நாகா பழங்குடியினர் மட்டுமே இருப்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
- நோக்டே, தங்சா, வான்சோ ஆகியவற்றை சேர்த்தல் - ஏற்கனவே உள்ள பட்டியலில் “ஏதாவது நாகா பழங்குடியினர்” என்றே உள்ளது. இது மாநிலத்தில் நாகா பழங்குடியினர் மட்டுமே இருப்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
இந்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டபிறகு, அருணாச்சலப்பிரதேச பழங்குடியினர் குறித்த திருத்தியமைக்கப்பட்ட புதிய பட்டியலில் உள்ள சமூகத்தின் உறுப்பினர்களும், பழங்குடியினருக்காக அரசு ஏற்கனவே செயல்படுத்திவரும் திட்டங்களின் பயன்களைப் பெற முடியும். இதன்படி, உயர்கல்விக்கான ஊக்கத்தொகை, தேசிய வெளிநாடுவாழ் ஊக்கத்தொகை, தேசிய ஊக்கத்தொகை, உயர்வகுப்பு கல்வி, தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திலிருந்து கிடைக்கும் சலுகை கடன்கள், பழங்குடியின சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான விடுதிகள் போன்ற திட்டங்களின் பயன்களைப் பெற முடியும். அதோடு, அரசு பணியிலும், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசு கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைப் பெற முடியும்.
****
(Release ID: 1558383)
Visitor Counter : 211